»   »  ஃபேன்- விமர்சனம்

ஃபேன்- விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
3.5/5
-எஸ் ஷங்கர்

நடிப்பு : ஷாரூக்கான் (ஹீரோயின் கிடையாது.. ஆல் இன் ஆல் ஷாரூக்தான்!)

இசை: விஷால் சேகர், ஆன்ட்ரியா கெரா

தயாரிப்பு: யாஷ்ராஜ் பிலிம்ஸ்

இயக்கம்: மணீஷ் ஷர்மா

வணிக ரீதியிலான சினிமாவை ஆட்சி செய்பவர்களை பொதுவாகவே நல்ல சினிமா எடுக்கத் தெரியாதவர்கள் என்று ஒதுக்குவது விமர்சகர்களின் (சில) நோய். அதைப் பற்றிக் கவலைப்படாத பெரும் கலைஞர்களில் ஒருவர் ஷாரூக்கான். அவரால் ஒரு 'டான்' ஆக கலக்கவும் முடியும்... மை நேம் ஈஸ் கானையும் தர முடியும்... ஒரு வீர்ஸராவாக வாழ்ந்து காட்டவும் முடியும்... கோச் கபீர் கானாக வந்து ரசிகனை உலுக்கவும் முடியும்!

ஒரு ரசிகன் தன் ஆதர்ஸ சினிமா கதாநாயகன் மீது வைத்திருக்கும் அபிமானம்... அந்த நாயகன் தன் ரசிகன் மீது வைத்திருக்கும் கருத்து.. இந்த இரண்டுக்கும் இடையிலான உளவியல் போராட்டம்தான் ஷாரூக்கானின் ஃபேன்.

Fan - A fantastic SRK show!

டெல்லியில் ஒரு சைபர் கபே நடத்தி வரும் கவுரவ் (ஷாரூக் 1), சினிமா சூப்பர் ஸ்டார் ஆர்யன் கன்னாவின் (ஷாரூக் 2) வெறித்தனமான ரசிகன். ஒரு ஸ்டேஜ் ஷோவில் தன் அபிமான நாயகன் போல வேடம் போட்டு வெற்றிக் கோப்பையுடன் ஆர்யன் கன்னாவின் பிறந்த நாளன்று சந்திக்கச் செல்கிறான்.

ஜஸ்ட் அரை மணிநேரம் தன் ரசிகர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு தன் வீட்டுக்குள் அடைந்துவிடும் ஆர்யன் கன்னாவைப் பார்ப்பது கஷ்டம் என்று தெரிகிறது. எனவே தன் அபிமான நாயகனைச் சந்திக்க ஒரு ஏடாகூடம் செய்து போலீசில் மாட்டுகிறான் கவுரவ். அதற்கும் ஆர்யன்தான் காரணம்.

பின்னர், ரகசியமாக தன் ரசிகனைச் சந்திக்கிறான் ஹீரோ ஆர்யன்.

அங்கு நடக்கும் இந்த உரையாடல்தான் கதையின் மீதிக்கான லீட்...

ஆர்யன்: 'ஏன் இப்படிச் செய்தாய்?'

கவுரவ்: 'நான் உங்களின் உண்மையான, வெறித்தனமான ரசிகன். எனக்காக ஒரு ஐந்து நிமிடம் செலவிட முடியாதா?'

ஆர்யன்: ஹேய்.. இது என் வாழ்க்கை. இது என்னுடைய நேரம். ஜஸ்ட் 5 நொடியைக் கூட யாருக்கும் தர முடியாது! நீ உன் குடும்பத்தைப் பார். அதுதான் முக்கியம்.

Fan - A fantastic SRK show!

-இந்த சந்திப்பும் உரையாடலும் கவுரவின் மனதில் இருந்த ஆர்யனின் பிம்பத்தை அடித்து நொறுக்க, அடுத்த தன் ஆதர்ச ஹீரோவை தன் பின்னால் அலைய வைக்க முடிவெடுக்கிறான்.

அப்படியே அலைய நேர்கிறது ஹீரோ ஆர்யனுக்கு. ரசிகன் என்னென்ன விதண்டாவாதங்கள் செய்கிறான்.. ஆர்யன் அதை எப்படிச் சமாளிக்கிறான் என்பதெல்லாம் சற்று பொறுமையைச் சோதிக்கும் மீது.

கிட்டத்தட்ட இரண்டேகால் மணி நேரப் படமாக வந்திருக்கும் இந்தப் படம், பார்ப்பவர் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் அபாரம்!

ஷாரூக்கானுக்கு இந்த ஆண்டுக்கான தேசிய விருது நிச்சயம் என்று சொல்ல வைக்கும் அளவுக்கு மனிதர் நின்று விளையாடுகிறார் இரட்டை வேடங்களில். நாம் பார்ப்பது பாஸிகர் ஷாரூக்கையா என்று கேட்க வைக்கிறது அவரது இளமைத் தோற்றம்.

ஒரு முதல் நிலை சினிமா நாயகனின் 'உள்புறம்' என்னவென்பதை அத்தனை தைரியமாக வெளிப்படுத்த ஷாரூக் ஒருவரால்தான் முடியும். உதாரணம்.. திருமண வீட்டில் ஆட அவர் பணம் கேட்கும் காட்சி.

இந்தப் படத்தில் ஒவ்வொரு ப்ரேமிலும் ஷாரூக்கானின் ஆதிக்கம்தான். இனி ஒருவர் பிறந்து வர வேண்டும், இப்படி தைரியமாக தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்ளும் ஒரு வேடத்தில் நடிக்க!

ஹீரோயின், பாடல்கள் இரண்டுமே இல்லை இந்தப் படத்தில். ஆனால், ஏன் அவை இல்லை என்ற கேள்வி எந்த இடத்திலும் எழவில்லை என்பதுதான் திரைக்கதையின் பலம். பலவீனம், இரண்டாம் பாதி மற்றும் அந்த சேஸிங். இந்த மாதிரி சேஸிங் கிட்டத்தட்ட 'அவுட் ஆஃப் ட்ரென்ட்' ஆகிவிட்டதே!

மனு ஆனந்த் ஒளிப்பதிவில் குரேஷியா, லண்டன் லொகேஷன்கள் மனதைக் கவர்கின்றன. ஆனால் ஆன்ட்ரியா கெரேவின் பின்னணி இசை காட்சிகளை தூக்கி நிறுத்த உதவவில்லை. ஷாரூக்கான் என்ற ஒற்றை ஆள் இந்தக் காட்சிகளைச் சுமந்து செல்கிறார்.

குறைகள் இல்லாத படைப்புகளே கிடையாது. ஆனால் எந்த மாதிரி குறைகள் என்பதுதான் முக்கியம். ஃபேனில் நமக்குத் தெரியும் குறைகள், போகிற போக்கில் கடந்து போகக் கூடியவை. லட்சியப்படுத்தத் தேவையில்லை.

ஒவ்வொரு நடிகரின் ரசிகனுக்கும் இந்தப் படத்தை அர்ப்பணித்திருக்கிறார் ஷாரூக்கான். அவசியம் பார்க்க வேண்டிய படம்!

English summary
Fan is a complete Shahrukh Khan's fantastic show, in which the multi talented actor proves again that he can green light roles completely out of his comfort zone, and deliver. A must watch movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil