For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Fatherhood review: முந்தானை முடிச்சு பாக்யராஜை பீட் செய்கிறதா "ஃபாதர்ஹுட்"?.. விமர்சனம்

  |

  சிங்கள் மதர்.. நமது சமூகத்தில் அதிகரிக்கும் ஒரு சமுதாயம் இது. ஒற்றைத் தாய்மார்களின் சிரமங்கள், அவர்களுக்கான நெருக்கடிகள், அவர்கள் சந்திக்கும் பிரச்சினகள், சவால்கள்.. நாம் நிறையக் கேள்விப்பட்டிருப்போம், பார்த்திருப்போம்.. பலர் அனுபவித்திருக்கவும் கூடும். ஆனால் "சிங்கிள் ஃபாதர்"?.. இவர்கள் அதிகம் இருப்பதில்லை. காரணம் நமது "சோ கால்ட் சமூகம்" சிங்கிள் மதர்களுக்குக் காட்டும் பரிவை விட சிங்கிள் ஃபாதர்களுக்கு கூடுதல் பச்சாதாபத்தைக் காட்டி அவர்களை "சிங்கிளாக" இருக்க விடுவதில்லை. "உனக்காக இல்லாட்டியும், அந்தப் பச்சக் குழந்தைக்காகவாச்சும்" என்று கூறி கல்யாணம் செய்து வைத்து விடும்.

  Fatherhood Hollywood movie review

  இப்படிப்பட்ட ஒரு சிங்கிள் ஃபாதர் குறித்த கதைதான் "ஃபாதர்ஹுட்".. ஹாலிவுட் படம். நெட்பிளிக்ஸில் நேற்று வெளியாகி கலவையான கருத்துக்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.

  மாத்யூ லோஜெலின் என்பவர் தனது நிஜக் கதையை வைத்து எழுதிய Two Kisses for Maddy: A Memoir of Loss and Love என்ற நூலைத் தழுவி உருவாக்கப்பட்ட படம்தான் ஃபாதர்ஹுட். இந்த மொத்தப் படத்தையும் பார்த்தபோது ஒரு குழந்தையை வளர்ப்பதற்கு ஏன் இவர் இவ்வளவு சிரமப்பட்டார் என்றுதான் நமக்கு தோன்றுகிறது. அதாவது சினிமாவில் சித்தரிக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்தபோது அப்படித்தான் எண்ணத் தோன்றியது. நிஜ தந்தையான மாத்யூ கூட இவ்வளவு சிரமப்பட்டிருக்க மாட்டாரோ என்றும் எண்ணத் தோன்றியது. அதில் கொஞ்சம் போல சறுக்கியுள்ளனர்.

  Fatherhood Hollywood movie review

  இனி படம்...

  ஹீரோ மாத்யூ லோஜெலின். அவரது மனைவி லிஸ், பிரசவத்தின்போது, குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விட்டு மரணமடைந்து விடுகிறார். கைக்குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் விழிக்கிறார் மாத்யூ. அவரது மாமியாரும், அம்மாவும், நீ பேசாமல் எங்களுடன் வந்து இருந்து விடு அல்லது குழந்தையை மட்டுமாவது எங்களிடம் விட்டு விடு. உன்னால் வளர்க்க முடியாது என்று கூறுகின்றனர்

  ஆனால் முடியாது, என்னால் இந்த வேலையை விட்டு விட்டு உங்களுடன் வர முடியாது, எனது மகளை நானே வளர்க்கப் போகிறேன் என்று கூறி வளர்க்க ஆரம்பிக்கிறார். குழந்தை வளர்ப்பில் உள்ள சிரமங்கள், தந்தையாக படும் அவஸ்தை, தாய் என்று ஒருவர் இல்லாவிட்டால் ஏற்படும் குழப்பங்கள், மனைவி இல்லாத தனிமை, அடுத்தடுத்து வரும் சவால்கள்.. இத்யாதி இத்யாதி.. இவற்றை மாத்யூ எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை.

  Fatherhood Hollywood movie review

  முந்தானை முடிச்சு பாக்யராஜை நினைச்சுப் பாருங்க.. அவர் பட்ட கஷ்டத்தை விட நம்ம ஹீரோ மாத்யூ சந்திக்கும் கஷ்டங்கள் நூற்றில் ஒரு பங்குதான். பாக்யராஜ், சமைப்பார், குழந்தைக்கு பால் காய்ச்சி புட்டியில் அடைத்து அழகாக பாட்டுப் பாடி கொடுப்பார், தூரியில் குழந்தையை ஆட்டி தூங்க வைப்பார், வகுப்பில் பாடம் எடுப்பார்.. இப்படி எல்லா பிரச்சினைகளையும் "லெப்ட் ஹேன்டில்" அழகாக டீல் செய்வார். ஆனால் இங்கோ மாத்யூ அடிக்கடி டென்ஷன் ஆகிறார்.

  குழந்தை அழும்போது எதற்காக அது அழுகிறது என்று கூட அவரால் கண்டுபிடிக்க முடிவதில்லை. தூக்கிக் கொண்டு குழந்தை பராமரிப்பு மையத்திற்குப் போய் என்ன பண்ணலாம்னு ஐடியா கேட்கிறார். நண்பர்களுடன் கூடிப் பேசுகிறார். என்னென்னவோ செய்து பார்க்கிறார். குழம்புகிறார், புலம்புகிறார்.. பதட்டமாகிறார். இப்படியாக கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு குழந்தையும் ஒரு வழியாக சிறுமியாக வளர்ந்து விடுகிறது.

  மகளும் அப்பாவுமாக வாழ்க்கை போய்க் கொண்டிருக்கும்போது திடீரென ஒரு பெண்ணின் குறுக்கீடு வருகிறது. மாத்யூ தனிமையில் தவிப்பதைப் பார்த்த அவரது நண்பன் ஆஸ்கர், ஒரு பெண்ணை அறிமுகப்படுத்துகிறான். அவரது பெயரும் லிஸ்தான்.. பெயரால் ஈர்க்கப்படும் மாத்யூ, அந்தப் பெண்ணுடன் நெருங்குகிறார்.. ஆனால் குழந்தைக்கு தாயின் நினைவு வாட்டுகிறது.. புதிய பெண்ணை மனதில் ஏற்றிக் கொள்ள அவளுக்கு மனதில்லை. அம்மாவைப் பெற்ற பாட்டி வீட்டுக்கு போகிறாள் சிறுமி.. அங்கிருந்து அப்பாவுடன் வர மறுக்கிறாள்.. அம்மா இருந்த இந்த வீட்டிலேயே இருக்கப் போகிறேன் என்று கூறி விடுகிறாள்.

  மகளை விட்டு விட்டு கண்ணீருடன் தனது இருப்பிடம் திரும்பும் மாத்யூவுக்கு மகளைப் பிரிந்து இருக்க முடியவில்லை. மகளுக்கும் அதே நிலைதான்.. மீண்டும் இருவரும் இணைகிறார்கள்.. அவர்களுடன் மாத்யூ விரும்பிய லிஸ்ஸும் கை கோர்க்கிறார்.. படம் முடிகிறது.

  மாத்யூ (கெவின் ஹார்ட்) வின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. லாஜிக் ஓட்டைகள் நிறைய இருக்கிறது. அதைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் படம் ரசிக்க வைக்கிறது. மாத்யூ, கெவின் அடிப்படையில் நல்ல ஸ்டாண்ட் அப் காமெடியன். அது இவரது நடிப்புக்கு நிறைய கை கொடுத்துள்ளது. மகளாக வரும் மெலோடி ஹர்ட் க்யூட்டாக நடித்திருக்கிறார். தாயைப் பிரிந்த ஏக்கம், தாயின் நினைவுகள் தன்னை வாட்டும்போது அவள் வெளிப்படுத்தும் உணர்வுகள், "டேடி எனக்கு கிஸ் கொடுக்காம போறீங்க" என்று அப்பாவிடம் சொல்லும்போது அவர் தனது பொறுப்பை மறந்து போனதை சுட்டிக் காட்டுவது என்று கலக்கியிருக்கிறார் இந்த குட்டி நடிகை.

  இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு கதாபாத்திரம் யார் என்றால் மரியான் கேரக்டரில் வரும் ஆல்பிரே உட்டார்ட். "க்ராஸ் கிரீக்" படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நடிகை இவர். ரொம்ப அழகாக இதில் அவர் மாத்யூவின் மாமியார் வேடத்தில் நடித்துள்ளார். மகளைப் பிரிந்து மருமகன் கஷ்டப்படுவதை பார்த்து, குழந்தையை வளர்க்க உள்ள சிரமங்களைக் குறிப்பிட்டு பேசாமல் என்னிடம் விட்டு விடு, நான் வளர்க்கிறேன் உன் மகளை என்று கூறுவதாக இருக்கட்டும், தொடர்ந்து மருமகனை வழிநடத்தி, அவரை கண்காணித்து குழந்தை மீது பரிவு காட்டும் அன்பாக இருக்கட்டும்.. இயல்பாக செய்துள்ளார் இந்த அனுபவம் வாய்ந்த நடிகை.

  இந்த படத்தில் குறிப்பிட்டு ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும்.. உன் குழந்தை கஷ்டப்படுகிறாள்.. அதற்காகவாச்சும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ என்று யாருமே மாத்யூவுக்கு அட்வைஸ் செய்யவில்லை. அவரது நெருங்கிய நண்பர்கள் கூட அதை சொல்ல மாட்டார்கள்.. இதுவே நம்ம ஊராக இருந்திருந்தால் பார்க்கும் ஒவ்வொருவரும் இதையேச் சொல்லி சொல்லி அந்த நபருக்கு கல்யாணம் செய்து வைக்காமல் ஓய மாட்டார்கள் என்ற எண்ணம் படத்தைப் பார்த்தபோது நமக்குள் ஓடியது.

  அழகான கதை.. சிம்பிளாக சொல்லியுள்ளனர்.. இன்னும் கொஞ்சம் எமோஷன்ஸ் இருந்திருக்கலாம் என்று எண்ண வைக்கிறது.. ஆனால் வழக்கமான ஆங்கிலப் படங்கள் போல இல்லாமல் வித்தியாசமான ஃபீல் கிடைக்கிறது இப்படத்தில். பார்த்து ரசிக்கலாம்.

  English summary
  Fatherhood Hollywood movie review
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X