»   »  இறைவி விமர்சனம்

இறைவி விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

-எஸ் ஷங்கர்

Rating:
3.0/5

நடிப்பு: எஸ்ஜே சூர்யா, விஜய் சேதுபதி, அஞ்சலி, கமலினி முகர்ஜி, பூஜா, ராதாரவி, பாபி சிம்ஹா

ஒளிப்பதிவு: செல்வகுமார் விஜயன்


இசை: சந்தோஷ் நாராயணன்


தயாரிப்பு: சிவி குமார், ஞானவேல் ராஜா, அபினேஷ்


இயக்கம்: கார்த்திக் சுப்பராஜ்தனது ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இம்மியளவு கூடத் தொடர்பே இருக்கக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். யாரும் தொடத் தயங்கும் கதையை, பிரமாதமான நடிகர்களைக் கொண்டு வித்தியாசமாகத் தர முயன்றிருக்கிறார், இறைவியாக.


ஆண்களுக்கு என்றல்ல... மனித சமூகத்துக்கே ஆதாரம் பெண்தான். அந்தப் பெண்ணை ஆண்கள் அலைக்கழிப்பதும், அழ வைப்பதும், அனாதரவாகத் தவிக்கவிடுவதும் படிக்காத, படித்த, ஏழை பணக்கார வித்தியாசமின்றி இன்னமும் தொடர்கிறது.


Iraivi Review

இப்படி ஆண்களால் அலைக்கழிக்கப்படும் சில பெண்களின் கதை(கள்)தான் இறைவி.வெற்றி பெறாத திரை முயற்சிகளால் குடியே கதியாகக் கிடக்கும் இயக்குநர் எஸ்ஜே சூர்யாவின் மனைவி கமலினி...


அந்த சூர்யாவின் நட்புக்காக ஆத்திரத்தில் உணர்ச்சிவசப்பட்டு, ஒரு கொலையைச் செய்து சிறைக்குப் போகும் விஜய் சேதுபதியால் நிர்க்கதியாகத் தவிக்கும் அஞ்சலி....


கைம்பெண்ணாக தனக்கான வாழ்க்கையை தானே அமைத்துக் கொள்ளப் போராடும் பூஜா திவாரியா..


கணவனின் ஆதிக்கம் தந்த அழுத்தத்தால் கோமாவுக்கே போகும் வடிவுக்கரசி...


இந்த இறைவிகளைச் சுற்றிச் சுழல்கிறது கதை. கதையின் மையம் இந்தப் பெண்கள்தான் என்றாலும், பெரும் பகுதி காட்சிகளை ஆக்கிரமித்திருப்பவர்கள் ஆண்கள்தான் என்பது நிஜத்தைப் போலவே திரையிலும் தொடரும் முரண்.


கோடம்பாக்கமே பேய் மோகத்திலும், அரைவேக்காட்டு நகைச்சுவை வியாபாரத்திலும் விழுந்து கிடக்க, என்வழி தனிவழி என புதிய முயற்சியைத் தொடர்கிறார் கார்த்திக் சுப்பராஜ்.


அதற்காக ஒரு ஷொட்டு... ஆனால் ஒரு குட்டும் வைக்க வேண்டும். எங்கு முடிக்க வேண்டுமோ அங்கே முடிக்காமல் ஜவ்வாக காட்சிகளை இழுத்ததற்காக!


திரைக்கதைக்கான பிள்ளையார் சுழி போடும்போதே இந்த சினிமா டைரக்டர் வேடம் எஸ் ஜே சூர்யாவுக்குத்தான் என முடிவு செய்துவிட்டு எழுதியிருக்கிறார் கார்த்திக். அந்த நம்பிக்கையை அப்படிக் காப்பாற்றியிருக்கிறார் சூர்யா. எப்பேர்ப்பட்ட நடிகன்... தன் பலம் தனக்கே தெரியாமல் கண்டபடி நடித்து வந்திருக்கிறார் இந்த மனிதர்!


உண்மையான குடிபோதைக்கும், குடித்த மாதிரி நடிக்கும் போதைக்குமான வித்தியாசத்தை இத்தனை நுணுக்கமாக எந்த நடிகரும் வெளிப்படுத்தியதில்லை.


Iraivi Review

விஜய் சேதுபதிக்கு வழக்கமான தோற்றம். வழக்கம்போலவே இயல்பான நடிப்புதான் என்றாலும், கொஞ்சம் வெரைட்டி காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. பெற்ற குழந்தையே தன்னை அங்கிள் என அழைக்கும் காட்சியில் ஒரு வேதனையைக் காட்டுவாரே.. க்ளாஸ்!


கற்றது தமிழ், அங்காடித் தெரு-க்குப் பிறகு ஒரு அழுத்தமான பாத்திரம் அஞ்சலிக்கு. பொன்னியாக பிரமாதப்படுத்தியிருக்கிறார்.


Iraivi Review

கொஞ்சம் சதைப் போட்ட கமலினி முகர்ஜி, பூஜா திவாரியா, ராதாரவி, வடிவுக்கரசி என அத்தனைப் பேரும் தேர்ந்த நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.


செல்வகுமார் விஜயன் ஒளிப்பதிவில் மழைக் காட்சிகளில் மனசு சிலிர்க்கிறது.


சந்தோஷ் நாராயணன் இசையில் அவரே பாடும் ஒரு பாடல் உள்பட இரண்டு பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை வசனங்களைக் கேட்க முடியாமல் படுத்துகிறது.


Iraivi Review

ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து உருவாக்கிய கார்த்திக் சுப்பராஜ், அதை கச்சிதமாகக் கோர்ப்பதில் தடுமாறியிருக்கிறார். ஒரு காட்சி கச்சிதமாக முடியும்போது, அடுத்த காட்சி அந்த வேகத்தை எடுத்துச் செல்ல முடியாமல் நொண்டுவதுதான் இந்தப் படத்தின் மைனஸ். திணிக்கப்பட்ட க்ளைமாக்ஸ் மாதிரி ஒரு உணர்வு வருவதையும் குறிப்பிட்டாக வேண்டும். வசனங்களில் ஏன் இத்தனை ஆபாசம்.. வன்முறை.. தவிர்த்திருக்கலாம்!


ஆனால் ஒரு படைப்பாளியாக கார்த்திக் சுப்பராஜின் முயற்சியில் பாசாங்கில்லை. நிச்சயம் ஒரு வேறுபட்ட படைப்பைத் தரவேண்டும் என்ற முனைப்பு படம் முழுக்கவே. அந்த சின்சியர் முனைப்புக்காகவே ஒரு முறை பார்க்க வேண்டிய படைப்பு இறைவி!

English summary
Amidst ghost stories and half backed comedy flicks in Kollywood, Karthik Subbaraj's Iraivi is a different attempt with excellent performers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil