»   »  ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை - விமர்சனம்

ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை - விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: சர்வானந்த், நித்யா மேனன், சந்தானம், பிரகாஷ் ராஜ், ஜெய்பிரகாஷ்

ஒளிப்பதிவு: சித்தார்த் ராமசாமி

இசை: ஜிவி பிரகாஷ்

தயாரிப்பு: ட்ரீம் தியேட்டர்ஸ்

எழுத்து - இயக்கம்: சேரன்

தனியார் நிறுவனத்தில் வேலை... மீதி நேரத்தில் பேஸ்புக் அரட்டை, விடுமுறைகளில் நண்பர்களுடன் பைக்கில் ஊர் சுற்றல் என சராசரி இளைஞனாகத் திரியும் சர்வானந்த், ஒரு கட்டத்தில் பொறுப்புணர்வு அதிகரிக்க, சொந்தமாக தொழில தொடங்கும் முயற்சியில் இறங்குகிறான்.

தன் நண்பர்கள் சந்தானம், நித்யா மேனனுடன் கூட்டு சேர்ந்து முதலில் ஒரு தொழிலைத் தொடங்க, அது வெற்றியடைகிறது. அடுத்தடுத்து புதுப்புது தொழில்களில் கால் பதிக்கிறான். தொட்டதெல்லாம் வெற்றி என்பது மாதிரி தொடர்ந்து மூன்று புராஜெக்டுகளில் வெற்றி பெறுகிறான்.

JK Enum Nanbanin Vaazhkai Review

அடுத்து யாரும் எதிர்பாராத மாதிரி ஒரு சிக்கல் வருகிறது சர்வானந்துக்கு. கண்காணாத தேசத்துக்கு விமானம் ஏறுகிறான்.

ஏன் செல்கிறான்... திரும்பி வந்தானா? என்பதெல்லாம் டிவிடி வாங்கிப் பார்த்துக் கொள்ளுங்கள்.

முதல் முறையாக டிவிடியிலும், டிடிஎச்சிலும் வெளியாகும் படம் என்ற அறிவிப்போடு வெளியாகியுள்ளது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை.

[ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை படங்கள்]

சற்று சீரியல்தனம் தெரிந்தாலும், சேரன் தனது பாணியிலிருந்து விலகாமல், தரமாகவே இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். ரியல் எஸ்டேட், அதைச் சார்ந்த தொழில்கள் என்று போகும் கதையில், காட்சிகளை மிக வண்ணமயமாகக் கோர்த்திருப்பது கண்களுக்கு விருந்து. நமக்கும் இப்படி ஒரு வீடு கிடைக்காதா என பார்வையாளரை ஏங்க வைக்கும் டிசைன்கள்.

இந்தக் கதைக்கு சர்வானந்த் மிகப் பொருத்தமான தேர்வு. ரொம்பப் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பரபரவென அலையும் பருவத்திலிருந்து, மெல்ல பொறுப்புணர்ந்து பணம் சேர்க்க போராடும் கட்டத்துக்கு அவர் மாறும் காட்சிகளில் அத்தனை இயல்பு.

JK Enum Nanbanin Vaazhkai Review

நித்யா மேனன் நடிப்பில் ரொம்பவே செயற்கைத்தனம். நாயகி விஷயத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால், காதல் இருந்தும் இல்லாத இந்தக் கதை மேலும் சுவாரஸ்யமானதாக இருந்திருக்கும்.

சந்தானத்தின் நகைச்சுவையில் வழக்கமான ஆர்ப்பாட்டம், கலாட்டா ஏதுமில்லை. ஆனாலும் சில காட்சிகளில் உதடுகள் லேசாக விரிகின்றன.

JK Enum Nanbanin Vaazhkai Review

பிரகாஷ் ராஜ், ஜெயப்ரகாஷ், மனோபாலா மற்றும் நண்பர்களாக வருபவர்கள் என அனைவருமே படத்தின் நடிகர்களாக இல்லாமல், நிஜ பாத்திரங்களாகவே மாறியிருந்தார்கள்.

ஜிவி பிரகாஷின் இசை சேரனின் படத்துக்கு எந்த வகையிலும் உதவவில்லை. ஆனால் சித்தார்த்தின் ஒளிப்பதிவு அந்தக் குறையை மறக்க வைக்கிறது.

JK Enum Nanbanin Vaazhkai Review

பார்த்துப் பார்த்து காட்சிகளை வடிவமைத்ததில் காட்டிய சிரத்தையை, சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பதிலும் காட்டியிருக்கலாம் சேரன். ஏற்கெனவே 180 என்ற பெயரில் வந்த படத்தின் கதை கூட கிட்டத்தட்ட இதே மாதிரிதான். அதிலும் இதே நித்யா மேனன்தான் நாயகி!

தியேட்டர்களுக்குப் போய் ஏக சிரமங்களுக்கிடையில் பார்க்காமல், இருந்த இடத்திலேயே ஒரு டிவிடியில் பார்த்துவிடுவதால், பலருக்கு இந்தப் படத்தின் குறைகள் கூட பெரிதாகத் தெரியாது. அதுதான் சி2எச் வெற்றி.

JK Enum Nanbanin Vaazhkai Review

அதற்காக 'ஏப்ப சாப்பை'யான படங்களை டிவிடியாகத் தராமல், தரத்தில் கவனம் செலுத்தினால் சேரனின் இந்த முயற்சி திரையுலகுக்கு புதிய பாதையாகவே மாறினாலும் ஆச்சர்யமில்லை!

English summary
Cheran's JK Enum Nanbanin Vaazhkai is a decent family entertainer and worth to watch.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil