»   »  காற்று வெளியிடை – 'மணி சார்' என்னும் பேட்டைக்காரன்!!

காற்று வெளியிடை – 'மணி சார்' என்னும் பேட்டைக்காரன்!!

Posted By: Muthu siva
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை மணி சாருக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. ஒரு மனிதரால் எப்படி என்பதுகள் முதல் இப்பொழுது வரை மக்களின் ரசனையைப் புரிந்துகொண்டு திரைப்படங்களைக் கொடுக்க முடிகிறது? எப்படி இப்படி updated ஆக இருக்கிறார் என்பதெல்லாம் மிகவும் ஆச்சர்யமூட்டும் விஷயங்கள். அவரை விடுங்கள். உங்களின் சினிமா ரசனை எந்த அளவு உள்ளது? சமூக மாற்றங்களை நீங்கள் எந்த அளவு உள் வாங்கிக் கொள்கிறீர்கள்? ஒவ்வொரு காட்சியிலும் வைக்கப்படும் குறியீடுகள் உங்களுக்கு புரிகின்றனவா இல்லையா? என்பதையெல்லாம் சோதித்துப் பார்க்க வேண்டுமானால் நீங்கள் முதலில் இந்த காற்று வெளியிடையைப் பார்க்க வேண்டும். ஒரு சினிமா எப்படி எடுக்கப்பட வேண்டும் என இன்றைய இயக்குனர்களுக்கு பாடம் கற்பிக்கும் விதமாகவே இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார்.

என்ன? பக்குன்னு தூக்கிப் போடுதா? படம் நல்லாருந்தா இப்டியெல்லாம் எழுதலாம்னு இருந்தேன். ஆனா பாருங்க அப்படிப்பட்ட கெட்ட சம்பவங்கள் எதுவும் நடக்கல.


Kaatru Veliyidai Audience review

தமிழ் சினிமாவில் இதுபோன்ற அரிய காவியங்கள் வாய்ப்பது மிகவும் அரிது. ஒவ்வொரு ஃப்ரேமையும் செதில் செதிலாக கருக்கி.... ச்சே... செதுக்கி உருவாக்கப்பட்ட இந்தக் காவியத்தை ஒரே ஒரு வார்த்தையில் நன்றாக இல்லை என்று கூற மக்களுக்கு எப்படித்தான் மனது வருகின்றது என்று தெரியவில்லை. அதனால ஒரு வார்த்தையில சொல்லாம ஒரு நாலஞ்சி பாராவுல கழுவி ஊத்துவோம் வாங்க.


மணி ரத்னத்தைப் பற்றிய விமர்சன்ங்கள் எதையாவது முன் வச்சாலே அவரது ரசிகர்கள் (?) 'அவரு நாயகன்லாம் எப்டி எடுத்துருந்தாரு தெரியும்ல... தளபதியெல்லாம் மாஸ்டர் பீஸ் தெரியும்ல'ன்னு ஆரமிச்சிருவாய்ங்க. யாருப்பா இல்லைன்னு சொன்னா? வேணும்னா அந்தப் படத்தையெல்லாம் டிவில போடும்போது பாத்துட்டு அமைதியா இருங்க. இந்தப் படத்துக்கெல்லாம் ஏன்யா கொடை புடிக்கிறீங்க? நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி எல்லாத்துலயும் மொக்கை வெறி ஊறிப்போன ஒருத்தராலதான் இவ்வளவு பெரிய மொக்கைய எடுக்க முடியும்.


Kaatru Veliyidai Audience review

இந்த மணி சாரும் சரி கெளதம் மேனனும் சரி.. யாருக்காக படம் எடுக்குறாங்கங்குறதுல பெரிய சந்தேகமே இருக்கு. தமிழ் இயக்குநர்கள். தமிழ்லதான் படம் எடுக்குறாங்க. ஆனா பாருங்க படத்துல வர்ற கேரக்டர்கள் எதுவுமே தமிழ்நாட்டுல இருக்கவங்க மாதிரியோ தமிழ் கலாச்சாரத்தோட ஒன்றியவர்களாகவோ இருக்காது. அதயெல்லாம் விடுங்க... படத்துல பேசுற வசனங்கள் ஒண்ணாவது நம்மாளுங்க பேசுற மாதிரி இருக்கா?


இந்த trilingual படம்ன்னு கேள்விப்பட்டுருப்பீங்க. உண்மையான ட்ரை லிங்குவல் படம்னா அது இதுதான். இந்த ஒரே படத்துலயே மூணு லாங்குவேஜ் பேசுறாய்ங்க. அதுல தமிழ் எப்பயாச்சும் அப்பப்ப வந்துட்டு போகுது. ஒரு புள்ளை கார்த்தியப் பாத்து கேக்குது 'When we are gonna have our முதல் பிள்ளை?' ன்னு. ஏன் ஆத்தா ஒரு வார்த்தைய மட்டும் தமிழ்ல பேசுற? அதயும் இங்கிலீஷ்லயே கேட்டுருக்கலாமே?


உள்ள என்ன பேசுறாங்களோ.. ஆனா படத்தோட பேரும், பாடல்களும் தூய தமிழ்ல வச்சிடுறாய்ங்க. மணி சாருக்கு ஒரு வைரமுத்து... கெளதமுக்கு ஒரு தாமரை. இத மட்டும் ஏன் தமிழ்ல வைக்கிறீங்க? ஊர ஏமாத்தவா? 'உள்ளே உங்களது ஆங்கிலப் பூர்வீகமே இருக்கலாம். ஆனால் தலைப்பு தமிழில்தான் இருக்கவேண்டும்' இம்சை அரசன்ல சொன்னத கரெக்ட்டா ஃபாலோ பண்றது இவருதான்.


ஒரு காட்சி கூட இயல்பாவே இல்லை. ரொம்ப ஆர்டிஃபிஷியல். அதுவும் வசனம் பேசுனா ஒண்ணு இங்கிலீஷ்ல பேசுறானுங்க. தமிழ்ல பேசச் சொன்னா படக்குன்னு, 'நெறித்த திரைகடலில் நின்முகம் கண்டேன்' ன்னு கவிதையில இறங்கிடுறாங்க.


Kaatru Veliyidai Audience review

கார்த்தியும், ஹீரோயின் அதிதீயும் பேசிக்கிறாங்க.. 'இனிமே நம்ம மீட் பண்ணக்கூடாதுன்னு நினைக்கிறேன்... இது டேஞ்சரஸ்னு தோணுது....' கொஞ்சம் இருங்க.. இத நா எங்கயோ கேட்டுருக்கேனே.. ஆங்... இது அதுல்ல.... 'நா உன்ன லவ் பன்னல... நீ அழ்கா இருக்கேன்னு நினைக்கல... ஆனா இதெல்லாம் நடந்துருமோன்னு பய்மா இருக்கு...' எத்தனை தடவ?


படத்துல ரெண்டு பாவப்பட்ட ஜீவன்கள்ல ஒண்ணு கார்த்தி... நல்ல இருந்த மனுசன "சார் நீங்க மீசைய மட்டும் எடுத்தீங்கண்ணா நல்லா சாக்லேட் பாய் மாதிரி இருப்பீங்க சார்.... பொண்ணுங்கல்லாம் சும்மா அள்ளிக்குவாங்க"ன்னு என்னென்னமோ சொல்லி மண்டையக் கழுவி மீசைய எடுக்க வச்சிட்டாய்ங்க. ஆனா அதப் பாக்க ரண கொடூரமா இருக்கு. அதுவும் கார்த்தியும், அதிதீயும் ஒண்ணா க்ளோஸப் காட்சிகள்ல காமிக்கும்போது யாரு கார்த்தி, யாரு அதிதீன்னு கண்டுபுடிக்கிறதே பெரிய கஷ்டமா இருக்கு.


படத்துல கார்த்தியோட ஃபேமில ஒரு பியூட்டிஃபுல் பேமிலி... மொதல்ல கொழந்தை பெத்துக்கிட்டுதான் அப்புறம் கல்யாணம் பண்ணிக்குவாய்ங்க. கார்த்தி அண்ணன் ஒரு புள்ளைய ஒன்பது மாசமாக்கிட்டு அப்புறம் கல்யாணம் பன்றாப்ள... ஒரு வேளை செலவை கம்மி பன்றதுக்காக வளைகாப்பயும் கல்யாணத்தையும் ஒண்ணா வச்சிருக்கானுங்களோ? இந்த லட்சணத்துல கார்த்தி அதிதீகிட்ட 'எங்கம்மா எனக்கு பாரதியாரயும் மீன் குழம்பையும் ஊட்டி வளர்த்தவங்க,' ன்னு பெருமையா சொல்றாப்ள.


கார்த்தி ஜெயில்ல இருந்தபடி அதிதீய நினைச்சி புலம்புறாரு. 'கண்ண மூடுனா உன் முகம் தெரியிது... உன் சிரிப்பு தெரியிது... உன் பெரிய கண்ணு தெரியிது....'


Kaatru Veliyidai Audience review

தியேட்டர்ல எல்லாரும் எழுந்து வெளில தம் அடிக்க போறாங்களே, அது தெரியிதா?


கார்த்திய ஒரு ப்ளே பாய் மாதிரி காமிக்கிறாய்ங்க. கார்த்திக்கு இந்தப் புள்ளை நாலாவது. அப்ப அந்தப் புள்ளைக்கு கார்த்தி ஏழாவதான்னு கேப்பீங்க? அதப்பற்றிய டீட்டெய்லிங் படத்துல இல்லாமப் போனது கொஞ்சம் வருத்தம்தான். கார்த்தி அதிதீய சின்சியரா லவ் பன்றாரு.. ஆனா கல்யாணம் பண்ணிக்க மாட்டாரு. சண்டை போடுறாரு. அந்தப் புள்ளை கோச்சிக்கிட்டு போனா பாட்டுப்பாடி கூப்டு வருவாரு. திரும்ப சண்டை போடுறாரு. திரும்ப கோச்சிக்கிட்டு போகுது... திட்டுறதுக்கு வார்த்தை இல்லாம திரும்பத்திரும்ப அதே வார்த்தையச் சொல்லி திட்ற மாதிரி, எடுக்குறதுக்கு சீன் இல்லாமா திரும்பத் திரும்ப அதையே எடுத்துக்கிட்டு இருந்துருக்காரு நம்மாளு.


Kaatru Veliyidai Audience review

மணி சாரோட இந்தப் படம் ஒரு கொரியன் சீரியலோட காப்பின்னு ஊருக்குள்ள பரவலா பேசிக்கிறாங்க. அது அப்டியே இருக்கட்டும்... நம்ம அந்த லெவலுக்கு போக வேணாம்... ஒரு நாலு மாசம் முன்னால வாகான்னு ஒரு படம் வந்துச்சி. கிட்டத்தட்ட அதே நம்ம காற்று வெளியிடையும். பாகிஸ்தான் ஆர்மிக்கிட்ட மாட்டுன ஒரு இந்திய வீரர், அங்கருந்துக்கிட்டே அவரோட லவ்வ நினைச்சிப் பாப்பாரு. பாகிஸ்தான் ஆர்மிக்கிட்டருந்து தப்பிக்கிற காமெடியெல்லாம் அதே வாகாதான்.


வாகா ஒரு காட்டு மொக்கைப் படம். ஆனா காற்று வெளியிடை பாத்தப்புறம் அப்டி நினைச்சது தப்பு தப்புன்னு கண்ணத்துலயே போட்டுக்கிட்டேன்.


ஏ.ஆர்.ரஹ்மானோட இசையும், ரவி வர்மனோட ஒளிப்பதிவும் நல்லாதான் இருக்கு. ஆனா கதையும் திரைக்கதையும் செத்துக் கிடக்குறப்போ, இசையையும் ஒளிப்பதிவையும் வச்சிக்கிட்டு என்ன செய்யிறது?


Kaatru Veliyidai Audience review

மணி சார்.. நீங்க படம் எடுக்குறதெல்லாம் சரி.. ஆனா யாருக்காக எடுக்குறீங்கன்னுதான் தெரியல. நீங்க எடுக்குற படமெல்லாம் தமிழுக்கான படமோ தமிழர்களுக்கான படமோ இல்லைன்னு மட்டும் உறுதியாச் சொல்ல முடியும். புது இளம் இயக்குனர்களே இப்பல்லாம் படத்துல லவ்வுங்குறத வெறும் ஊறுகா மாதிரிதான் தொட்டுக்கிட்டு படம் எடுக்குறாங்க. ஆனா நீங்க அந்த காலத்துலயே புரட்சி பண்ணவரு... இப்ப வந்து முழு நீளக் காதல் திரைப்படம் எடுத்துக்கிட்டு... ரூட்ட வேற பக்கம் திருப்புங்க மணி சார்!


- முத்து சிவா

English summary
Audience review of Manirathnam's Kaatru Idaiveli written by Muthu Siva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil