»   »  கபாலி 'ஒன்இந்தியா' விமர்சனம்

கபாலி 'ஒன்இந்தியா' விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
3.0/5
-எஸ் ஷங்கர்

நடிகர்கள்: ரஜினிகாந்த், தன்ஷிகா, ராதிகா ஆப்தே, வின்ஸ்டன் சாவோ, ஜான் விஜய், கிஷோர், தினேஷ், ரித்விகா

ஒளிப்பதிவு: ஜி முரளி

இசை: சந்தோஷ் நாராயணன்

தயாரிப்பு: வி கிரியேஷன்ஸ்

இயக்கம்: பா ரஞ்சித்

Kabali OneIndia Review


ரஜினி... இந்த மூன்றெழுத்து மந்திரத்தின் வீச்சும் பிரமாண்டமும் இந்த நூற்றாண்டின் பேரதியசம் என்றால் மிகையில்லை. மனிதர் வந்து திரையில் முகம் காட்டினாலே அவரது ரசிகனில்லை என்போரும் பரவசப்படுவதைப் பார்க்க முடிகிறது. இப்படியொரு பேரதியத்தை ஒரு பாத்திரமாக ஆட்டி வைக்கும் வாய்ப்பு ரஞ்சித்துக்கு கிடைத்திருக்கிறது கபாலி மூலம். அதை அவர் சரியாகத்தான் பயன்படுத்தியிருக்கிறாரா? வாங்க, பார்க்கலாம்!

கபாலியின் கதையை ஏற்கெனவே நிறையப் படித்துவிட்டிருப்பீர்கள். திரும்பச் சொல்லி சலிப்பேற்படுத்த விரும்பாததால், படத்தின் நிறை குறைகளுக்குப் போய்விடலாம்.

Kabali OneIndia Review

இந்தப் படம் ரஜினி படமா... ரஞ்சித் படமா என்ற பெரும் விவாதம் படம் வெளியாவதற்கு ஒரு மணி நேரம் வரை கூட சூடாக ஓடிக் கொண்டிருந்தது. இனி மறைத்துப் பேச ஒன்றுமில்லை... நூற்றுக்கு நூறு சதவீதம் இது ரஜினி படம். அந்த ஒற்றை மனிதர் இல்லையென்றால் இது படமல்ல!

இந்த வயதில் அவர் காட்டும் வேகமென்ன... ஸ்டைலென்ன... அதுவும் அந்த வெள்ளைத் தாடி வைத்த ரஜினியின் அறிமுகக் காட்சியில் வரும் முதல் சண்டை.. வாவ். சரக்கென்று இரும்பு ராடை கையில் வரவழைத்து வில்லனைத் தாக்கும் லாவகம், கோட்டு சூட்டும் கூலர்ஸுமாய் நடை போடும் கம்பீரம்.. சான்சே இல்லை!

80களில் வரும் இளமை ரஜினி நல்லவனுக்கு நல்லவன் மாணிக்கத்தை நினைவூட்டுகிறார். அவரது தோற்றத்தில் எந்த உறுத்தலுமில்லை. 65 வயது மனிதர் 30 வயது இளமையுடன் மிளிர்கிறார்.

Kabali OneIndia Review

அந்த பாண்டிச்சேரி சண்டைக் காட்சியிலும் க்ளைமாக்ஸ் சண்டையிலும் ரஜினியின் ஆக்ஷனும் வேகமும் நம்மை சீட்டு நுனிக்குத் தள்ளுகின்றன. ரசிகர்கள் சாமி வந்த மாதிரி ஆடித் தீர்க்கிறார்கள் இந்தக் காட்சிகளில்.

மனைவியை மீண்டும் சந்திக்கப் போகிறோம் என்ற உணர்ச்சித் தவிப்பை கட்டுப்படுத்த முடியாமல் கலங்கித் துடித்து மகிழ்ந்து நெகிழும் ரஜினி, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத பரவசம்.

'ஆண்ட பரம்பரைடா நாங்க.... மொத்த மலேசியாவையும் ஆளத் துடிக்கிறியோ? நீ மனுசனா பிறந்திருக்க வேண்டியவனில்லை... நாயா... அதுவும் என் வீட்டு நாயா பொறந்திருக்க வேண்டியவன்' என்று வில்லன்கள் வின்ஸ்டன் சாவோவும் கிஷோரும் வன்மத்துடன் நஞ்சத் துப்பும் இடத்தில்,

Kabali OneIndia Review

'மலையாகக் கிடந்த மலேசியாவை சீராக்கி பொன் விளையும் பூமியா மாத்தினவன் தமிழன். அவன் முன்னேறினா உங்களுக்கு பிடிக்காதா... ஒரு தமிழன் ஆளக் கூடாதா... நான் ஆளப் பிறந்தவன்டா..', என ரஜினி தரும் பதிலடி 'நெருப்புடா' ரகம்.

ஒரு நடிகராக, சூப்பர் ஸ்டாராக எதிர்ப்பார்த்ததை விட நூறு மடங்கு அதிகமான உழைப்பைத் தந்திருக்கிறார் ரஜினி.

இந்தக் கதையில் ராதிகா ஆப்தேதான் நடித்தாக வேண்டும் என ஏன் இயக்குநர் ரஞ்சித் பிடிவாதமாக இருந்தார் என்று புரியவில்லை. பாபநாசத்தில் கவுதமி எப்படியோ அப்படித்தான் கபாலியில் ராதிகா ஆப்தே, தோற்றம் முக்கியத்துவம் இரண்டிலுமே. பெரும்பாலான காட்சிகளில் கர்ப்பிணியாக ஒரு செட் பிராபர்ட்டி போல நிற்கிறார். ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு கணவருடன் இணையும் காட்சியில் மட்டும் மனதில் நிற்கிறார்.

ராதிகாவை விட தன்ஷிகா செம க்யூட். ஆக்ஷன் காட்சிகளிலும் அப்பாவை கண்ணும் கருத்துமாக கவனிப்பதும் டிஸ்டிங்ஷனை அள்ளுகிறார்.

Kabali OneIndia Review

படத்தின் சின்ன கலகலப்புக்கு உதவுகிறார் தினேஷ். கபாலியின் கண் பார்வை இலக்கை கற்பூரமாக உணர்ந்து அவர் மின்னலாய் செயல்படும் காட்சிகளில் மெலிதான நகைச்சுவை. அதைத் தவிர மருந்துக்கும் படத்தில் சிரிப்பில்லை.

ஜான் விஜய், ரித்விகா, கிஷோர், நாசர் மிகையில்லாமல் நடித்திருக்கிறார்கள். அந்த பளபள தைவான் வில்லன் நிஜமாகவே மிரட்டுகிறார்.

இப்போது ரஞ்சித் முன் நாம் வைக்கும் சில கேள்விகள்:

ரஜினி என்ற நடிகரின் பலம் 'ஆக்ஷன் வித் நகைச்சுவை' என்பது நன்றாகத் தெரிந்தும், வேண்டுமென்றே அதை இருட்டடிப்பு செய்யும் வகையில் இந்தப் படத்தை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் என்ன? நகைச்சுவை இருந்திருந்தால் அப்படி என்ன இந்தப் படம் கெட்டுப் போயிருக்கும்?

உங்கள் சுய விருப்பு வெறுப்புகளை ரஜினி என்ற அனைவருக்கும் பொதுவான மக்கள் நாயகன் மீது திணிக்க வேண்டுமா?

க்ளைமாக்ஸில் வரும் ரஜினியின் தோற்றத்துக்காக இன்னும் சற்று மெனக்கெட்டிருக்கலாமே?

Kabali OneIndia Review

குமுதவள்ளியைக் கண்டுபிடிக்க பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ரஜினியை அலையவிடும் காட்சியெல்லாம் இப்படியொரு படத்தில் தேவையா..?

படத்தின் இன்னொரு பலவீனம் சந்தோஷ் நாராயணன் இசை. பிஜிஎம்மாக வரும் அந்த நெருப்புடா பாடல் தவிர, வேறு எதுவும் மனதில் நிற்கவில்லை. மாய நதி ஒன்று பாடல், தென்றல் வந்து தீண்டும்போது... பாடலின் உல்டா என்பதை படத்திலேயே காட்சியாக வைத்திருக்கிறார்கள். பெரும்பாலாக துப்பாக்கிக் குண்டுச்சத்தமே ஒலித்துக் கொண்டிருப்பதால், எது பின்னணி இசை என்றே புரியவில்லை!

80களின் மலேசியா, பளபளக்கும் இன்றைய மாடர்ன் மலேசியா இரண்டையும் அழகாக வித்தியாசப்படுத்தியிருக்கிறது முரளியின் காமிரா.

ரஜினி என்ற பலமிக்க சிங்கத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்றே தெரியாமல் விழிக்கும் சர்க்கஸ் மாஸ்டர் மாதிரிதான் இந்தப் படத்தில் தெரிகிறார் இயக்குநர் ரஞ்சித்.

English summary
Tamil Oneindia's reviews for Rajinikanth's magnum opus Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil