»   »  காதலும் கடந்து போகும் விமர்சனம்

காதலும் கடந்து போகும் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

-எஸ் ஷங்கர்

Rating:
3.0/5

நடிப்பு: விஜய் சேதுபதி, மடோனா, சமுத்திரக்கனி
ஒளிப்பதிவு: தினேஷ் கிருஷ்ணன்
இசை: சந்தோஷ் நாராயணன்
தயாரிப்பு: சிவி குமார் - ஞானவேல் ராஜா
இயக்கம்: நலன் குமாரசாமி

கொரியப் படமான Nae Kkangpae Kateun Aein-வின் உரிமையை ரூ 40 லட்சத்துக்கு வாங்கி காதலும் கடந்து போகும் படத்தை எடுத்திருக்கிறார். கொஞ்சம் யோசித்திருந்தால் இதை விட பிரமாதமான கதை வட சென்னையிலோ, ஓஎம்ஆர் ஐடி காரிடாரிலோ கிடைத்திருக்கும்!


கதை இதுதான்...


ரொம்பப் பாசமான பெற்றோர்... அவர்களின் எதிர்ப்பை மீறி விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு 'ஓடிப் போகிறார்' லோக்கல் கல்லூரியில் எஞ்ஜினீயரிங் படித்த நாயகி மடோனா. காதலால் அல்ல.. ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்ற 'லட்சியத்துக்காக'.


Kadhalum Kadanthu Pogum review

போன இடத்தில் வேலை கிடைத்து சந்தோஷமாக நாட்கள் போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென கம்பெனியை இழுத்து மூடுகிறார்கள். திரும்ப வீட்டுக்குப்போனால் விழுப்புரத்தைத் தாண்ட விடமாட்டார்கள் என்பதால், சென்னையிலேயே குறைந்த வாடகைக்குத் தங்கி வேலை தேடும்போது, பக்கத்து அறையில் குடியிருக்கும் 'அடியாள்' விஜய் சேதுபதியின் அறிமுகம் கிடைக்கிறது. விஜய் சேதுபதியின் ஒரே 'லட்சியம்' பார் ஓனராக வேண்டும். அவ்வளவுதான்.


Kadhalum Kadanthu Pogum review

வேண்டா வெறுப்பாக ஆரம்பிக்கும் அந்த அறிமுகம் இருவரும் சேர்ந்து சரக்கடிக்கும் அளவுக்கு நட்பாக மாறுகிறது. இந்த நட்புக்காக விஜய் சேதுபதி எதையும் செய்யத் தயாராக இருக்கிறார். ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதியையே திருமணம் செய்து கொள்ளவும் தயாராகிறார் மடோனா.


இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா.. விஜய் சேதுபதி பார் ஓனரானா என்பது மீதி.


எதார்த்தமான கதை. சினிமாத்தனம் இல்லாத கதை மனிதர்கள். இடைவேளைக்குப் பிறகு இலக்கில்லாமல் பயணிப்பது போன்ற உணர்வைத் தந்தாலும், கடந்து போகிற மேகங்கள் மாதிரிதான் காதலும் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார் நலன் குமாரசாமி.


Kadhalum Kadanthu Pogum review

படத்தின் இன்னொரு ப்ளஸ்... வலிந்து திணிக்கப்படாத நகைச்சுவை.


நாயகி மடோனாதான் படத்தின் பலம் (ப்ரேமம் புகழ்). அழகு, நடிப்பு இரண்டிலுமே டிஸ்டிங்ஷன். தமிழ் சினிமா அத்தனை சீக்கிரம் இவரை கேரளாவுக்கு அனுப்பாது என நம்பலாம்.


தூங்கு மூஞ்சி, சோம்பேறி, நல்ல மனசு கொண்ட அரைகுறை ரவுடி... இதுதான் படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர். அச்சு அசலாகப் பிரதிபலிக்கிறார். எஸ்கிமோ நாய் என்ற வார்த்தையால் பட்ட வலியை அவர் சொல்லிக் காட்டும் விதம் க்ளாஸ்.


Kadhalum Kadanthu Pogum review

மொடா குமாரு என்ற பாத்திரத்தில் சமுத்திரக்கனி. மொத்தம் மூன்றே காட்சிகள்தான். சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை.


பார் ஓனர்களாக வரும் இருவர் மற்றும் விஜய் சேதுபதிக்கு துணையாக நடித்திருக்கும் இளைஞர் கவனிக்க வைக்கின்றனர்.


விஜய் சேதுபதியை தன் காதலனாக செட் பண்ணி ஊருக்கு மடோனா அழைத்துப் போகும் காட்சிகள் அப்படியே 'பூவேலி' படத்தை நினைவூட்டின.


Kadhalum Kadanthu Pogum review

தினேஷின் ஒளிப்பதிவு பிரமாதம். சந்தோஷ் நாராயணன் இசையில் இரு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. காட்சிகளை உணர்ந்து பின்னணி இசை தந்திருக்கிறார். விஜய் சேதுபதிக்கான ஆக்ஷன் காட்சிகளில் சேதுபதி பட பாணியிலேயே பின்னணி பாடல் ஒலிப்பது தற்செயலா.. சென்டிமென்டா?


Kadhalum Kadanthu Pogum review

நடிப்பிலும், காட்சிப்படுத்துதலிலும் இருந்த தேர்ச்சியும் ஒழுங்கும் திரைக்கதையிலும் இருந்திருக்கலாம். ஆனால் முழுமைத்துவம் என்பது மனிதனுக்கே இல்லை.. அந்த மனிதனின் படைப்பில் சின்னச் சின்ன குறைகள் இருக்கத்தானே செய்யும். அப்படி எடுத்துக் கொண்டால் இந்தப் படத்தை நீங்கள் லயித்து ரசிக்க முடியும்!

English summary
Vijay Sethupathy's Kadhalum Kadanthu Pogum is an enjoyable realistic romantic comedy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil