»   »  கலகலப்பு 2... பார்ட் 3யும் எடுக்கலாம் சுந்தர்! #Kalakalappu 2 review

கலகலப்பு 2... பார்ட் 3யும் எடுக்கலாம் சுந்தர்! #Kalakalappu 2 review

Posted By:
Subscribe to Oneindia Tamil

'கலகலப்பு 2' என்று தலைப்பு வைத்திருக்கிறார்களே தவிர முதல் படத்தின் கதைக்கும், இந்தப் படத்தின் கதைக்கும் துளிகூட தொடர்பு இல்லை! கதை என்று ஒன்று இருந்தால்தானே!? ஆனாலும் இரண்டரைமணி நேரத்திற்கு போரடிக்காமல் காமெடி கலாட்டா பண்ணியிருக்கிறார் சுந்தர் சி.

தனக்குப் பிடிக்காத அரசியல்வாதி மீது ஐ டி ரெய்டு நடத்துவதுபோல் இந்தப் படத்திலும் ஒரு ஐ டி ரெய்டு நடக்கிறது. கணக்கில் வராத சொத்துக்கள் பற்றிய தகவல் அடங்கிய ஒரு லேப்டாப் அரசியல்வாதியின் ஆடிட்டர் முனிஸ்காந்த் கைக்குப் போகிறது. அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால்தான் தருவேன் என்று காசிக்கு வரச் சொல்கிறார்.

Kalakalappu 2 review

தனக்கு நெருக்கமான ஒரு போலிஸ் அதிகாரியை பணத்தோடு அனுப்பி காரியத்தைக் கச்சிதமாக முடிக்கச் சொல்லி அனுப்புகிறார் அரசியல்வாதி.

இன்னொரு பக்கம் தனது பூர்வீகச் சொத்தைதேடி அதே காசிக்கு ட்ரெயின் ஏறுகிறார் ஜெய். பல தலைமுறையாக காசியில் செட்டிலான குடும்பதைச் சேர்ந்தவர் ஜீவா. அவரது மேன்ஷனில் தங்கி தனது சொத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இருக்கும் ஜெய்க்கு, தான் தங்கியிருக்கும் மேன்ஷன்தான் தான் தேடிவந்த பூர்வீக சொத்து என்பது தெரியவருகிறது.

இதற்கு நடுவே இவர்கள் இருவரையும் ஏமாற்றிய மிர்ச்சி சிவாவைத் தேடி தமிழ் நாட்டுக்கு வருகிறார்கள். இப்படியாக இரண்டு வெவ்வேறு டீம் எப்படி ஒரு புள்ளியில் இணைந்து எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கிறார்கள் என்பது மிச்சக்கதை!

முதல்பாதி முழுக்க ஜெய், ஜீவா இருவரின் காதலும், யோகி பாபு, சிங்கமுத்து, ராதாரவி, ஜார்ஜ் காமெடி என பேசஞ்சர் ட்ரெயின் மாதிரி நின்று நிதானமாகப் போகிறது. இரண்டாவது ஜெட் வேகம்! நான்ஸ்டாப் காமெடி. உள்ளத்தை அள்ளித்தா பாணியில் செம கலாட்டா.

ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரேசா, நந்திதா, ராதாரவி, மனோபாலா, சிங்கமுத்து, யோகிபாபு, ரோபோ சங்கர், வி.டி.வி கணேஷ், சிங்கம் புலி, முனிஸ்காந்த், வையாபுரி, சந்தானபாரதி, சதீஷ் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள். யாரையும் வீணடிக்காமல் எல்லோரையும் மிகச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

Kalakalappu 2 review

அடுத்தடுத்து வரும் பாடல்கள் கலகலப்புக்கு வேகத்தடை மாதிரி ஆகிவிடுகின்றன. மூன்று ஹீரோக்களையும் திருப்திப் படுத்தவேண்டும் என்கிற இயக்குநரின் தவிப்பு புரிகிறது. படம் பார்பவர்களுக்கு அது புரியுமா என்று தெரியவில்லை. மற்றபடி பார்த்தால் கொடுக்கிற காசுக்கு கும்பத்தோடு பார்க்கவைக்கிற கலர்ஃபுல் சினிமா 'கலகலப்பு 2'.

அதிலும் க்ளைமாக்ஸ் காட்சி அட்டகாசத்தின் உச்சம். பார்ட் 3 க்கு செம லீட்!

- வீகே சுந்தர்

English summary
Sundar C's Kalakalappu 2 viewers review

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil