»   »  'களவாடிய பொழுதுகள்' - படம் எப்படி? #KalavaadiyaPozhuthugalReview

'களவாடிய பொழுதுகள்' - படம் எப்படி? #KalavaadiyaPozhuthugalReview

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிரபு தேவாவின் களவாடிய பொழுதுகள் படத்தின் விமர்சனம்- வீடியோ

தங்கர் பச்சான் இயக்கத்தில் பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் 'களவாடிய பொழுதுகள்'. கடந்த 2010-ம் ஆண்டே ஷூட்டிங் முடிக்கப்பட்ட இந்தப் படம் பல சிக்கல்களால் மாட்டிக்கொண்டு ஒருவழியாக இப்போதுதான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் பல ட்ரெண்டுகள் மாறிவிட்ட இந்தக் காலகட்டத்தில் வெளியாகியிருக்கும் 'களவாடிய பொழுதுகள்' காலம் கடந்தும் ரசிகர்களை ஈர்த்திருக்கிறதா...? வாங்க பார்க்கலாம்.

ஏழை டாக்ஸி டிரைவரான பிரபுதேவா, சாலையில் போகும்போது ஒரு விபத்தைப் பார்க்கிறார். படுகாயத்தோடு கிடக்கும் பிரகாஷ்ராஜை மற்றவர்களின் உதவியோடு மருத்துவமனையில் சேர்க்கிறார். அடுத்த வேளைச் சோற்றுக்கு வழியில்லாத நிலையில் தன் கையில் இருந்த சொற்ப பணத்தை மருத்துவமனையில் கட்டி விடுகிறார். பிரகாஷ்ராஜின் குடும்பத்தினருக்கும் தகவல் சொல்லி விடுகிறார். பிரகாஷ்ராஜை பார்க்க வரும் அவரது மனைவி பூமிகா, பிரபுதேவாவின் முன்னாள் காதலி. அவரைப் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு அப்படியே கிளம்பி வீட்டுக்கு வந்துவிடுகிறார் பிரபுதேவா.

Kalavaadiya pozhuthugal movie Review

கல்லூரியில் படிக்கும்போது பிரபுதேவாவும், பூமிகாவும் காதலர்கள். இவர்களது காதலை விரும்பாத பூமிகாவின் தந்தை பிரபுதேவா மீது பொய் வழக்குப் பதிவு செய்து சில வருடங்கள் சிறையில் அடைத்து விடுகிறார். அந்த இடைவெளியில் மரணப்படுக்கையில் விழுந்த பூமிகாவின் அப்பா, தான் இறப்பதற்குள் பூமிகாவின் திருமணத்தை பார்க்கவேண்டும் என எனக்கூறி சம்மதிக்க வைத்து விடுகிறார். பெரிய தொழிலதிபரான பிரகாஷ் ராஜை திருமணம் செய்துகொள்கிறார் பூமிகா. தன் கணவரின் உயிரைக் காப்பாற்றியது முன்னாள் காதலன் என்பதை அறிந்து அவரைச் சந்திக்க வருகிறார் பூமிகா. சந்திப்பை வேண்டுமென்றே தவிர்த்த பிரபுதேவா, பூமிகாவின் பிடிவாதத்தால் அவரைச் சந்திக்கிறார்.

உரிய நேரத்தில் உயிரைக் காப்பாற்றிய பிரபுதேவாவுக்கு உதவி செய்ய பிரகாஷ்ராஜும், பூமிகாவும் மாற்றி மாற்றி அழைக்கிறார்கள். பூமிகாவின் வாழ்க்கையில் குறுக்கிடுவதை தவிர்த்து வருகிறார் பிரபுதேவா. இதற்கிடையே, பிரபுதேவா வீட்டிலும் வறுமை தாண்டவமாடுகிறது. அவர் ஓட்டும் காரையும் வட்டி கட்டாததால் எடுத்துச் செல்கிறார்கள். பிழைக்க வழியின்றி இருக்கும்போது அவரது மனைவியின் தூண்டுதலின் பேரிலும், பிரகாஷ்ராஜ் மற்றும் பூமிகாவின் இடைவிடாத அழைப்பாலும் அவர்களைச் சந்திக்கச் செல்கிறார் பிரபுதேவா.

பண உதவிகளை மறுத்துவிட்டு, அவர்களின் வற்புறுத்தலின் பேரில் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். படித்தவர், சமூக அக்கறை கொண்டவர் என்பதால் வேலையிலும் பாராட்டைப் பெறுகிறார். பிரகாஷ் ராஜின் நம்பிக்கி மிகுந்தவராக தொழிலில் மிகவிரைவில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறார். ஆனால், முன்னாள் காதலியை முழுமையாகத் தவிர்க்க முடியாமலும், அவர்களது வாழ்வில் குறுக்கிட்டுவிடக்கூடாது என்கிற பயத்திலும் மனிதர் நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். பூமிகாவுக்கும் அதே நிலை. காதலனும், அவனது குடும்பமும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பல உதவிகளைச் செய்த பூமிகா, பிரபுதேவாவை விலக்கி வைக்க முடியாமல் தவித்துப் போகிறார்.

முன்னாள் காதலர்கள் தங்களது திருமணங்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்கிற கணங்கள் சாதாரணமாக இருக்க முடியாது. ஒரு மீப்பெரும் பிரிவின் வாதையை, அளவிடமுடியாத குற்றவுணர்ச்சியை, வெளிப்படுத்திவிட முடியாத அன்பை ஒருசேர உணர்கிற தருணம் அது. அந்தத் தருணத்தை எப்படிக் கையாள்வது எனத் தெரியாமல்தான் பலரும் இந்தச் சந்திப்புகளை ஒருபோதும் விரும்புவது கிடையாது. அப்படி ஒரு காதலர்களாய் வாழ்ந்திருக்கிறார்கள் பிரபுதேவாவும், பூமிகாவும். பூமிகாவின் குரல் கேட்ட நிமிடத்தில் துணுக்குறும் பிரபுதேவாவும், பிரபுதேவாவின் மகள் பெயர் யாழினி என அறிந்த பூமிகாவும் அந்தத்தக் கணங்களில் காட்டிய காதலின் யதார்த்தம் என வரும் காட்சிகள்தான் படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன.

காதல் பிரிவும், பிரிவு நிமித்தமும் தான் தங்கர் பச்சானின் சினிமா திணை. மனிதர்களின் உணர்வுகளை கேமராவில் பதிவு செய்து ரசிகர்களின் கண்களுக்குக் காட்டுவதில் மனிதர் கெட்டிக்காரர். 'அழகி' படம் பேசிய காதலின் இன்னொரு பார்வை தான் இந்தப் படம். 'களவடிய பொழுதுகள்' படம் ஏழை காதலன், பணக்கார காதலி இருவரும் சூழ்நிலையால் பிரிந்துவிடுகிற கதை. எப்போதோ ஒருநாள் இருவரும் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்போது அவர்களின் உணர்வுகள் எப்படி இருக்கும் என யதார்த்தம் மாறாமல் உணர்வுப் பூர்வமான காட்சிகளால் விவரித்திருக்கிறார் தங்கர் பச்சான்.

சக மனிதர்களின் மீது பேரன்பு கொண்ட ஒரு மனிதனாக பிரபுதேவா. படிக்கும் காலத்திலேயே தமிழ் உணர்வு, கம்யூனிசம், பெரியாரிசம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். சிறைக்குச் சென்று திரும்புவதற்குள் காதலி இன்னொருவரைத் திருமணம் செய்துகொண்டதை அறிந்து அங்கிருக்கப் பிடிக்காமல் கிளம்புகிறார். பெரியப்பாவின் வற்புறுத்தலின் பேரில் இன்னொரு ஏழைப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார். வறுமை அவரது குடும்பத்தையும் வாழ்க்கையையும் எப்படியெல்லாம் சூறையாடி இருக்கிறது என்பதை காட்சிகளின் ஊடாக விளக்கி இருக்கிறார் பிரபுதேவா. பிரபுதேவா, பூமிகாவின் சந்திப்பைத் தவிர்க்கப் பிரயத்தனப்படும் காட்சிகளிலும், அவரைச் சந்தித்த பின், அவரது முகத்தை நேருக்கு நேர் பார்க்கவும், அவர் முன்பு நிற்கவும் அஞ்சும் காட்சிகளிலும் அதிசயிக்க வைக்கிறார்.

பரத்வாஜின் பின்னணி இசையும், பாடல்களும் இப்படத்தின் உணர்வுகளை ரசிகர்களுக்குக் கடத்தும் நரம்புகளாக பணியாற்றி இருக்கின்றன. வைரமுத்துவின் வரிகளில் உருவான 'குற்றமுள்ள பார்வை...' பாடல் காதலின் உணர்வுகளைப் பேசுகிறது. மொத்தக் காதலையும் இந்த ஒரு பாடலின் வழி மீட்டியிருக்கிறார் வைரமுத்து. 'இன்னாருக்கு இன்னாரென்று' பாடல் வரும் காட்சிகளில் எல்லாம் கலங்க வைக்க முயற்சிக்கிறது. 'சேரன் எங்கே...' பாடல் தங்கர் பச்சான் ஐடியாலஜியின் டச். தமிழ் மொழியின் தனித்துவம் சொல்லும் இந்தப் பாடலும் ஈர்க்கிறது.

தங்கர் பச்சானின் அலட்டல் இல்லாத ஒளிப்பதிவும், கே.கதிரின் கலை இயக்கமும், படத்தொகுப்பாளர் லெனினின் எடிட்டிங்கும் படத்திற்கு பலம். தேர்தல் என்பதே மக்களின் வருமானத்திற்கான ஒன்றாகி விட்டதையும், மதுக்கடைக்கு எதிரான மக்களின் கிளர்ச்சியையும், பொழுதுபோக்கு என்கிற பெயரில் ஆபாசம் தாண்டவமாடுவதையும், தமிழ் சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டு வருவதையும், காதல் கதைக்கு ஊடாகவே சொல்லி விருப்பக்குறிகளைப் பெறுகிறார். கஞ்சா கருப்பு குணச்சித்திர நடிகராக ஸ்கோர் செய்திருக்கிறார்.

சில காட்சிகள் மெதுவாகவே நகர்ந்து சோர்வாக்குகின்றன. பாடலின் போதும், இடைவேளையின் போதும் மட்டுமின்றி, காட்சிகளின் போதே ஒன்றிரண்டு பேர் தியேட்டரிலிருந்து எழுந்து செல்வது பரிதாபமாக இருக்கிறது. எமோஷனல் சினிமாவில் கில்லியாக இருக்கும் தங்கர் பச்சானின் படங்கள் வரவேற்பு பெற வேண்டுமெனில் ரசிகர்களை முதலில் இருக்கையில் அமரவைக்க பாடுபட வேண்டும். அதில் மட்டும் கொஞ்சம் பின்தங்கி இருக்கிறார் தங்கர். ரசிகர்களுக்கும் காலத்துக்கும் ஏற்றபடி படைப்பாளன் தனது ஸ்டைலை மாற்றிக்கொண்டால் தான் வெற்றியைப் பெற முடியும் என்பதே இங்கு நிதர்சனம்.

இப்போதைய தமிழ் சினிமாவில் காதலை உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் படங்கள் வெகு அபூர்வம். காதல் - டூயட் - பிரேக் அப் என பாஸிங்கில் பிரிவு சொல்லும் படங்களுக்கு மத்தியில் 'களவாடிய பொழுதுகள்' கவனம் ஈர்க்கிறது. காதல் பிரிவை, காதலின் மென்மையை, காதலின் அணுக்கத்தை, காதல் சார்ந்துள்ளவர்களின் மனப் போராட்டத்தை, காதலின் அழகியலை ரசிகர்களுக்கு கற்றுத் தருகிறது இந்தப் படம். 'களவாடிய பொழுதுகள்' - உணர்வுகளின் போராட்டம்!

English summary
Read 'Kalavaadiya pozhuthugal' movie review here. Prabhu deva, Bhumikaa and Prakashraj starred 'Kalavaadiya pozhuthugal' directed by Thangar Bachan. 'Kalavaadiya pozhudhugal' is a romantic emotional drama. Read full review here.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X