twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தப் படத்தை எப்படிப் பாராட்டினாலும் தகும்... தமிழ் சினிமாவில் ஓர் 'தங்கல்'.... கனா விமர்சனம்!

    ஒரு கிராமத்து பெண் எப்படி தடைகளை மீறி சர்வதேச கிரிக்கெட் வீராங்கனையாக சாதிக்கிறார் என்பதே கனா.

    |

    Recommended Video

    கனா படம் எப்படி இருக்கு?- வீடியோ

    Rating:
    4.5/5

    சென்னை: ஒரு கிராமத்து பெண், எப்படி தடைகளை மீறி சர்வதேச கிரிக்கெட் வீராங்கனையாக சாதிக்கிறார் என்பதை, அப்பா - மகள் பாசம், விவசாயம், காதல், நட்பு ஆகியவற்றுடன் சேர்த்து சொல்கிறது கனா.

    திருச்சி அருகே உள்ள குளித்தலையை சேர்ந்தவர் விவசாயி முருகேசன் (சத்யராஜ்). மனைவி மகளுக்கு பிறகு இவர் உயிராக நினைக்கும் இரண்டு விஷயம் விவசாயமும், கிரிக்கெட்டும். ஒரு உலகக்கோப்பை போட்டியில் இந்தியா தோற்றுவிட, சோகத்தில் மூழ்குகிறார் முருகேசன். தனது தந்தை முதல் முறையாக அழுவதைப் பார்க்கும் மகள் கௌசல்யாவுக்கு (ஐஸ்வர்யா ராஜேஷ்), இந்தியாவுக்காக தான் கிரிக்கெட் விளையாடி, ஜெயித்து தந்தையை சந்தோஷப்படுத்த வேண்டும் என விரும்புகிறார். இந்த ஆசை ஒரு கட்டத்தில் வெறியாக மாறிவிடுகிறது. பொம்பள பிள்ளைய கிரிக்கெட் விளையாட அனுமதிச்சதுக்காக, ஊரே சேர்ந்து முருகேசனை ஏசுகிறது. இந்த தடைகளை எல்லாம் தாண்டி, கௌசல்யா முருகேசன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் எப்படி இடம் பிடிக்கிறார் என்பதே படம்.

    Kanaa movie review

    ஒரு பக்கம் மகளிர் கிரிக்கெட், மறுபக்கம் விவசாயம் என இருகோடுகளில் பயணிக்கிறது கதை. ஆனால் குழப்பமே ஏற்படுத்தாமல் தெளிவான திரைக்கதை அமைத்து, ஒரு பார்வையாளனுக்கு தேவையான அனைத்து அம்சங்களையும் படத்தில் புகுத்தி தான் ஒரு அதிபுத்திசாலி என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.

    ஒரு பெண் கிரிக்கெட் விளையாட ஆசைப்படும் போது, அதற்கு எப்படி எல்லாம் பிரிச்சினை வரும் என்பதை மிக அழுத்தமாகவும், அதே நேரத்தில் யதார்த்தமாகவும் பதிவு செய்திருக்கிறார்கள். மற்றொரு பக்கம் இன்று நம் நாட்டில் விவசாயமும், விவசாயிகளும் என்ன பாடுபடுகிறார்கள் என்பதையும் சமரசமின்றி கூறியிருக்கிறார் இயக்குனர்.

    Kanaa movie review

    படத்தில் வரும் கதாபாத்திரங்களும் சரி, காட்சிகளும் சரி, மிகைப்படுத்தப்படாமல் அளவாக இருப்பது ரசிக்க வைக்கிறது. கடைசி 30 மணி நேர படம், ஒரு டிவியில் ஒளிபரப்பாகும் உண்மையான கிரிக்கெட் போட்டியை போன்றே இருக்கிறது. அதுவும் இந்தியா - பாகிஸ்தான் டி20 போட்டியின் கடைசி ஓவரில், இரு அணிகளுக்கும் சமமான வெற்றி வாய்ப்பு இருக்கும்போது, அனிச்சையாக நம்முள் ஏற்படும் ஒரு பதற்ற உணர்வு, இந்த படத்தை பார்க்கும் போதும் ஏற்படுகிறது.

    படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை என்ன நடக்கப் போகிறது என்பது தெரிந்த விஷயம். க்ளைமாக்ஸ் காட்சியே அறிந்திருந்தாலும் கூட படம் மிக சுவாரஸ்யமாக நகர்கிறது. ஒவ்வொரு வசனமும் நம்மை அறியாமல் கைத்தட்ட வைக்கின்றன. "இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற நாங்க 11 பேர் இருக்கோம்... ஆனா இந்தியாவில் விவசாயத்த காப்பாற்ற யார் இருக்கா", "ஒண்ணு லஞ்சம் கொடு இல்ல மரியாதை கொடு... ஏன்யா ரெண்டுத்தையும் கொடுத்து கெடுக்குறீங்க", போன்ற நச் வசனங்கள் பல உள்ளன. அதுவும் க்ளைமாக்ஸ் காட்சியில் ஐஸ்வர்யா பேசும் வசனத்துக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

    Kanaa movie review

    ஐஸ்வர்யா ராஜேஷை பார்க்கும் போது அவர் பிறவி கிரிக்கெட் பிளேயரோ என தோன்றுகிறது. முதல் காட்சியிலேயே 'நான் ஒரு கிரிக்கெட் பிளேயர் டா' என நம்பவைத்து விடுகிறார். ஆசம் ஐஸ்வர்யா. அடம்பிடிக்கும் பிள்ளையாக, அப்பாவின் மகளாக என கலங்க வைக்கிறார். ஐஸ்வர்யாவின் நடிப்பை பாராட்ட வேண்டும் என்றால் இந்த ஒரு கட்டுரை போதாது. படத்தை தன் முதுகில் சுமந்து, ஒரு கிரிக்கெட்டராகவே வாழ்ந்திருக்கிறார்.

    போடாத வேடம் இல்லை, நடிக்காத படமும் இல்லை. கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இன்னனும் நம்மை ரசிக்க வைக்கும் ஒரே நடிகர் சத்யராஜ் தான். கேரக்டராகவே வாழ்வது என்பது இவர் ஒருத்தருக்கு தான் அதிகம் பொருந்தும். அச்சுஅசலான ஒரு டெல்டா விவசாயியை நம் கண்முன் நிறுத்துகிறார்.

    சத்யராஜுக்கு இணையாக பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பாத்திமா. ஒரு சராசரி கிராமத்து தாயாக சரியான உணர்வுகளை அளவுடன் வெளிபடுத்துகிறார். இந்த படத்தில் வரும் இளவரசு கதாபாத்திரம் போல் ஒவ்வொருவருக்கும் ஒரு நண்பன் இருக்க வேண்டும். மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார் இளவரசு.

    Kanaa movie review

    அரை மணி நேரமே வந்தாலும் பவர்புல் கேரக்டர் சிவகார்த்திகேயனுக்கு. ஒரு தயாரிப்பாளராக அவ்வளவு நியாயம் செய்திருக்கிறார். முதல் தயாரிப்பிலேயே தரமான படமாக தந்திருக்கிறார். ஒரு பர்பெக்ட் கிரிக்கெட் கோச்சுக்கான உடல் மொழியுடன் அவர் பேசும் வசனங்கள் எல்லாம், வெற்றிக்கான பாசிடிவ் எனர்ஜி டானிக். "ஜெயிக்கிறேன்னு சொன்னா கேட்கமாட்டாங்க... ஜெயிச்சவன் சொன்னா தான் கேட்பாங்க" என அவர் சொல்லும் போது நம்மை அறியாமல் கைதட்டிவிடுகிறோம்.

    தர்ஷனுக்கு இது முதல் படம் என்றாலும் செம படம். ஒரு தலை காதலனாக ஐஸ்வர்யாவுக்காக அவர் செய்யும் அலப்பறைகள் ரசிக்க வைக்கின்றன. அவருடன் வரும் சச்சின் மற்றும் டெண்டுல்கர் சிரிக்க வைக்கிறார்கள். அதேபோல கௌசிக் பாய்ஸ் ஆக வரும் அத்தனை இளைஞர்களுமே எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள். முனிஸ்காந்த் மட்டும் தான் கொஞ்சம் ஓவர் ஆக்ட்டிங். ஆனா அது பெரிய குறையா ஒன்றும் தெரியவில்லை.

    படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது இசை தான். வாயாடி பெத்த புள்ள உள்பட படத்தில் வரும் அத்தனை பாடல்களுமே திரும்ப திரும்ப கேட்கும் ரகம். பின்னணி இசை தான் படத்தை வேறு லெவலுக்கு கொண்டு செல்கிறது. இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க திபு நினான் தாமஸ். அடிக்கடி இந்த பக்கம் வாங்க ப்ரோ.

    ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். கிராமத்து பசுமை, வெறுமை, உணர்வுகள், கிரிக்கெட் என ஒவ்வொன்றையும் தனித்தனியாக படம்பிடித்து காட்டுகிறார். இதனை அவ்வளவு விறுவிறுப்பாக எடிட் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ரூபன். அதுவும் அந்த க்ளைமாக்ஸ் கிரிக்கெட் மேட்ச் செம பர்பெக்ட்.

    ஒலிக்கலவை, கலை இயக்கம், சண்டை காட்சிகள் என படத்தில் வரும் அனைத்துமே பாராட்டதக்க வகையில் அமைந்திருக்கின்றன. காமெடி ஏரியாவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால், இன்னமும் கூட ரசித்திருக்கலாம்.

    பெண் பிள்ளைகளுக்கு இது ஓகே, இது கூடாது என நாம் ஏன் ஒதுக்கி வைக்க வேண்டும் என்ற பலமான கேள்வியை நம் முன் வைக்கிறார்கள். படத்தின் கேட்சிங் லைன் 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்'. உங்கள் கனா பலித்துவிட்டது இயக்குனர் அருண்ராஜா காமராஜ். இப்போ நீங்க சொன்னாலும் இந்த உலகம் கேட்கும்...

    English summary
    The tamil movie Kanaa, directed by Arunraja Kamaraj, starring Aishwarya Rajesh, Sathyaraj in the lead role is must watch movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X