»   »  கனவு வாரியம் விமர்சனம்

கனவு வாரியம் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
3.5/5

-எஸ் ஷங்கர்

நடிகர்கள்: அருண் சிதம்பரம், ஜியா, இளவரசு, பிளாக் பாண்டி, ஞானசம்பந்தன்

இசை: ஷ்யாம் பெஞ்சமின்

ஒளிப்பதிவு: எஸ் செல்வகுமார்

தயாரிப்பு: டிசிகாப் சினிமாஸ்

எழுத்து, இயக்கம்: அருண் சிதம்பரம்

ஒவ்வொரு சாதனையாளனின் ஆரம்ப முயற்சியும் தொடக்கத்தில் பல அவமானங்களைச் சந்திக்கிறது. கிறுக்கனாகப் பார்க்க வைக்கிறது. முயற்சி வென்ற பிறகோ, அந்த சாதனையாளனை ஊரே கொண்டாடுகிறது என்பதை மையப்படுத்தி வந்துள்ள படம் கனவு வாரியம்.

எண்பதுகளில் கிராமங்கள் மின் விளக்கை முதல் தரிசனம் செய்த காலகட்டத்தில் ஆரம்பிக்கிறது படம். இளவரசுவின் ஒரே மகன் அருண் சிதம்பரம். கிராமத்தில் 8-ம் வகுப்பு வரை படிக்கும் அருணுக்கு ஏதாவது புதிதாக கண்டு பிடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று ஆசை. இந்த மனப்பாட பள்ளிக் கல்வி பிடிக்காமல் போகிறது. 'சரி.. உனக்குப் பிடிச்சதை பண்ணுடா மகனே' அனுமதிக்கிறார் இளவரசு. ரேடியோ கடையில் சேர்கிறான். வளர்ந்து வாலிபனாகிறான். சொந்தமாக ஒரு ரேடியோ, செல்போன் சர்வீஸ் கடை வைக்கிறான். அந்த ஊரே 18 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போகிறது. அருணின் கடையும் பாதிக்கிறது. புதிதாக ஏதாவது செய்து, மின்சாரம் தயாரிக்க முயற்சி செய்கிறான். அதற்கு ஞானசம்பந்தன் உதவுகிறார். ஆனால் ஊரோ, கிறுக்கன் என கிண்டலடிக்கிறது.

Kanavu Variyam Review

அப்போதுதான் ஜியாவைச் சந்திக்கிறான். ஜியாவின் அண்ணன் யோக் ஜேப்பி ஒரு ஐடி பணியாளர். ஆனால் அந்த வேலையில் இருக்கும் மன அழுத்தத்தை தாங்க முடியாமல், வேலையை உதறிவிட்டு சொந்த ஊரில் இயற்கை விவசாயம் பார்க்க வருகிறார். லட்சக் கணக்கில் வந்த சம்பளத்தை விட்டுவிட்டானே என யோக் ஜேப்பியையும் கிறுக்கனாகவே பார்க்கிறது ஊர்.

இந்த இருவரும் தங்கள் முயற்சிகளில் எப்படி வென்றார்கள் என்பதுதான் மீதி.

அருண் சிதம்பரத்துக்கு முதலில் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

இந்த அளவுக்கு நேர்த்தியாக இவர் படமெடுப்பாரா என ஆரம்பத்தில் யாரும் நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால் நம்பிக்கையோடு, நன்கு திட்டமிட்டு உழைத்திருக்கிறார். அது ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது.

கிராமங்களில் அன்றைக்கு இருந்த, இன்றைக்கு மறந்தே போய்விட்ட கல்லா மண்ணா, கிச்சுக் கிச்சு தாம்பூலம் போன்ற ஏராளமான விளையாட்டுகளை மையப்படுத்தி உருவான பாடலுடன் படம் தொடங்குகிறது. அங்கே இங்கே என அலைபாயாமல், ஒரே நேர்க்கோட்டில் நேர்த்தியாகப் பயணிக்கிறது.

என்னடா இது... திரும்பத் திரும்ப ஒரே மாதிரி காட்சி இருக்கிறதே என எண்ணும்போதே, அதையும் காட்சியில் குறிப்பிட்டு சமாளித்து, அடுத்த காட்சிக்கு நகர்த்துகிறார் இயக்குநர். 'என்ன நீ.. எப்ப பாரு வீடியோ எடுத்துக்கிட்டு...' என நாயகியை ப்ளாக் பாண்டி ஓட்டும் காட்சி ஒரு உதாரணம்.

விவசாயத்துக்கு இனி முக்கியத்துவம் தரவேண்டியது ஏன் என்பதை பிரச்சார நெடியில்லாமல் அழகாகச் சொல்லி இருக்கிறார் அருண்.

படத்தின் நாயகனாவும் இயக்குநரே நடித்திருக்கிறார். சாதிக்கத் துடிக்கும் கிராமத்து இளைஞன், ஏதாவது ஒன்றைப் பார்த்தால், அல்லது புதிய யோசனை வந்துவிட்டால் சிரித்தபடி, அதே நினைப்பில் உலாவுகிற கேரக்டர். அதனாலேயே ஊர் அவரைக் கிறுக்கன் என்கிறது. அந்த கேரக்டரை இயல்பாகச் செய்திருக்கிறார். குறை சொல்ல முடியாத நடிப்பு.

நாயகி ஜியா, கொஞ்சம் தமன்னா மாதிரி தெரிகிறார். ஹீரோவின் கனவை நனவாக்க உதவும் அந்த கேரக்டரில் அவரும் இயல்பாக நடித்திருக்கிறார்.

அருணின் நண்பனாக வரும் ப்ளாக் பாண்டிக்கு இது திருப்பு முனைப் படம். வலிந்து திணிக்காத காமெடி.

யோக் ஜேப்பி, இளவரசு, ஞானசம்பந்தன், அருணின் அம்மாவாக வரும் பெண் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

படத்தின் பெரிய பலம் ஷார்ப் மற்றும் புத்திசாலித்தனமான வசனங்கள்.

படத்தின் கதை சூடுபிடிக்கத் தொடங்கும்போது இடைவேளை வந்துவிடுகிறது. மொத்தம் 2 மணி 17 நிமிடங்கள் ஓடுகிறது படம். சில காட்சிகளின் நீளத்தை இன்னும் கூடக் குறைத்திருக்கலாம்.

சினிமாத்தனமில்லாத கதையை வெகு இயல்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார் செல்வகுமார்.

ஷ்யாம் பெஞ்சமின் இசையில், 'கல்லா மண்ணா...', 'நீ பாதி...' பாடல்கள் இனிமை. பாடல் வரிகளும் அருமை. ஆனால் பின்னணி இசையில் கோட்டை விட்டிருக்கிறார்.

விவசாயம், மின்சாரம்.. இந்த இரண்டும்தான் ஒரு நாட்டின் வாழ்வாதாரம். ஆனால் இன்று இரண்டுமே பெரும் சிக்கலில் உள்ளன. சிக்கலைத் தீர்க்க தனக்குத் தெரிந்த ஒரு தீர்வைச் சொல்லியிருக்கிறார் அருண். அதுவும் சாத்தியமாகும் தீர்வை. வரவேற்கலாம்!

English summary
Review of debutant director - actor Arun Chidambaram's Kanavu Vaariyam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil