For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாட்டு எப்படி?

  By Staff
  |

  ரொம்ப நாளைக்கப்புறம் இளையராஜா, பின்னியெடுத்திருக்கும் படம் கரகாட்டக்காரி. பாடல்களில் ராஜா பிராண்ட் "அடி".

  ராமராஜன், கனகா நடித்து, தம்பி கங்கை அமரன் இயக்கத்தில் 85களில் வெளியாகி படு ஓட்டம் ஓடிய கரகாட்டக்காரன் அளவுக்குஇல்லாவிட்டாலும் இதிலும் சொல்லும்படியாகவே செய்திருக்கிறார் இசைஞானி.

  படத்தில் மொத்தம் 6 பாடல்கள்.

  என்னப் பெத்த ஆத்தா என்று மூகாம்பிகை அம்மன் பாட்டு. பாட்டை எழுதி பாடியும் உள்ளார் ராஜா. ராஜாவின் குரலுக்கும் இசைக்கும்இடையே கம்பீரம் போட்டி நடக்கிறது

  ஆரம்பம் முதல் தளராத பீட்டில் செல்லும் இந்தப் பாடலைக் கேட்டு தியேட்டரில் எத்தனை பேருக்கு அருள் வருமோ சொல்ல முடியாது.உருமியின் உருட்டலும், பீட்டின் மிரட்டலுமாய் பாட்டுக்கு களை கட்டுகிறது.

  காட்டுக்கிளி காட்டுக்கிளி.. பாடலின் ஆரம்பத்தைக் கேட்கும்போது மாங்குயிலே, பூங்குயிலே பாட்டு ஞாபகத்திற்கு வருகிறது. ஆனால்அதே ட்யூனை இப்படியும் கொடுக்கலாம் என்பது போல அதிலும் வித்தியாசம் செய்து, இது எப்படி இருக்கு? என்று கேட்காமல் கேட்கிறார்இளையராஜா.

  வாலியின் வரிகள், மெட்டுக்கு படு பொருத்தமாக உட்கார, கார்த்திக் குரலை கொஞ்சம் கஷ்டப்படுத்தி "ஏத்திப்" பாடியிருப்பது தெரிகிறது.அப்பாவின் அதிரடி ட்யூனுக்கு பவதாரணியும் ஈடு கொடுத்து பாடியிருக்கிறார்.

  கொட்டி வச்ச முத்தே... 6 பாடல்களில் இது தான் மெலடி. டாக்டர் லாவண்யாவின் குரலில் தென்றலைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார்இளையராஜா.

  மு.மேத்தாவின் வசீகர வரிகள். கொட்டி வச்ச முத்தே, நான் கூட்டி வச்ச ரத்தினமே என்று ஆரம்பித்து, தண்ணி வத்திப்போனவாய்க்காலுல, கண்ணீர் ஓடுதே ரத்தினமே என்ற வரிகளில் உருக வைக்கிறார்.

  "என் வீட்டில் உள்ள செல்வம், நம்பிக்கை ஒன்னுதானே" என்று கூறும்போது படத்தை பார்க்காமலேயே காட்சியை புரிந்து கொள்ளமுடிகிறது. ராஜாவுடன் வைரமுத்து இல்லாததை மேத்தா ஈடு கட்டியுள்ளார்.

  ஆனால், இந்தப் பாடலைக் கேட்கையில் விருமாண்டியில் வரும் ஒன்ன விட பாட்டு திடீரென ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை!.

  எங்க ஊரு லைலா லைலா வெஸ்டர்னையும், நாட்டுப்புற இசையையும் கலந்து அள்ளிக் கொடுத்திருக்கிறார் ராஜா. முரட்டு அடி தான்.இருந்தாலும் அதிலும் ஒரு மென்மை இழையோடுவதை சொல்லியே ஆக வேண்டும்.

  இந்தப் பாடலில் திப்புவின் குரல் படு பொருத்தம். கூடவே மஞ்சரியும் கலக்கியிருக்கிறார். இந்த மாதிரி ட்யூனுக்கெல்லாம் பெரும்பாலும்ராஜா டைம் செலவழிப்பதே இல்லை. போற போக்கில் போட்டுத் தள்ளியிருப்பார் போல, ரொம்ப இயல்பான ட்யூன்.

  "எங்க ஊரு லைலா லைலாஇங்க வாடி ஸ்டைலா ஸ்டைலா" என்று ஆரம்பிப்பதில் ஒரு ஜாலி தெரிகிறது. அப்படியே

  "மஞ்சத் தண்ணி தெளிச்சு தெளிச்சு,

  மல்லிகைப் பூ கொடுத்தா கொடுத்தா" என்று என்று வருவதிலாகட்டும்,

  "என்னோட பாட்டுல தெம்மாங்கு தெரியும்என்னோட மனசு தெரியாதா மானே" என்று கேட்பதிலாகட்டும், கிராமத்து சாடைக் காதலை கண் முண் கொண்டு வந்திருக்கிறார் கவிஞர்காமகோடியான்.

  பாட்டுக்கு இடையே வரும் மஞ்சரியின் இன்டர்லியூட் நன்றாகத்தான் இருக்கிறது.

  ஒத்தரூபா என்ற பாடலில் ராஜாவின் டண்டணக்கா, டணக்கணக்கா போட்டுத் தாக்கியுள்ளது. மாலதியின் 8 கட்டைக் குரலையும் மீறிராஜாவின் இசை பீறிடுகிறது. வார்த்தைகளுக்கு வலி தரும் இசை!

  முத்துலிங்கத்தின் வரிகளில் கிராமத்து மண்வாசனை. "கொண்டையில சொருகி வச்ச பூவு சொல்லுமடி" என்ற வரிகளில் பழையமுத்துலிங்கம் தெரிகிறார்.

  சாடமாட என்ற பாடலில் கனமான இசை தான்.

  "சாடமாட பேச்சுக்கெல்லாம் சரிப்பட்டு வருவாளா,

  சந்தனப் பொட்டுக்காரி,

  இந்த குங்குமப் பொட்டுக்காரி" என்று ஜாலியாக போகிறது பாட்டு. விஜய் ஏசுதாசும் மஞ்சரியும் குரலுக்கு அழுத்தம் கொடுத்துப்பாடியிருக்கிறார்கள்.

  "தண்ணிக்குள்ள தவமிருந்து தாவணியிலே மீனப் புடுச்சு சாப்பிடலாம்" என்ற வரிகளில் கிராமத்துக் காதலை புட்டு புட்டு வைக்கிறார்பழனிபாரதி.

  கிராமத்துக் கதையில் வில்லுப் பாட்டு இல்லாமலா? இதிலும் ஒரு வில்லுப்பாட்டு வருகிறது. டாக்டர் கிருதியா, சி. புன்னியா, டாக்டர் முத்துசெல்லக்குமார் ஆகியோர் எழுதியுள்ள பாடலை கோவை சரளா, மனோ குழுவினர் பாடியிருக்கிறார்கள்.

  படத்தின் கதையையே பாடலில் தீம் மாதிரி சொல்லியிருக்கிறார்கள். ராஜாவின் இசையில் எத்தனையோ அட்டகாசமான பாடல்களைப்பாடியுள்ள மனோ, இதில் குரூப் சிங்கர் மாதிரி பாடியிருக்கிறார்.

  கே.பி.சுந்தராம்பாள் வில்லுப் பாட்டுப் பாடினால் எப்படியிருக்கும்? கோவை கமலாவின் குரலைக் கேட்கும்போது அப்படித்தான்இருக்கிறது. ராஜாவின் இசை மிரள வைக்கிறது.

  "நேரம் போனது தெரியலியே, நெஞ்சம் இன்னும் நெறயலியே" என்று ஒரு பாடலில் வரி வருகிறது.

  இந்தப் படப் பாடல் சிடியை கேட்டு முடித்தபோது நமக்கும் அப்படித்தான் தான் தோன்றியது.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X