»   »  கருப்பசாமி குத்தகைதாரர்-விமர்சனம்

கருப்பசாமி குத்தகைதாரர்-விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தயாரிப்பு: பிரண்ட்ஸ் சினிமா.
நடிப்பு: கரன், மீனாட்சி, வடிவேலு, சக்தி குமார்.
இசை: தீனா
கேமரா: ஸ்ரீதர்.
இயக்கம்: மூர்த்தி.

கொக்கி மூலம் நாயகனானா கரண் நடித்துள்ள இரண்டாவது ஹீரோ படம் கருப்பசாமி குத்தகைதாரர். அறிமுக இயக்குநர் மூர்த்தியின் திறம்பட்ட இயக்கத்தில், கரண், வடிவேலுவின் அட்டகாச நடிப்பில் படு அலப்பறையாக வந்துள்ளது கருப்பசாமி குத்தகைதாரர்.

மதுரைதான் படத்தின் கதைக்களம். இதனால் படத்தை படு ஜாலியாக கொண்டு சென்றுள்ளனர். சிம்பிளான கதைதான். ஆனால் அதை அழுத்தமாகவும், அழகாகவும் சொல்லியுள்ளனர்.

ஜெராக்ஸ் என்ற செல்லப் பெயர் கொண்டவர் கருப்பசாமி (கரண்). கடுமையான உழைப்பாளி, மதுரை பஸ் ஸ்டாண்டில் சைக்கிள் ஸ்டாண்டை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

கருப்பசாமிக்கு மிமிக்ரியும் கைவந்த கலை. ரஜினி போல நடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் உள்ளது. சைடில் டான்ஸ் ட்ரூப்பும் வைத்து நடத்துகிறார்.

எதைப் பற்றியும் கவலைப்படாமல், படு ஜாலியாக வாழ்ந்து வரும் கருப்பசாமியின் வாழ்க்கையில், ராசாத்தி குறுக்கே வருகிறாள். மருத்துவக் கல்லூரி மாணவி ராசாத்தி.

கருப்பசாமியின் சைக்கிள் ஸ்டாண்டில்தான் தனது சைக்கிளை தினசரி நிறுத்துவாள் மீனாட்சி. அதை வைத்து இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது. கருப்பசாமியின் டீசண்ட்டான பழக்கம் ராசாத்திக்குப் பிடித்துப் போக நட்பு காதலாக மாறுகிறது.

கருப்பசாமிக்கும் ராசாத்தி மீது ஒரு இதுதான். இருந்தாலும் காதலை விட படிப்புதான் மிகவும் முக்கியம் என நினைக்கும் கருப்பசாமி, முதலில் நன்கு படித்து, நல்ல டாக்டராக வா,அதுதான் முக்கியம். மற்றதெல்லாம் அப்புறம்தான் என அறிவுரை கூறுகிறார்.

ராசாத்தியின் காதல் அவரது குடும்பத்துக்குத் தெரிய வருகிறது. படிப்பை நிறுத்த முடிவு செய்கிறார்கள். இதை அறிந்த கருப்பசாமி, ராசாத்தியின் பெற்றோரிடம் அப்படிச் செய்யாதீர்கள் என கெஞ்சுகிறார். அப்படியனால் உனது காதலை நீ மறக்க வேண்டும் என்கிறார்கள் ராசாத்தியின் பெற்றோர். இறுதியில் கடவுளின் துணையுடன் காதலில் வெல்கிறார் கருப்பசாமி.

அட்டகாசமான பாடி லாங்குவேஜுடன், திறமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து விடுகிறார் கரண். கருப்பசாமியாகவே மாறி நடித்துள்ளார். எந்த இடத்திலும் ஓவர் ஆக்டிங் செய்யவில்லை.

புதுவரவு மீனாட்சியின் நடிப்பும் தூளாக இருக்கிறது. மும்பைக்காரப் பெண்ணாக இருந்தாலும், மதுரைக்கார பெண்ணின் குணாதிசயங்களை படு லாவகமாக வெளிக்காட்டியுள்ளார்.

வடிவேலு படத்தின் பெரும் பலம். அச்சு அசல் மதுரைக்கார பார்ட்டி ஆச்சே, பின்னி எடுத்துள்ளார். வசனத்திலும் சரி, பண்ணுகிற லந்திலும் சரி, துள்ளி விளையாடியுள்ளார்.

தீனாவின் இசையில் இரு பாடல்களைக் கேட்க முடிகிறது. மற்றவை கொட்டாவிக்கு வழி வகுக்கின்றன. படத்தின் வேகமான ஓட்டத்துக்கு பாடல்கள்தான் பெரும் தடையாக இருக்கின்றன. இத்தனை பாட்டு கொஞ்சம் ஓவர் தாண்ணே.

மதுரை மற்றும் சுற்றுப் புறங்களை தனது கேமராவால் அழகாக காட்டி அசத்தியிருக்கிறார் கேமராமேன் ஸ்ரீதர்.

சங்கடப்படுத்தாமல் ரசிக்க வைத்திருக்கிறார் கருப்பசாமி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil