For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கொடி - விமர்சனம்

  By Shankar
  |

  Rating:
  2.5/5
  Star Cast: தனுஷ், த்ரிஷா, அனுபமா
  Director: துரை செந்தில்குமார்

  -எஸ் ஷங்கர்

  நடிப்பு: தனுஷ், த்ரிஷா, அனுபமா, சரண்யா, எஸ்ஏ சந்திரசேகர், காளி வெங்கட்

  ஒளிப்பதிவு: வெங்கடேஷ்

  இசை: சந்தோஷ் நாராயணன்

  தயாரிப்பு: க்ராஸ் ரூட் பிக்சர்ஸ்

  இயக்கம்: துரை செந்தில்குமார்

  தனுஷுக்கே அளவெடுத்துத் தைத்த சட்டை மாதிரி ஒரு அரசியல் கதை.

  ஆளுங்கட்சியைச் சேர்ந்த த்ரிஷாவும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த தனுஷும் 'வளரும் அரசியல்வாதிகள்'. ஆனால் நிஜத்தில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகக் காதலிக்கும் இருவரும், அந்தக் காதலுக்கு குறுக்கே அரசியலே கிடையாது என அவ்வப்போது சொல்லிக் கொள்கிறார்கள்.

  Kodi Review

  ஆனால் ஒரு கட்டத்தில் அரசியல் அதிகாரமா, காதலா என்று வரும்போது முன்னது ஜெயிக்கிறது. த்ரிஷாவின் அதிகார ஆசை வெறியாகிறது. ஒரு அதிர்ச்சியான சூழலில், தனுஷின் தம்பி (இன்னொரு தனுஷ்) அரசியலுக்கு வர நேர்கிறது.

  த்ரிஷாவின் அதிகார வெறி அடங்கியதா? காதலன் தனுஷ் என்னவானார்? தம்பி தனுஷ் என்ன சாதித்தார்? என்பதை தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்கள்.

  Kodi Review

  ஓவர் அரசியல் கிடையாது. மாவட்ட அளவில் வளரும் அரசியல்வாதிகளின் அடுத்தடுத்த நகர்வுகள், விரோதங்கள், துரோகங்கள்தான் கதையின் அடிநாதம்.

  இரட்டை வேடங்களில் முதல் முறையாக தனுஷ். ஏனோ வேலையில்லா பட்டதாரி தனுஷ் - அவர் தம்பி நினைவுக்கு வருகின்றனர். அரசியல்வாதி தனுஷ் மனசுக்குள் நிற்கிறார். அந்தப் பார்வை, தாடி, எதிராளிகளை அசராமல் எதிர்கொள்ளும் விதம்... என அனைத்திலும் தனுஷ் முத்திரை.

  Kodi Review

  குறிப்பாக அந்த வட்டிப் பார்ட்டியை பிரித்து மேயும் இடம். தம்பியாக வரும் தனுஷ், முட்டைக்காரப் பெண்ணிடம் அடிவாங்கும் அப்பாவியாக கவர்கிறார்.

  இரண்டு நாயகிகள். அனுபமா பரமேஸ்வரனுக்கு வழக்கமான நாயகி வேடம்தான். த்ரிஷாவுக்குதான் 'ஹெவி வெயிட்' வேடம். அதை அவரால் தாங்க முடியவில்லை என்பது பல காட்சிகளில் தெளிவாகத் தெரிகிறது.

  நீண்ட காலம் பேசாமல் இருக்கும் மகன், திடீரென அம்மா என அழைத்ததும் பதறி, சிலிர்க்கும் காட்சியில் சரண்யா தன் அனுபவ முத்திரையைப் பதிக்கிறார்.

  எஸ்ஏ சந்திரசேகர், விஜயகுமார், கருணாஸ், காளி வெங்கட் என நிறைய பாத்திரங்கள். ஆனால் தனியாக காமெடி எதுவும் இல்லாதது கொஞ்சம் வெறுமைதான்.

  எந்தக் கழகம் ஆட்சிக்கு வந்தாலும் பிரச்சினைகள் தீரப் போவதில்லை... மக்கள்தான் அவற்றை அனுபவித்தாக வேண்டும் என்பதை ஒரு தொழிற்சாலையின் பாதரசக் கழிவை மையப்படுத்தி சொல்லியிருப்பது சிறப்பு. இன்றைய அவசியமும் கூட.

  Kodi Review

  இடைவேளை வரை கதையின் போக்கு வித்தியாசமாக இருந்தாலும், இடைவேளைக்குப் பிறகு அடுத்த காட்சி என்ன என்பதை எளிதாகவே யூகிக்க முடிவதுதான் இந்தப் படத்தின் பலவீனம்.

  வெங்கடேஷின் ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை இரண்டுமே படத்துக்கு ப்ளஸ். ஆனால் எல்லா படத்திலும் பின்னணிக்கென்று ஒரு வசனப் பாடலைப் பாணியை மாத்திக்குங்க சந்தோஷ்!

  கதைக்களத்தை வித்தியாசமாக சிந்தித்த இயக்குநர், திரைக்கதையின் இரண்டாம் பகுதியை இன்னும் சுவாரஸ்யமாக அமைத்திருந்தால், கொடிகட்டிப் பறந்திருக்கும் இந்தப் படம்‍.

  English summary
  Dhanush's Diwali release Kodi review.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X