twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொம்பன் - விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    3.0/5

    எஸ் ஷங்கர்

    நடிகர்கள்: கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண், சூப்பர் சுப்பராயன், கோவை சரளா, தம்பி ராமய்யா

    இசை: ஜீவி பிரகாஷ் குமார்

    ஒளிப்பதிவு: வேல்ராஜ்

    தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்

    எழுத்து - இயக்கம்: எம் முத்தையா

    இந்தப் படம் வந்தால் தென் மாவட்ட மக்கள் வெட்டிக் கொண்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பார்கள் என்று சிலர் கடந்த ஒரு வாரமாக கொம்பனுக்கு எதிராக கொடி பிடிக்க, அப்படி என்னதான்யா சொல்லியிருக்காங்க என்று படம் பார்க்கும் ஆர்வம் 'சினிமாவே பிடிக்காது' என்று சொல்பவர்களுக்கும் கூட வந்திருக்கும்.

    படத்தில் அப்படி எந்த வில்லங்கமும் இல்லை. ஒரு அழகான கிராமத்துக் கதை. குறிப்பிட்ட சாதிக்குள் நடக்கிற சம்பவங்கள்தான் என்றாலும், சாதிப்பெயரைக் கூட எங்கும் குறிப்பிடவில்லை.

    ராமநாதபுரம் பரமக்குடி பக்கமுள்ள மூன்று கிராமங்களைச் சுற்றி நடக்கும் கதை இது. ஊருக்கே செல்லப் பிள்ளை, முரட்டுப் பிள்ளையான கார்த்திதான் கொம்பன் என்கிற கொம்பையா பாண்டியன்.

    Komban Review

    பக்கத்து கிராமத்து திருவிழாவுக்குப் போகும்போது லட்சுமி மேனனைப் பார்த்து காதல் கொள்கிறார். இருவருக்குமான நெருக்கத்தைப் பார்த்து, திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். அப்போது லட்சுமியின் பாசமிக்க தந்தை ராஜ்கிரண், தனக்கு வரப்போகும் மருமகனைப் பற்றி அவரது கிராமத்துக்கே போய் விசாரிக்க, அது தெரிந்து கோபம் கொள்கிறார் கார்த்தி. ஆனாலும் மணமகள் தன் காதலி லட்சுமி என்பதை அறிந்து, திருமணம் செய்து கொள்கிறார். தன் அப்பாவும் கூடவே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு லட்சுமி திருமணம் செய்து கொள்ள, அதற்கு வேண்டா வெறுப்பாக சம்மதிக்கிறார் கார்த்தி.

    வீட்டுக்குள் மாமனாரை மரியாதையில்லாமல் பேசும் கார்த்தி, ஒரு சூழலில் கை நீட்டி அடித்துவிட, லட்சுமி கோபத்துடன் தந்தையைக் கூட்டிக் கொண்டு வெளியேறுகிறார்.

    மாமனார் தன்மீது வைத்துள்ள பாசம் புரிந்து அவரிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் அழைத்துவருகிறார். அப்போதுதான் கார்த்தி மீதான பழைய பகை அவரது குடும்பத்தையே காவு வாங்கப் பார்க்கிறது. அதிலிருந்து குடும்பத்தை எப்படிக் காப்பாற்றினார் கார்த்தி என்பது மீதி.

    Komban Review

    தெக்கத்தி வாசமும் அதன் புழுதியும் முரட்டுப் பாசமும் தெறிக்கும் வன்முறையும் கலந்து கட்டி அடிக்கிறது படம் முழுக்க. இப்படி ஒரு கிராமத்துப் படம் பார்த்து ரொம்ப நாளாச்சு என்று சொல்லும் வகையில் காட்சிகள்.

    கார்த்தி பெரிய கொம்பன் என்பதால், அனைவரும் அவரிடம் அடி வாங்கிக் கொண்டே இருப்பதும், இடைவேளைக்குப் பிறகு இப்படித்தான் காட்சிகள் வரப் போகின்றன என யூகிக்க முடிவதையும் தவிர்த்துப் பார்த்தால் கொம்பன் மீது குறை சொல்ல ஒன்றுமில்லை.

    கார்த்திக்கு இந்தப் படம் இன்னொரு பருத்தி வீரன் என்றுகூடச் சொல்லலாம். கொம்பையா பாண்டியனாகவே மாறியிருக்கிறார். சண்டை என்று வந்துவிட்டால் போதும், வேட்டியை தூக்கிக் கட்டிக் கொண்டு எதிராளிகளைப் புரட்டி எடுக்கிறார். பார்க்க அச்சு அசல் சண்டை மாதிரிதான் தெரிகிறது.

    லட்சுமி மேனனுடன் காதல், மாமனார் ராஜ்கிரணுடன் மோதல் இரண்டையுமே ரசிக்கும்படி செய்திருக்கிறார். மனம் திருந்தி மாமனார் வீட்டுக்குப் போகும்போது மாமனார் வாங்கிக் கொடுத்த அந்த பஞ்சுமிட்டாய் சட்டையைப் போட்டுக் கொண்டு போவது அழகு.

    கார்த்தி இந்தப் படத்தின் மூலம் புதிய நவரச நாயகனாகியிருக்கிறார்.

    Komban Review

    ராஜ்கிரண் நடிக்கிறார் என்றாலே, அது அர்த்தமுள்ள படமாகத்தான் இருக்கும் என்ற நம்பகத்தன்மை வந்துவிட்டது. அந்த அளவுக்கு பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கிறார் தனக்கான பாத்திரங்களை. இதில் முத்தையாவாக வந்து மனசில் சிம்மாசனமிட்டு அமர்ந்துவிடுகிறார். கிராமத்துக்காரர்கள் எல்லாரும் முரட்டு சாதி வெறியர்கள் என்ற கருத்தை உடைத்து நொறுக்கும் பாத்திரம் இவருடையது. மருமகன் தன்னை மரியாதையின்றிப் பேசினாலும், அதில் குறைகாணாது, புது அர்த்தம் தரும் ராஜ்கிரணை அப்படிப் பிடித்துப் போகிறது.

    லட்சுமி மேனனுக்கும் தெக்கத்திக் கதைகளுக்கும் அப்படி ஒரு ராசி. அசல் தெக்கத்திப் பெண்ணாகத்தான் அவரைப் பார்க்க முடிகிறது. சுந்தரபாண்டியன், குட்டிப் புலி, பாண்டிய நாடு... இப்போது கொம்பன். தன் அப்பாவுக்கு மீன் வறுத்துக் கொடுத்து, சரக்கெடுத்து வைக்கும் பாங்கிருக்கிறதே.. அடடா! கணவனையும் விட்டுக் கொடுக்காமல், அப்பாவுக்கும் அவமானம் நேராமல் சமாளிக்கும் அந்த பாத்திரத்தை இத்தனை சிறப்பாகச் செய்ய லட்சுமியை விட்டால் இன்றைக்கு வேறு நடிகையே கிடையாது!

    படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொருவர் வில்லனாக வரும் சூப்பர் சுப்பராயன். என்னமா மிரட்டுகிறார்!

    கோவை சரளா, கருணாஸ், வேல ராமமூர்த்தி என நடித்த அத்தனைப் பேரும் நம்மை பரமக்குடி பக்கத்துக்கே அழைத்துப் போய்விடுகிறார்கள்.

    வேல்ராஜின் ஒளிப்பதிவு அத்தனை யதார்த்தம். எந்தக் காட்சியிலும் சினிமாத்தனமே எட்டிப் பார்க்காத அளவுக்கு, குறிப்பாக சண்டைக் காட்சிகளில் வேலை பார்த்திருக்கிறார்.

    அதே போல ஜீவி பிரகாஷ். ரொம்ப நாளைக்குப் பிறகு அவரது பாடல் கறுப்பு நிறத்தழகி.. மனசில் ஒட்டிக் கொள்கிறது. பின்னணி இசையும் மிகப் பொருத்தம்.

    Komban Review

    வசனங்கள் படத்தின் இன்னொரு ஹீரோ என்று கூடச் சொல்லலாம்.

    'சாதி சனமெல்லாம் கோயிலுக்குப் போகுது.. நீயும் வாப்பா..'

    'சனம் இருக்கிற இடத்துக்கு வரலாம், கூடவே சாதியும்ல வருது அங்க எதுக்கு நான் வரணும்!'

    "ஏலேய் ஒழுங்கா பள்ளிக்கூடத்துக்குப் போடா.. இல்லனா அதோ .. வெள்ளையும், சொள்ளையுமா பெருசா மீசை வச்சிட்டு வாராய்ங்க பாரு.. அவிங்களப்போல உருப்படாம போயிருவடா.."

    ‘பெத்தவங்க வெறும் நெற்றிதான். அதுல இருக்கிற பொட்டுதாம்மா புருஷன். நெத்தி எவ்வளவு பெரிசா இருந்தாலும் பெருமையில்ல. ஆனா அதுல பொட்டு நிரந்தரமா இருக்கணும்'

    - தனி வசனப் புத்தகமாகவே போட வேண்டிய அளவுக்கு நறுக்குத் தெறிக்கும் வசனங்கள்.

    இவ்ளோ சொல்லியாச்சில்ல.. அப்புறம் ஏன் இன்னும் போஸ்டரையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டு.. கிளம்புங்க கொம்பனுக்கு!

    English summary
    Komban is a nice family entertainment with excellent scenes, punching dialogues and beautiful narration. A real feelgood movie and worth to watch.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X