twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கூடல் நகர்-விமர்சனம்

    By Staff
    |

    மதுரைப் பின்னணி, இரட்டை வேடத்தில் பரத், சந்தியா, பாவனா என இரு ஜில் ஜில் ராணிகளுடன் பக்காவான திரை விருந்தை படைத்துள்ளார் சீனு ராமசாமி.

    காதல் படத்தின் மெகா ஹிட்டுக்குப் பின்னர் பரத்தும், சந்தியாவும் கூடியுள்ள படம் கூடல் நகர். படத்தில் காணப்படும் ஒரிரு குறைகளை சீனு ராமசாமியின் நிறைவான இயக்கமும், கதையை வித்தியாசப் படுத்திக் கொடுத்த விதமும் மறக்கச் செய்து படத்தை ரசித்துப் பார்க்க வைத்திருக்கிறது.

    வழக்கமான கதைதான் என்று கூறி விட முடியாதபடி கொஞ்சம் போல மெனக்கெட்டு திரைக்கதையை திவ்யமாக அமைத்துள்ளார் சீனு. இதற்காக அவருக்கு கொடுக்கலாம் ஒரு ஷொட்டு.

    கதையில் பெரிய அளவில் வித்தியாசம் காட்ட முடியாது என்பதால் கேரக்டர்களில் சின்னச் சின்ன சுவாரஸ்யங்களைச் சேர்த்து விவரமாக எஸ்கேப் ஆகியுள்ளார் சீனு.

    மதுரைக்கு அருகே உள்ள திருமங்கலத்தில் கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. சூர்யனாகவும், சந்திரனாகவும் இரட்டை வேடத்தில் வருகிறார் பரத். சூரியன் அமைதியானவன். இவன்தான் அண்ணன். உள்ளூர் நூலகத்தில் வேலை பார்க்கிறான், படு சமர்த்துப் பார்ட்டி.

    ஆனால் தம்பி சந்திரன் படு அலப்பறையான பார்ட்டி. தடாலடிப் பேர்வழி. யாருக்கும் பயப்படாதவன், தெனாவட்டானவன். அரசு மருத்துவமனையில் பிணம் தூக்கும் வேலை செய்து வருகிறான்.

    அமைதியான சூரியனுக்கும், உள்ளூர் தாதா எம்.எல்.ஏ. பிதாமகன் மகாதேவனின் மகள் பாவனாவுக்கும் இடையே காதல் மலருகிறது. இந்தக் காதல் மகாதேவனுக்குத் தெரிய வருகிறது. ஆட்களைக் கூப்பிட்டு சூரியனை அஸ்தமனமாக்கி விட உத்தரவிடுகிறார்.

    இதை அறிந்து கொண்ட சூரியனும், பாவனாவும் அங்கிருந்து எஸ்கேப் ஆகிறார்கள். ஆனால் பஸ்சில் ஏறவிருந்த நேரத்தில் சூரியனைக் கொன்று விடுகிறார்கள் மகாதேவனின் அடியாட்கள். பாவனாவை இழுத்துச் செல்கிறார்கள். ஆனால் பாவனா அடுத்த நாளே தற்கொலை செய்து கொள்கிறார்.

    அண்ணனைக் கொன்ற மகாதேவனைப் பழிவாங்க கிளம்புகிறான் சந்திரன். அவனது முயற்சிகளுக்கு காதலியான சந்தியா உதவுகிறார். மகாதேவன் என்ன ஆகிறார், கடைசியில் படம் பார்க்கும் ரசிகர்கள் என்ன ஆகிறார்கள் என்பதுதான் கூடல் நகரின் கதைச் சுருக்கம்.

    படத்தின் முதல் பாதி குட்ஸ் ரயில் போல மெதுவாக நகருகிறது. ஆனால் பிற்பாதியில், எக்ஸ்பிரஸ் வேகம் பெற்று எகிறி ஓடுகிறது. படத்தில் பல காட்சிகள் ரசிகர்களை தலையைப் பிராண்டி தம் அடிக்க ஓட வைக்கிறது. பாட்டுக்களைக் கேட்பதை விட பாப்கார்ன் சாப்பிடுவதிலேயே ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    படத்தின் கடைசி 20 நிமிடக் காட்சிகள்தான் படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. தனக்குக் கொடுக்கப்பட்ட இரட்டை வேடங்களையும் சிறப்பாக செய்துள்ளார் பரத். குறிப்பாக அவரும், சந்தியாவும் வரும் காட்சிகளில் கலகலப்புக்கும், அசத்தலுக்கும் அளவே இல்லை.

    ஏற்கனவே காதல், வெயில், எம் மகன் என மதுரைப் பின்னணிப் படங்களில் நடித்த அனுபவம் இருந்ததால் இப்படத்தில் மதுரை பாஷையில் பேசி நடிக்க சிரமப்படவே இல்லை பரத். அச்சு அசல் மதுரைக்கார பயலாக மிரட்டியுள்ளார்!

    உருவத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்யாமல் கேரக்டர், வசன உச்சரிப்பு உள்ளிட்ட சிலவற்றில் நல்ல வித்தியாசம் காட்டி பரத்தை நடிக்க வைத்துள்ளார் சீனு ராமசாமி.

    பாவனாவை விட சந்தியாவுக்கே நடிக்க நல்ல வாய்ப்பு. அதிலும் கண்டாங்கிச் சேலையில் உள்ளத்தில் ஊடுறுவி உசுருக்குள் உட்கார்ந்து ரொம்பவே ரவுசு பண்ணுகிறார்.

    பாவனா, பாவம். பாதியிலேயே அவரை முடித்து விடுவதால் நடிக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டது.

    சபேஷ் முரளியின் பாட்டுக்களை லயித்துக் கேட்க முடியவில்லை. மதுரையில் உள்ள பெரியார், அண்ணா, பழங்காநத்தம், ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்டுகளை ஒரே இடத்தில் வைத்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு சத்தம்!

    சாதாரண இரட்டை வேடக் கதையை ஜாலியாக கொண்டு சென்றுள்ளார் சீனு ராமசாமி.

    ஒரு தடவை பார்க்கலாம்ண்ணே!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X