For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கும்கி - விமர்சனம்

  By Shankar
  |

  நடிகர்கள்: விக்ரம் பிரபு, தம்பி ராமையா, லட்சுமி மேனன்

  இசை: டி இமான்

  பிஆர்ஓ: ஜான்சன்

  ஒளிப்பதிவு: எம் சுகுமார்

  தயாரிப்பு: திருப்பதி பிரதர்ஸ்

  இயக்கம்: பிரபு சாலமன்

  ஒரு மெகா கொம்பன் யானை, அதை சமாளிக்க ஒரு டூப்ளிகேட் கும்கி யானை, இரு ஒரிஜினல் காதலர்கள்.... நெஞ்சை அள்ளும் அருவியும் அழகிய மலைச் சாரலும் பின்னணியாக... படிக்கும்போதே இதமாக இருக்கிறதல்லவா... பார்க்கும்போதும் சில காட்சிகள் அப்படித்தான் உள்ளன. ஆனால்...? மீதியையும் படிச்சு முடிங்க!

  ஆதிக்காடு... அற்புதமாக வளங்கள் நிறைந்த மழைக் காடு. வெளிக் காற்று படாமல் தாங்களுண்டு தங்கள் காடுண்டு என்று அமைதியாய் வாழும் மக்கள். ஆனால் அறுவடை நெருங்கும்போதெல்லாம் கொம்பனின் அட்டகாசம் தாங்காது. கொம்பன்? அந்த மலையை அடிக்கடி அதகளப்படுத்தும் காட்டு யானை.

  இந்தத் தொல்லையிலிருந்து தப்பிக்க, ஒரு கும்கி யானையை வரவழைத்து கொம்பனை விரட்டலாம் என முடிவு செய்கிறார்கள் ஊர்க்காரர்கள். சந்தர்ப்ப சூழல் காரணமாக, மாணிக்கம் என்ற டூப்ளிகேட் கும்கி, அதன் பாகன் விக்ரம் பிரபுவுடன் ஊருக்குள் நுழைகிறது. தங்களை காக்க வந்த தெய்வமாய் ஊர்மக்கள் அவர்களை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.

  ஆனால் வந்த இடத்தில் விக்ரம் பிரபுவுக்கும் ஊர்த் தலைவர் மகள் லட்சுமி மேனனுக்கும் காதல் அரும்புகிறது. காதல் வெளியில் தெரிந்தால் ஊரே ஒன்று சேர்ந்து கொன்றுவிடும். இந்த யானை ஒரிஜினல் கும்கி இல்லை... கோயில் யானை என்பது தெரிந்தாலும் நிலைமை அதேதான். இந்த சூழலை எப்படி சமாளிக்கிறான் ஹீரோ, கொம்பனை எப்படி விரட்டியடிக்கிறது மாணிக்கம் என்பதெல்லாம் க்ளைமாக்ஸில்.

  கதை என்று பிரதானமாக எதுவும் இல்லை. ஆனால் அந்த சூழல் கதையை உருவாக்கியிருக்கிறது. காட்சியமைப்பில்தான் இன்னும் சிரத்தை காட்டாமல், யானை மற்றும் காட்டருவிகளின் பிரமாண்டத்திலேயே மயங்கிப் போய்விட்டார் இயக்குநர்.

  விக்ரம் பிரபுவுக்கு இது முதல் படம். அந்தத் தடுமாற்றம் கொஞ்சம் தெரிந்தாலும், பல காட்சிகளில் சிவாஜி குடும்ப வாரிசு என்ற அடையாளம் மறைந்து, பொம்மனாகவே அவர் தெரிவதை மறுப்பதற்கில்லை.

  லட்சுமி மேனன் ஒரு மலைகிராமப் பெண்ணாகவே மாறியிருக்கிறார். அந்தக் கண்கள், உதடுகள் ஏக இம்சை செய்கின்றன!

  தம்பி ராமையாவும் அவருக்கு எடுபிடியாக வரும் அந்த தம்பியும் இல்லாமல் போயிருந்தால் ரொம்ப 'ராவாக' இருந்திருக்கும் இந்தப் படம்.

  ஜோ மல்லூரி, ஜூனியர் பாலையா, அந்த பாரஸ்ட் ரேஞ்சர்கள், மாணிக்கம் யானை... குறையில்லாத நடிப்பு.

  க்ளைமாக்ஸில் வந்து அந்த யானை சண்டைக் காட்சியில் கிராபிக்ஸை இன்னும் பக்காவாக செய்திருக்கலாம். எளிதில் அவை கிராபிக்ஸ் என்று தெரிந்துவிடுவதால், ஒரு முழுமை கிடைக்காமல் போகிறது படத்துக்கு.

  படத்தின் நிஜமான ஹீரோ ஒளிப்பதிவாளர் எம் சுகுமார். பிரமாதம் என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமும் அந்த அருவி காட்சிதான். ஆதிக்காடு கிராமத்தை பார்த்த பிறகு, அந்த மலை கிராமம் எங்கே என்று பலரும் சுகுமாரை கேட்டுத் துளைக்கக் கூடும்.

  இமானின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. பழைய பாடல்கள் அல்லது ட்யூன்களை நினைவூட்டினாலும் பின்னணி இசையும் ஓகே.

  படம் ஆரம்பித்ததிலிருந்து பெரிதாய் எதையோ எதிர்ப்பார்க்க வைத்துக் கொண்டே இருக்கிறார் இயக்குநர். விளைவு, க்ளாமாக்ஸ் நெருங்கும்போதுகூட, ஏதாவது ஒரு அதிர்வை எதிர்நோக்குகிறது மனசு. ஆனால் டைட்டில் ஓட ஆரம்பித்துவிட, அபாரமான ஏமாற்றத்தோடு சீட்டைவிட்டு எழுந்திருக்க வேண்டியதாகிறது. அங்குதான் சறுக்கிவிட்டது கும்கி!

  -எஸ். ஷங்கர்

  English summary
  Kumki is a movie about man and wild elephant’s conflict in a village surrounding a forest area. The film is interesting in parts but disappoints on the whole.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X