twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குற்றம் 23!!

    By Shankar
    |

    மற்ற வகை படங்களை ஒப்பிடும்போது துப்பறியும் கதைகளைப் பொறுத்தவரை ஆடியன்ஸோட கவனத்தை ஈர்ப்பது ரொம்ப சுலபம். மற்றபடங்களில் ஆடியன்ஸை மகிழ்விப்பதற்கும், அவர்கள படத்தோட ஒன்ற வைக்கவும் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். ஆனா இந்த துப்பறியும் கதைன்னு ஆரம்பிச்சிட்டாலே ஒரு ஈர்ப்பும் எதிர்பார்ப்பும் அதுவாகவே பார்வையாளர்களை தொத்திக்கும்.

    பெரும்பாலும் துப்பறியும் கதைகளோட கதைன்னு எடுத்துக்கிட்டா, படத்தோட ஆரம்பத்துல ஒரு கொலை அல்லது அடுத்தடுத்த ரெண்டு மூன்று கொலைகள். அந்தக் கொலைகாரன் யாருன்னு கண்டுப்புடிக்கிறதுதான் படம் முழுவதுமான தேடலா இருக்கும். இந்தத் துப்பறியும் கதைகளோட வெற்றிங்குறது யாருமே ஊகிக்க முடியாத ஒரு நபர கொலைகாரன்னு அடையாளம் கண்டுபிடிக்கிறதுலதான் இருக்கு. அந்தக் கொலைகாரன் யார் அப்டிங்குறதப் பொறுத்தும், அவனுக்கும் அந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பொறுத்தும், கொலைக்காரன் என்ற உண்மை முகத்தை தவிற அவன் நமக்கு எப்படி பரிட்சையமாய் இருக்கிறான் என்பதைப் பொறுத்தும்தான் அந்தக் கதை நமக்கு பிடிக்கிறதும் பிடிக்காததும்.

    Kutram 23 - Audience review

    இவனா இருக்காதுன்னு நாம நினைக்கிற ஒருத்தன கொண்டு வந்து கடைசில குற்றவாளியா காண்பிக்கும்போது தான் பார்ப்பவங்களுக்கு ஒரு திருப்தி. உதாரணத்துக்கு அதே கண்கள்ல ஆரம்பிச்சி, மெளனம் சம்மதம், மலபார் போலீஸ், யாவரும் நலம்னு இப்டி பல படங்கள்ல நாம எதிர்பார்க்காத ஒரு நபர்தான் கொலைகாரனா இருப்பாங்க. அந்த ஒரு சர்ப்ரைஸ்தான் அந்தப் படங்களின் வெற்றி. சமீபத்துல வெளியாகி ரசிகர்களோட பெரும் வரவேற்பை பெற்ற ஒரு படம் துருவங்கள் 16. இந்தப் படத்தைப் பொறுத்த வரை படத்தோட மேக்கிங், கதையை கொண்டு போன விதம் எல்லாமே ஓக்கே. ஆனா கடைசில கொலைகாரன் யாருன்னு வெளிக்காட்டும்போது, அதுவரைக்கும் பிக்சர்லயே இல்லாத ஒரு புது கேரக்டர கொண்டு வந்து நிறுத்துவாங்க. அது எப்படி ஆடியன்ஸ் கிட்ட ஒரு திகைப்பை உண்டாக்கும்?

    சமீபத்துல ஒரு புதுப்பட விளம்பரம். ஒருவாரமா ஒருத்தர் பின்னால திரும்பி நிக்கிற போஸ்டரப் போட்டு இவர் யார்னு கெஸ் பன்னுங்க...யாருன்னு கெஸ் பன்னுங்கன்னு ஒரே அளப்பர... கடைசில ஒருவாரம் கழிச்சி அந்த போஸ்டர்ல அவர் முகத்த போட்டு 'Introducing Sachin' ன்னு போட்டுருக்கானுங்க. ஏம்பா இப்பதான் அறிமுகப்படுத்தறீங்க.. அவன எப்புடிய்யா மக்கள் கெஸ் பன்னுவாய்ங்க? லூசாடா நீங்கல்லாம்?' அந்த மாதிரிதான் துருவங்கள் 16 சமாச்சாரமும். ஆனா படம் அந்த ஒரு ட்விஸ்ட்ட மட்டும் நம்பி இல்லாம , நிறைய சின்ன சின்ன ட்விஸ்ட்லாம் வச்சி மேட்ச் பண்ணிருந்ததால அது அவ்வளவு பெரிய குறையா தெரியல.

    இப்ப இந்தக் கொலைகாரன வச்சே படத்தோட வகைகளப் பிரிக்கலாம். ஒரு கொலை நடக்குது. கொலைகாரன் யாருன்னு படத்துல இருக்கவங்களுக்கும் தெரியல. பாக்குற நமக்கும் தெரியலன்னா அது சஸ்பென்ஸ் த்ரில்லர். அதே அந்தக் கொலைகாரன் யாருன்னு பாக்குற நமக்கு தெரிஞ்சி, படத்துல இருக்க கேரக்டர்களுக்கு அது தெரியலன்னா அது த்ரில்லர். கொலைகாரன் யாருன்னு படம் பாக்குற நமக்கும் தெரிஞ்சி , படத்துல நடிக்கிற கேரக்டர்களுக்கும் தெரிஞ்சா அது வெறும் மசாலா. பெரும்பாலான கதைகள் சஸ்பென்ஸ் த்ரில்லரா ஆரம்பிச்சி, ஒரு கட்டத்துல த்ரில்லரா மாறி, கடைசில வெறும் மசாலாவா முடிவடையும். படம் பார்ப்பவர்களோட சுவாரஸ்யம் அந்தப் படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் கேட்டகிரிலருந்து த்ரில்லரா மாறாத் தொடங்கும்போதுலருந்து குறைய ஆரம்பிச்சிடும். இப்ப நம்ம குற்றம் 23 எந்த வகைன்னு பாக்கலாம்.

    மேற்கூறிய அதே பொதுவான கதைதான் இந்தப் படத்துக்கும். முதல் காட்சில ஒரு கொலை.. அதை விசாரிக்க ஆரம்பிக்கிற அருண் விஜய், தொடர்ந்து நடக்கும் சம்பங்கள், அதன் மூலமா ஏற்படுற பிரச்சனைகள்தான் இந்த குற்றம் 23. எழுத்தாளர் ராஜேஷ்குமாரோட கதையத் தான் படமாக்கிருக்காங்க. இந்த மாதிரி க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைகள் எழுதுறதுல ராஜேஷ்குமார அடிச்சிக்க ஆள் இல்லை. மனுஷன் பிரிச்சி எடுப்பாரு.

    இந்திரா சவுந்தர்ராஜன்லாம் கூட இந்த மாதிரி சில ட்ரை பன்னிருக்காரு. ஆனா அவரு பொசுக்குன்னு சாமி வந்து கொன்னுருச்சி.. பேய் வந்து கடிச்சிருச்சி. சித்தர் மந்திரம் போட்டு மாத்தி விட்டுட்டாருன்னு அள்ளி விட்டுருவாரு. பேய் கதைகள் விஷூவலா பாக்கத்தான் நல்லாருக்கும். படிக்க அவ்வளவு நல்லாருக்காது. ஆனா நம்ம ராஜேஷ்குமாரோட ஸ்பெஷலே இவரோட கதைகள் அனைத்தும் அவ்வளவு த்ரில்லிங்கா இருக்கும். ஆனா மூட நம்பிக்கைகள்னு எதுவும் இருக்காது. என்ன மாதிரியான காட்சி வச்சாலும் கடைசில அதுக்கு ஒரு அறிவியல் ரீதியான காரணம் சொல்லித்தான் முடிப்பாரு. அது உண்மையோ இல்லை பீலாவோ.. ஆனா மூட நம்பிக்கைகள் மாயாஜாலங்கள்லாம் ராஜேஷ்குமார் கதைகள்ல இருக்காது.

    குற்றம் 23 ராஜேஷ்குமாரோட கதைக்கு எந்தக் களங்கமும் வராம அவரோட கதையைப் படிக்கும்போது எவ்வளவு சுவாரஸ்யமா இருக்குமோ, அதே அளவு சுவாரஸ்யத்தோட படமாக்கிருக்காங்க. அசிஸ்டண்ட் கமிஷனரா அருண் விஜய் ஆளு செம ஃபிட்டா இருக்காரு. ஹீரோயினும் சூப்பர். வெறும் பாட்டுக்காக யூஸ் பண்ற ஹீரோயினா இல்லாம அவங்களச் சுத்தியும் கதை நடக்குறதால, அருண் விஜய் ஹீரோயின் லவ் போர்ஷனும் நல்லா வந்துருக்கு.

    அசிஸ்டண்ட் கமிஷனர் அருண் விஜய்க்கு அல்லக்கைய்யா தம்பி ராமைய்யா... எப்பவும் போல ரொம்ப அருக்காம ரொம்ப அளவா பேசி ஒண்ணு ரெண்டு வசனங்கள்ல சிரிக்கவும் வச்சிருக்காரு. வில்லனாக வம்சி. இவர் மூஞ்சி மட்டும் என்னன்னு தெரியல நம்ம தமிழ் சினிமாவுக்கு சூட் ஆகாத மாதிரியே ஒரு ஃபீலிங். வேற யாரயாவது போட்டுருக்கலாம். அவரோட பாத்திரத்தை இன்னும் கொஞ்சம் தெளிவாவும் பவர்ஃபுல்லாவும் இயக்குனர் உருவாக்கிருக்கலாம்.

    Kutram 23 - Audience review

    'ஈரம்' இயக்குநர் அறிவழகன் நல்லாவே பண்ணிருக்காரு. முக்கால்வாசி ராஜேஷ்குமார் நாவல அப்டியே எடுத்துட்டு கடைசில மட்டும் கொஞ்சம் டைரக்டர் டச்சுக்கு இவரு சொந்த சரக்கை இறக்கிருப்பாரு போல. அந்த கொஞ்ச ஏரியாதான் படத்துல டல் அடிக்குது. மேல சொன்ன மாதிரி படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் டைப்லருந்து த்ரில்லர் டைப்புக்கு க்ளைமாக்ஸுக்கு ஓரு அரை மணி நேரம் முன்னால மாறுது. அந்த அரை மணி நேரப் படம் கொஞ்சம் ஆவரேஜ் தான்.

    வேட்டையாடு விளையாடு படம் முதல் பாதி பாக்கும்போது அப்டியே ராஜேஷ்குமார் நாவல் ஞாபகம்தான் வரும். இந்தப் படத்தப் பாக்கும்போது எனக்கு ஒரு இடத்துல வேட்டையாடு விளையாடு ஞாபகம் வந்துச்சி. கவுதமும் ரெண்டு மூணு ராஜேஷ்குமார் நாவல் படிச்சிருப்பாரு போல. ஹிஹி.. இந்தப் படம் பாக்குறப்போ ஒரு காட்சில அப்டியே வேட்டையாடு விளையாடு ஞாபகம் வந்துச்சி. அது இந்தப் படத்தோட ஒரு முக்கியமான சீன். படம் பார்த்தவங்க கொஞ்சம் ரெண்டயும் ஒப்பிட்டுப் பாருங்க.

    படத்துல ரெண்டு சண்டைக் காட்சிகள் எடுத்துருக்காங்க. ஆனா அத எவனும் பாக்கக் கூடாதுங்குறதுக்காக கேமராவ ஆட்டி ஆட்டி கண்ணு வலி வர வச்சிருடுறாங்க. பாடல்கள் இல்லாதது இன்னொரு ஆறுதல். திரையில ஒரே ஒரு பாட்டு தான் வருது. இந்தப் படத்தோட விளம்பரத்துக்கு டிவில யூஸ் பண்ற 'முகம் தெரியா உயிர் துடிக்க' பாடலும் பாடல் வரிகளும் செம சூப்பரா இருக்கும். அந்தப் பாடல் படத்துல இல்லாதது கொஞ்சம் வருத்தமே.

    கடைசி 20 நிமிடம் மட்டும் இன்னும் கொஞ்சம் சிறப்பா எடுத்துருக்கலாம். மத்தபடி படம் கண்டிப்பா பாக்கலாம்.

    - முத்து சிவா

    English summary
    Audience review of Arun Vijay starrer Kutram 23.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X