twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லீலை - திரைப்பட விமர்சனம்

    By Shankar
    |

    நடிகர்கள்: ஷிவ் பண்டிட், சந்தானம், மான்சி பரேக்

    இசை: சதீஷ் சக்ரவர்த்தி

    ஒளிப்பதிவு: வேல்ராஜ்

    இயக்கம்: ஆன்ட்ரூ லூயிஸ்

    தயாரிப்பு: டி ரமேஷ் பாபு

    நீண்ட காலமாக தயாரிப்பிலிருந்த சின்னப் படம். ஆனால் ரசிக்க வைக்கும் முயற்சி. ஆள்மாறாட்டக் கதைதான். ஆனால் சொன்ன விதம், பார்ப்பவர் முகத்தில் புன்னகையைத் தவழ விடுகிறது.

    படிக்கும் காலத்தில் கருணை மலர் என்ற பெண்ணின் முகத்தைப் பார்க்காமலே போனில் கடலைப் போட்டே லவ்வாகிறான் ஹீரோ. ஆனால் ஒரு நாள் இருவருக்கும் போனில் சண்டையாக, முகத்தைப் பார்க்காமலேயே பிரிந்தும் விடுகிறார்கள்.

    சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு நிறுவனத்தின் வேறு வேறு தளங்களில் இருவருக்கும் வேலை. எதேச்சையாக ஒரு போன் காலில் மீண்டும் கருணை மலருடன் பேசும் வாய்ப்பு ஹீரோவுக்கு. ஆனால் அந்த வாய்ப்பும் சண்டையில் முடிகிறது. ஒரு நாள் தன் காதலி யார் என்பதைப் பார்த்து விடுகிறான். தன் உண்மைப் பெயரில் போய் பேசினால் சண்டை தொடரும் என்று நினைத்து, தன் பெயரை மாற்றிக் கொண்டு அவளிடம் அறிமுகமாகிறான். இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

    ஹீரோ உண்மையை சொன்னானா, காதலர்கள் சேர்ந்தார்களா என்பதெல்லாம் தியேட்டரில் பார்க்க வேண்டிய சமாச்சாரம்.

    புதுமுகம் ஷிவ் பண்டிட் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். ஐடி கம்பெனி கதைகளுக்கே உரித்தான அப்பர் மிடில் கிளாஸ் முகம், உடல் மொழி. இயல்பாக நடிக்க முயற்சித்துள்ளார்.

    கருணை மலராக வரும் மான்சி பரேக் களையாக இருக்கிறார். எளிதில் பார்வையாளர்களை ஈர்க்கிறார். நாயகன் - நாயகி இருவருமே நகரத்து மேல்தட்டு இளைஞர்களின் நகல்களாக உள்ளனர். நாட்டின் இருவேறு உலகங்களுக்கிடையிலான 'கேப்' அதிகரித்துக் கொண்டே போவது தெரிகிறது!

    இவர்களின் தோழியாக வரும் சுஹாசினி ராஜ் பரவாயில்லை.

    சந்தானத்தின் காமெடி தனி ட்ராக். படத்தின் சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொள்வதில் முக்கியப் பங்கு சந்தானம் ட்ராக்குக்கு உண்டு.

    தொழில்நுட்ப ரீதியில், வேல்ராஜின் கேமரா பிரமாதப்படுகிறது. சதீஷ் சக்ரவர்த்தியின் இசை சுமாருக்கும் கீழே.

    ஹீரோ வேலை பார்க்கும் கம்பெனியில் ஹெச் ஆர் மேனேஜராக இருக்கிறார் ஹீரோயின். ஆனாலும் அவருக்கு ஹீரோவைத் தெரியவில்லை என்பது போன்ற ஓட்டைகளும் உள்ளன. அதேபோல பெயரை மாற்றிக்கொண்டு பேசும் தன் முன்னாள் காதலன் குரல் கூடவா அவருக்குத் தெரியாது?

    எழுதி இயக்கியிருக்கும் ஆன்ட்ரூ லூயிஸுக்கு இது முதல் படம். ஆனால் அப்படிச் சொல்ல முடியாத அளவுக்கு நேர்த்தியான இயக்கம். இதற்காக, சில இடங்களில் அவர் தெரிந்தே மீறியிருக்கும் லாஜிக் மீறல்களை மன்னிக்கலாம்.

    ரெண்டேகால் மணி நேரம்... வெயிலுக்கு ஜில்லுன்னு ஒரு 'மால்'ல படம் பாக்க போகணும்... எந்தப் புதுப்படத்துக்குப் போகலாம் என்று கம்ப்யூட்டரில் தேடுவோருக்கு லீலை ஓகே!

    -எஸ். ஷங்கர்

    English summary
    Leelai is a cool light-hearted romantic movie from debutant director Andrew Louis. The film at 2 hours and 15 minutes is an enjoyable one.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X