»   »  மாவீரன் கிட்டு விமர்சனம்

மாவீரன் கிட்டு விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
3.5/5
-எஸ் ஷங்கர்

நடிகர்கள்: விஷ்ணு விஷால், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஸ்ரீதிவ்யா, ஹரீஷ் உத்தமன், நாகி நீடு, ஃபெரேரா

ஒளிப்பதிவு: ஏஆர் சூர்யா

இசை : டி இமான்

வசனம் - பாடல்கள்: யுகபாரதி

மக்கள் தொடர்பு: ஜான்சன்

தயாரிப்பு: ஐஸ்வர் சந்திரசாமி, தாய் சரவணன், ராஜீவன்

எழுத்து - இயக்கம்: சுசீந்திரன்

நூறாண்டு தமிழ் சினிமாவில் இப்போதுதான் பொது வழியில் தலித்தின் பிணம் ஏன் போகக் கூடாது? உனக்குச் சமமா நான் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தா தப்பா? விருப்பப்பட்ட ஆணும் பெண்ணும் ஒன்று சேர்வதில் சாதிக்கு என்ன வேலையிருக்கிறது? என்ற கேள்விகளுடன் படங்கள் வர ஆரம்பித்துள்ளன.

Maaveeran Kittu review

மாவீரன் கிட்டு கதை மிக இயல்பானது... அன்றும் இன்றும் நாம் பார்த்துக் கொண்டிருப்பது, நிகழ்வுகளாக... செய்திகளாக.

பள்ளி செல்ல பல மைல் தூரம் நடந்து போக வேண்டிய, பிணத்தை எடுத்துச் செல்லக் கூட பொது வழி மறுக்கப்பட்ட சமூகம் வாழும் கிராமத்தில் பிறந்த கிருஷ்ணகுமார் என்கிற கிட்டு, மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவன். ஐஏஎஸ் படித்து கலெக்டராகி தான் சார்ந்த சமூகத்தின் மீதான தளைகளை உடைக்க வேண்டும், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என கனவுகளுடன் கல்லூரி சென்று வருபவன் மீது ஆதிக்க சாதியினருக்கு அடங்காத ஆத்திரம். எப்படியாவது அவனை முடக்கிப்போட சதித் திட்டம் தீட்டுகிறார்கள். சாதித் திமிர் பிடித்த ஒரு போலீஸ்காரன் மூலம் ஒரு கொலை வழக்கில் அபாண்டமாக சிக்க வைக்கிறார்கள்.

அதிலிருந்து கிட்டு மீண்டானா? அவனது சமூகத்துக்கான உரிமைகளை பெற்றுத் தந்தானா என்பதற்கு திரையில் விளக்கம் தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ் சினிமாவில் மக்களுக்கான முதல் பத்துப் படங்களுக்கான பட்டியலில் இடம் பெறும் தகுதி நிச்சயம் இந்த மாவீரன் கிட்டுவுக்கு உண்டு.

Maaveeran Kittu review

எண்பதுகளின் பின்னணி... படம் நெடுக மனசுக்கு ரொம்ப நெருக்கமான, நெகிழ்வான காட்சிகள்..

எம்ஜிஆர் மறைவுச் செய்தி அறிந்ததும் கல்லூரிக்கு விடுமுறை. பஸ் இல்லாததால் மாணவர்கள் நடந்தே காட்டு வழியில் செல்கிறார்கள். ஒரு மாணவியை திடீரென்று நாகம் கொத்திவிடுகிறது. அவள் உயர்சாதிப் பெண். கூட வரும் மாணவர்களில் பலர் தாழ்த்தப்பட்டவர்கள். அவர்கள்தான் உதவிக்கு வருகிறார்கள். ஆனால் அவளைத் தொட்டுத் தூக்க முடியாது. சாதிக் கட்டு அப்படி. அந்தப் பெண்ணோ கதறுகிறாள்.. 'பரவால்ல என்னைத் தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போங்க' என்கிறாள். மாணவர்கள் கரம் கோர்க்கிறார்கள். அங்கே 'உயிரெல்லாம் ஒண்ணு...' என யுகபாரதியின் வரிகள் உரக்க ஒலிக்க, பார்க்கும் நமக்கு கை கால்கள் சிலிர்க்கின்றன.

அடுத்த காட்சியில், 'அதெப்படிடா அவளை நீ தொட்டுத் தூக்கலாம்..' என நாயகன் கன்னத்தில் அறைகிறான் சாதித் திமிர் பிடித்தவன். சாதியத்தின் நியாயமற்ற கொடிய தர்க்கத்தை அங்கே தவிர்க்க நினைக்கும் நாயகன், 'தப்புதான்.. மன்னிச்சிடுங்க' என விலகிப் போகிறான். சினிமாவை மீறிய யதார்த்தக் காட்சி அது.

Maaveeran Kittu review

பார்த்திபனின் பாத்திரம் அத்தனை நிறைவு. இவரைப் போன்ற சின்ராசு அண்ணன்களின் போராட்டங்கள்தான் பல இளைஞர்களை சாதியத்தின் அழுத்தத்தை மீறி சாதிக்க வைத்தன.

கதையின் இன்னொரு நாயகன் வசனகர்த்தாக களமிறங்கியிருக்கும் கவிஞர் யுகபாரதி. பெரிய பிரச்சாரமெல்லாம் இல்லாமல், ஆனால் கேட்கும்போதே மனதைத் தைக்கிற, தகிக்க வைக்கிற வசனங்கள்.

"காலங்காலமா அடிவாங்கிட்டிருந்தவன், திமிறி திருப்பி அடிச்சான்னா திமிருங்கிறாங்க".. இது ஒரு சாம்பிள்.

கிட்டு பாத்திரத்துக்கு மிகக் கச்சிதமான தேர்வு விஷ்ணு விஷால். நேர்வகிடு எடுத்த அடர்த்தியான கிராப், பாக்யராஜ் ஸ்டைல் கண்ணாடியுடன் அப்படியே அந்த கிராமத்து மாணவராக மாறியிருக்கிறார்.

Maaveeran Kittu review

சற்றும் சினிமாத்தனம் இல்லாமல், கல்லூரியில் படிக்கும் கிராமத்து மாணவியாக வந்து மனதில் பதிகிறார் ஸ்ரீதிவ்யா.

ஆதிக்க சாதித் திமிர் பிடித்தவர்களாக வரும் நாகி நீடு, குறிப்பாக வெறியேற்றும் அந்த இன்ஸ்பெக்டர் செல்வராஜாக வரும் ஹரீஷ் உத்தமன் ஆகியோர் மிகக் கச்சிதமான பங்களிப்பைத் தந்துள்ளனர்.

சூரிக்கு இந்தப் படத்தில் காமெடி வேடமில்லை. அவரும் ஒரு சீரியஸ் பாத்திரம். பார்த்திபனை விட்டு விலக அவர் சொல்லும் காரணத்தில் நேர்மை.

ஸ்ரீதிவ்யாவின் அப்பாவாக வரும் ஃபெரைரா இன்னொரு அற்புதமான பாத்திரம். இப்படிப்பட்ட நடுநிலை நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சூரியாவின் ஒளிப்பதிவில் அத்தனை யதார்த்தம்.. நேர்த்தி. குறிப்பாக கொடைக்கானலின் அழகுகளை அப்படியே அள்ளிக் குடித்திருக்கிறது.

டி இமானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் இனிமை.

படத்தின் பெரிய குறை... இடைவேளைக்குப் பிந்தைய இரு பாடல் காட்சிகளும், நாயகனின் முடிவும்.

Maaveeran Kittu review

இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இனி சாதி கவுரவத்தில் பிறக்கும் பரிதாபம் தேவையில்லை. 'இவனும் நமக்கு இணையான மனுசன்டா... அவன் உரிமையைத்தானே கேட்கிறான்... இதில் நமக்கு என்ன நஷ்டம்?" என்ற நியாயம் புரிய வேண்டும். அந்த உணர்வை எதிர்த் தரப்புக்கு ஏற்படுத்தும் விதமான படைப்புகள்தான் வேண்டும். அதைத்தான் பா ரஞ்சித் செய்து கொண்டிருக்கிறார். சுசீந்திரன் போன்ற படைப்பாளிகள் அதை ஒரு இயக்கமாகவே எடுத்துச் செல்ல வேண்டும்.

சாதிகளற்ற சமூகம் சாத்தியமா தெரியவில்லை... ஆனால் எல்லா சாதியும் சமம் என்ற நிலையை சாத்தியப்படுத்த முடியும். திரையிலும் சமூகத்திலும் நிறைய சின்ராசுகள் உருவாக வேண்டும். கிட்டுகள் நின்று வாழ்ந்து அதிகாரத்தைக் கைப்பற்றி சாதிக்க வேண்டும்‍!

English summary
Oneindia Tamil's review of Suseenthiran's Maaveeran Kittu movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil