For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மெட்ராஸ்- சினிமா விமர்சனம்

  By Shankar
  |

  Rating:
  4.0/5
  -எஸ் ஷங்கர்

  நடிகர்கள்: கார்த்தி, கேதரின் தெரசா, கலையரசன், வினோத், ரமா, ரித்விகா
  ஒளிப்பதிவு: ஜி முரளி
  இசை: சந்தோஷ் நாராயண்
  பிஆர்ஓ: ஜான்சன்
  தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்
  எழுத்து இயக்கம் : பா ரஞ்சித்

  சென்னை என்ற வார்த்தைக்கு ஏதாவது அர்த்தமிருக்கிறதா... தெரியாது. ஆனாலும் மெட்ராஸ் என்பதில் உள்ள ஈர்ப்பும் இயல்பும் 'சென்னை'யில் இருப்பதாகத் தெரியவில்லை.

  காரணம், மெட்ராஸ் என்பது அந்த மண்ணின் மைந்தர்களுக்கான வார்த்தை. அவர்களின் அடையாளம். சிந்தாதிரிப் பேட்டைக்கு தெற்கே உள்ளவர்களுக்கு மெட்ராஸ் என்ற சொல் இன்றைக்கு ரொம்பவே அந்நியமாகத் தெரியக் கூடும்.

  கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, புளியந்தோப்பு போன்ற பகுதிகளில் புழங்கியவர்களுக்கு, கோடி ரூபாய் கொடுத்தாலும் தென் சென்னைப் பக்கம் வரப் பிடிக்காது. இந்த உணர்வைப் புரிந்தவர்களுக்கு மெட்ராஸ் மனதுக்கு மிக நெருக்கமான படமாக இருக்கும்!

  வியாசர்பாடி பகுதியில் ஒரு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு. அதில் உள்ள ஒரு பெரிய சுவரைப் பிடிப்பதில் போட்டி. அந்தப் போட்டியின் பின்னணியில் பெரும் அரசியலே இருக்கிறது. இந்த சுவரில் பழைய அரசியல் புள்ளி ஒருவரின் படத்தை வரைந்து வைத்து, சுவர் எங்களுக்கே சொந்தம் என ஒரு கட்சியினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். அந்த சுவரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என கலையரசன் துடிக்கிறார். சுவரைக் கைப்பற்றும் முயற்சியில் கலையரசன் கொல்லப்பட, அந்த கொலைக்கு பழிவாங்க களமிறங்குகிறார் கார்த்தி. அதற்கு குறுக்கே காதலி கேதரின். அதையும் மீறி கார்த்தி தன் முயற்சியைத் தொடர்ந்தாரா.. சுவர் யார் வசம் வந்தது என்பது மீதிக் கதை.

  என்னடா இது.. ஒரு சுவருக்காக முழுப் படமா? என்று கேட்பவர்கள், படத்தைப் பார்த்தால்தான் அதன் பின்னணியை உணர்ந்து ரசிக்க முடியும்.

  Madras Review

  சென்னையின் பூர்வ குடிகளைப் பற்றி இத்தனை அழுத்தமான பதிவை இதற்கு முன் தமிழ் சினிமாவில் எவரும் செய்ததில்லை. அந்த வகையில் மெட்ராஸ் ஒரு சிறப்பான படம். படத்தின் நீளம், இடைவேளைக்குப் பின் வழக்கமான பழிவாங்கல் என்ற இரு விஷயங்கள்தான் படத்துக்கு மைனஸ்.

  கார்த்தியை இப்படியொரு வேடத்தில், கோணத்தில், நடிப்பில் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை. காளியாக வாழ்ந்திருக்கிறார். ஐடியில் வேலைப் பார்த்தாலும் ஏரியாவுக்கு வந்ததும், பக்கா லோக்கலாகிவிடும் யதார்த்தம் வசீகரிக்கிறது. சென்னை பாணி தமிழ் என்றதும் செயற்கையாக பல கஸ்மாலங்கள், பேமானிகளைச் சேர்த்துக் 'கொல்லும்' மேல்தட்டு கபாலிகள் பார்த்துக் கற்றுக் கொள்ள நிறையவே உண்டு இந்தப் படத்தில், கார்த்தி நடிப்பில். சண்டைக் காட்சிகளில் அத்தனை இயல்பு. கார்த்தியின் உழைப்பு உண்மையில் பிரமிக்க வைக்கிறது.

  கார்த்தியின் நண்பன் அன்புவாக வரும் கலையரசன், மக்களுக்காக ஏதாவது செய்ய நினைக்கும் இளம் அரசியல்வாதியாக கலக்கியிருக்கிறார். அவருக்கும் அவர் மனைவியாக வரும் ரித்விகாவுக்கும் இடையிலான தாம்பத்யமும் சரி, கலையரசன் - காளி நட்பும் சரி.. மனசுக்கு அத்தனை நெருக்கமாகத் தெரிகிறது. நாமே அருகிருந்து பார்த்த நெருக்கமான நண்பர்களின் வாழ்க்கையைப் போல!

  நாயகியாக வரும் கேதரின் முதல் படத்திலேயே டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெற்றுள்ளார். கார்த்திக்கும் இவருக்குமான காதல் காட்சிகள் எளிய கவிதைகள்!

  கார்த்தியின் அம்மாவாக என்னுயிர்த் தோழன் ரமா. படத்தின் பெருமளவு பாத்திரங்களில் புதியவர்கள் நடித்திருந்தாலும், அவர்களை அச்சு அசலாக, அந்த ஏரியாவாசிகளாகவே மாற்றி வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

  ஜி முரளியின் ஒளிப்பதிவு படத்தின் பெரும்பலம். இரண்டு காட்சிகள் கடந்ததுமே, வியாசர்பாடி ஹவுசிங் போர்டுக்கு மனசு குடிபோய்விடுகிறது. சண்டைக் காட்சிகளில் நடிகர்களுக்கு இணையான பங்கு கேமராவுக்கும்!

  சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே அருமை. குறிப்பாக கானா பாலாவின் அந்த சாவுப் பாட்டு.

  தமிழ் சினிமாவைப் பொருத்தவரை, ரஞ்சித்தின் இந்த முயற்சி புதியது மட்டுமல்ல, எதிர்பாராதது. இத்தனை நுணுக்கமாக மெட்ராஸ் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்ய, சினிமாவைத் தாண்டிய ஒரு சமூக அக்கறை வேண்டும். அது ரஞ்சித்தின் அட்டகத்தியில் மேலோட்டமாகத் தெரிந்தது.... மெட்ராஸில் அழுத்தம் திருத்தமாக வெளிப்பட்டுள்ளது. இந்த மாதிரி படைப்பாளிகள்தான் தமிழ் சினிமாவின் இன்றைய தேவை!

  English summary
  Pa Ranjith's Karthik starrer Madras is an epic on the life and struggles of original Chennaities and a must watch movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X