»   »  மதுரை வீரன்-பட விமர்சனம்

மதுரை வீரன்-பட விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

முதலிலேயே ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறோம். படத்துக்கும், படத்தோட டைட்டிலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் எப்படி என்று குழம்பாமல், மேற்கொண்டு ரெவ்யூவுக்குப் போவோம்.

தேஜா தெலுங்கில் கொடுத்த ஹிட் படமான நுவ்வு நானு (அதாவது நீயும், நானும்) என்ற படத்தைத்தான் மதுரை வீரன் என்ற பெயரில் தமிழுக்கு இறக்குமதி செய்துள்ளனர். இது ஒரு கல்லூரிக் கதை. படம் பூராவும் ஒரே ரத்த வாடை. அந்த அளவுக்கு அடிதடியும், கலாட்டாவும் அபரிமிதமாக உள்ளன.

ரமேஷ், சலோனி, லால், அவினாஷ், வி.எம்.சி. ஹனீபா, வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்துள்ளனர். செய்யது படத்தைத் தயாரித்துள்ளார். ஸ்ரீ காந்த் தேவா இசையமைத்துள்ளார். வின்சென்ட் செல்வா படத்தை இயக்கியுள்ளார்.

படத்தின் கதை என்ன என்று விரிவாக கவலைப்படத் தேவையில்லை. ஏற்கனவே பல படங்களில் பார்த்த, பார்த்துக் கொண்டிருக்கும், பார்க்கப் போகும் கதைதான் மதுரை வீரன் கதையும்.

மதுரையின் (அப்பாடா, டைட்டிலுக்கான காரணம் தெரிஞ்சாச்சு) பெரிய பணக்காரரின் மகன் தான் ரமேஷ். அதே ஊரில் ரவுடித்தனம் செய்து வரும் ஆனால் பால் சப்ளையராக (பசுந்தோல் போர்த்திய ரவுடி?) உலா வந்து கொண்டிருக்கும் வில்லன் லாலின் மகள்தான் அழகு சலோனி.

இருவரும் சேர்ந்து ஒரே கல்லூரியில் (தனித் தனியாக உட்கார்ந்துதான்) படிக்கிறார்கள். ஆரம்பத்தில் ரமேஷை, சலோனிக்குப் பிடிக்காது. ஆனால் பின்னர் ரமேஷ் மீது காதல் கொள்கிறார். இந்தக் காதல் ஆழமாகிறது. இவர்களின் காதலை அறிய வரும் பெற்றோர்கள் பிரிக்கப் பார்க்கிறார்கள்.

இருவருக்கும் கல்யாணம் செய்து வைப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ஒரு வருடம் வரை இருவரும் சந்திக்கக் கூடாது, பேசக் கூடாது என்று கூடவே கண்டிஷனும் போடுகிறார்கள். காதலர்கள் ஒத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் சலோனிக்கு வேறு இடத்திலும், ரமேஷுக்கு இன்னொரு இடத்திலும் கல்யாணம் செய்து வைக்க சந்தில் சிந்து பாடி ஏமாற்றப் பார்க்கிறார்கள். ஆனால் காதலுக்குத்தான் இதெல்லாம் பிடிக்காதே. ரமேஷும், சலோனியும் பொங்குகிறார்கள்.

சலோனியை கூட்டிக் கெண்டு ஓட முயலுகிறார் ரமேஷ். ஆனால் அவரது அப்பா ரமேஷை மும்பைக்குக் கூட்டிக் கொண்டு போய் அங்கு சிறைக் காவல் வைத்து விடுகிறார். அதேசமயம், மறுபக்கம் சலோனிக்கு வேறு மாப்பிள்ளையைப் பார்த்து முடிச்சுப் போட முனைகிறார் லால்.

ஒரு நாள் இரவு பலத்த காவலையும் மீறி சலோனி வீட்டை விட்டு வெளியேறுகிறார். மும்பைக்கு ஓடுகிறார். ஆனால் அவர் அங்கு போகும் முன்பே, ரமேஷ் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்து விடுகிறார் (இன்னா கதை, இன்னா கதை!).

அடுத்து என்ன நடிக்கிறது என்பதுதான் படத்தோட மீதக் கதை. படத்தோட கதை பழையதாக இருந்தாலும், கொஞ்சம் கரம் மசாலா சேர்த்து கதைக்கு விறுவிறுப்பைக் கொடுத்திருக்கிறார் வின்சென்ட் செல்வா. தெலுங்குப் படத்தில் வருகிற ஒரு காட்சியைக் கூட விடாமல், தெலுங்குப் படத்தின் திரைக்கதையில் வரும் கமா, புல்ஸ்டாப், புள்ளியைக் கூட விடாமல் அப்படியே எடுத்துக் கையாண்டிருக்கிறார்.

அடடா என்று பாராட்டும்படி ரமேஷ் நடித்துள்ளார். உண்மையைச் சொல்வதாக இருந்தால் இந்தப் படத்தில்தான் ரமேஷ் சற்றே நடிக்க முயன்றுள்ளார். தனது கோலிவுட் நிலையை உணர்ந்து நடித்திருப்பாரோ என்னவோ. தம்பி ஜீவாதான் ரமேஷுக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார். நன்றாகவே பொருந்திப் போகிறது. பேசாமல் தொடர்ந்து ஜீவாவே பேசலாம். ரமேஷை பேச விட்டால் அவர் கதி அதோ கதிதான்!

சலோனி படு அழகாக இருக்கிறார். தமிழுக்குத்தான் இவர் புதுமுகம். ஆனால், பிற தென்னிந்தியப் படங்களில் பல படங்களை முடித்தவராம். நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது. தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தால் கோலிவுட்டில் மினி ரவுண்டு வரலாம்.

கஞ்சா கருப்பு, வெண்ணிற ஆடை மூர்ர்த்தி, மனோபாலா, ஹனீபா ஆகியோர் கொடுத்த ரோலுக்கு வஞ்சனை இல்லாமல் நடித்துள்ளனர்.

ஆனால் படத்தோட பெரிய தலைவலியே தூள் வில்லி சகுந்தலாதான். எதுக்கு கத்துகிறார் என்றே புரியாமல் அடிக்கடி வந்து கத்தி விட்டுப் போகிறார். தொண்டையை கொஞ்சம் கவனித்தால் நல்லது சொர்ணாக்கா!

கேமராமேன் ஜெய்சங்கருக்கு ஒரு ஷொட்டு வைக்கலாம். ஜில்லென்று இருக்கிறது காட்சிகள். வழக்கத்திற்கு விரோதமாக ஸ்ரீகாந்த் தேவா நல்ல இசையைக் கொடுத்துள்ளார். சில பாடல்கள் காதுகளுக்கு இதமாக இருக்கிறது. குறிப்பாக அவரும், அவரது மனைவியான பாடகி பெபியும் சேர்ந்து பாடியுள்ள காலையும் நீயே பாடல் படு ஜாலியாகவும், ஜில்லாகவும் இருக்கிறது.

படத்தில் இரண்டு கிளைமாக்ஸ். இரண்டுமே கடுப்படிக்கிறது. வாத்தியார் எம்.ஜி.ஆர் படத்தின் டைட்டிலை வைத்துக் கொண்டு அவரை இன்சல்ட் செய்து விட்டார் வின்சென்ட் செல்வா.

லாஜிக் பார்க்காதவர்களுக்குப் படம் பிடிக்கலாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil