»   »  மரகத நாணயம் விமர்சனம்

மரகத நாணயம் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
3.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: ஆதி, நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், காளி வெங்கட், ஆனந்த் ராஜ்

ஒளிப்பதிவு: ஷங்கர் பிவி

இசை: திபு நினான் தாமஸ்

தயாரிப்பு: ஜி டில்லி பாபு

இயக்கம்: ஏஆர்கே சரவண்

ஃபேன்டஸி எனப்படும் அதியுச்ச கற்பனைக் கதை இது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இரும்பொரை என்ற சிறு அரசன், தன்னை விட பலசாலி அரசுகள் தன்னைத் தாக்காமல் இருக்க கேடயமாக மரகத நாணயம் ஒன்றை கடவுளிடம் வரமாகப் பெறுகிறான்.

அந்த நாணயத்தை தன் வாளில் பதித்துக் கொண்டு, எல்லா போர்களிலும் வெற்றி மேல் வெற்றி குவிக்கிறான். சாகும்வரை இதைப் பற்றி ஒருவரிடமும் மூச்சுக் காட்டாத மன்னன், கடைசியில் அந்த வாளை தன்னோடே வைத்துக் கொண்டு செத்துப் போகிறான்.

Maragatha Naanayam Review

90 களில் அந்த நாணயத்தை ஒரு தொல்பொருள் ஆய்வாளர் தோண்டிக் கண்டுபிடித்து எடுத்துவிடுகிறார். அந்த நாணயத்தைத் தொடும் அத்தனை பேரும் விபத்தில் அடிபட்டு இறக்கிறார்கள். இதற்குக் காரணம் அந்த இரும்பொரை மன்னனின் ஆவிதான் என ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

இந்தப் பின்னணியில் கதை நிகழ்காலத்துக்கு வருகிறது. 40 லட்சம் கடனாளியான ஆதி, அதை ஏதாவது ஒரு பெரிய கடத்தல் செய்து அடைத்து செட்டிலாகிவிடலாம் என சந்தர்ப்பத்துக்கு காத்திருக்கிறார். அப்போதுதான் சீனாவிலிருந்து மரகத நாணயம் தேடி வரும் ஒருவர், அதைக் கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ 10 கோடி பரிசு தருவதாகக் கூற, ஆதி களமிறங்குகிறார். வழக்கம் போல அவருக்கு ஏகத் தடைகள் குறுக்கிடுகின்றன. அவற்றை மீறி மரகத நாணயத்தை ஆதி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது மீதி.

ஆதியை படத்தின் நாயகன் என்று கூற முடியாது. ஒரு முக்கியப் பாத்திரம். இது தெரிந்தும், கதைக்காக அந்தப் பாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்துள்ளார். பல காட்சிகளில் அன்டர்ப்ளே செய்துள்ள ஆதி, இயல்பான நடிப்பு மூலம் கவர்கிறார்.

நிக்கி கல்ராணிக்கு நடிக்க நல்ல வாய்ப்பு, நிஜமாகவே வித்தியாசமான பாத்திரம் அவருக்கு. அளவாக நடித்து அசத்தியுள்ளார்.

முனீஸ்காந்த் என்றே பிரபலமாகிவிட்ட ராமதாஸின் சேட்டைதான் படத்தின் ஆகச் சிறந்த அம்சம். இவரது டைமிங் வசனங்கள் தியேட்டர்களில் சிரிப்பலையைக் கிளப்புகின்றன.

ஆனந்த் ராஜ், அவர் அடியாட்கள் வரும் காட்சிகளில் கலகலப்புக்குப் பஞ்சமில்லை.

டேனியல், அருண்ராஜ் காமராஜ், காளி வெங்கட், மைம்கோபி, கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம் என நடித்த அத்தனை பேரும் தங்கள் வேடங்களுக்கு சிறப்புச் சேர்த்திருக்கிறார்கள்.

எந்தக் காட்சியும் வீண் என்று சொல்ல முடியாத அளவுக்கு கச்சிதமான திரைக்கதை, எடிட்டிங். கேரக்டர்களை பார்வையாளர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களோடு ஒன்றவிட்டு பின் வேகமெடுக்க வைத்திருக்கிறார் புது இயக்குநர் சரவண். இதில் சின்னச் சின்ன குறைகள் கூடத் தெரிவதில்லை.

ஒளிப்பதிவு, இசை இரண்டுமே படத்துக்கு பக்க பலம்.

பேய்ப் பட சீஸனை மீண்டும் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரி ஜாலியான பேய்ப் படங்களை தாராளமாய் வரவேற்கலாம்!

English summary
Review of debutante ARK Saravan's Maragatha Nanayam movie. It's an enjoyable Fantacy horror comedy.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil