For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  செயின் பறிப்பின் கோரம்... 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன'... விமர்சனம்!

  |

  சென்னை: செயின் பறிப்பு கும்பலால் பாதிக்கப்பட்ட நாயகன், அதற்கு பழிவாங்கும் கதையே மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன திரைப்படம்.

  ஒரு கேஸ் ஏஜென்சியில் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை பார்க்கிறார் நாயகன் ஜப்பான் (துருவா). செயின் பறிக்கும் கும்பலை சேர்ந்த ராமிடம் மோதி, பின்னர் மைம் கோபியின் சிபாரிசின் பேரில் அந்த கும்பலில் இணைகிறார். எப்படி எல்லாம் செயின் பறிக்க வேண்டும், ராமும், மைம் கோபியும் ஜப்பானுக்கு பயிற்சி தருகிறார்கள். ஓருகட்டத்தில் நன்றாக பயிற்சி பெறும் ஜப்பான், தனியாக செயின் பறிக்க செல்கிறார். போலீஸ் கமிஷ்னர் மணைவியின் செயினை ஜப்பான் பறிக்கும் போது எதிர்பாரதவிதமாக தடுமாறி கீழே விழ, அவரது முகம் அடையாளம் காணப்படுகிறது. இதையடுத்து, போலீஸ் அதிகாரி சக்ரவர்த்தியிடம் செயின் பறிக்கும் கும்பலை எண்கவுண்டர் செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறுது. செயின் பறிக்கும் கும்பல் எண்கவுண்டர் செய்யப்பட்டதா... நாயகன் ஜப்பான் யார், எதற்காக செயின் பறிக்கும் கும்பலில் இணைந்தார் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை தேடி பயணிக்கிறது மீதிக்கதை.

  Marainthirunthu Paarkum Marmam Enna review

  தமிழ்நாட்டில் நாம் தினமும் செய்தியில் பார்க்கும் செயின் பறிப்பு சம்பவங்களுக்கு பின் இருக்கும் வலியையும், வேதனையையும் திரில்லிங் திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ராஹேஷ். இரவில் நடமாட பெண்கள் பயந்த காலம் போய், இன்று பகலிலேயே பாதுகாப்பு இல்லை என்பதை உறக்க சொல்லியிருக்கிறார்.

  படத்தில் நிறைய நச் வசனங்கள் இருக்கின்றன. 'ஒலிம்பிக்கை தவிர வேறு எங்கு தங்கம் இருந்தாலும் அதை நாங்க அடிப்போம்', 'சரக்கடிச்சவன் வாயும் சாவுக்கு ஆடினவன் காலும் ரொம்ப நேரம் சும்மா இருக்காது', 'நீ போலீஸ் ஆகி நான் சரக்கடிக்கிற டாஸ்மாக்குக்கு தான் செக்யூரிட்டியாக வருவ', இதெல்லாம் ஒரு பானை சோற்றுக்கு சில சோறு பதம்.

  Marainthirunthu Paarkum Marmam Enna review

  நல்ல கதை கரு, வசனங்கள் இருந்தாலும், படத்தின் திரைக்கதையில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தியிக்கலாம். முதல் இரண்டு மூன்று காட்சிகளிலேயே கதையை யூகித்துவிட முடிகிறது. ஆனால் சொல்ல வந்த விஷயத்தை நேர்த்தியாகவும், நேர்மையாகவும் சொல்லியிருக்கிறார். சில காட்சிகள் 'மெட்ரோ' படத்தை நினைவூட்டுகிறது. ஆனால் அந்த படம் அளவுக்கு செயின் பறிக்கும் நுட்பங்கள் குறித்து வகுப்பெடுக்காமல் இருந்ததற்கும், ஆபாசம் இல்லாமல் படத்தை கொடுத்ததற்கும் நன்றி.

  திலகர் படத்தில் நடித்த துருவா தான் இப்படத்தின் நாயகன். ஆக்ஷன் காட்சிகளில் நன்றாக செய்திருக்கிறார். பல இடங்களில் ஒரே மாதிரியான உணர்ச்சிகளை காட்டியிருக்கிறார். படத்தில் அவருக்கு இரண்டு நாயகிகள். ஐஸ்வர்யா தத்தா, அஞ்சனா பிரேம். ரொமான்ஸ் காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார்.

  போலீஸ் வேலையில் சேர்வதற்காக பயிற்சி எடுக்கும் பாரதியாக ஐஸ்வர்யாக தத்தா. ஒரு சில காட்சிகள் தான் என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார். பிக் வீட்டில் இருக்கும் அவருக்கு படம் ரிலீசானது தெரியாமல் இருக்கலாம். ஆனால் அந்த வீட்டுக்குள் இருப்பதாலேயே, ஐஸ்வர்யா தத்தாவை உடனடியாக அடையாளம் கண்டுகொள்கின்றனர் ரசிகர்கள்.

  Marainthirunthu Paarkum Marmam Enna review

  ப்ளாக் பேக் காட்சிகளில் மட்டும் வரும் அஞ்சனா பிரேம், வெள்ளந்தி சிரிப்பில் கொள்ளை கொள்கிறார். எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நம்பலாம்.

  ஒரு வாரத்தில் ரிலீசாகும் நான்கு படங்களில் மூன்று படங்களில் அம்மாவாக வருகிறார் சரண்யா பொன்வண்ணம். ஆனால் படத்துக்கு படம் வித்தியாசம் காட்டுகிறார். இந்த படத்தின் டைட்டில் கார்டிலேயே என்னென்றும் அம்மா சரண்யா பொன்வண்ணம் என்று தான் போடுகிறார்கள். ரியல் எஸ்டேட்காரர்களையே ஏமாற்றும் தில்லாலங்கடியாக, தனது கலகல நடிப்பால் இந்த படத்திலும் ரசிக்க வைக்கிறார்.

  ராதாரவி, ராம், மைம்போபி, அருள்தாஸ், வளவன் என ஒரு வில்லன் பட்டாலமே படத்தில் இருக்கிறது. படத்தை சுவாரஸ்யமாக கொண்டு செல்ல கடுமையாக உழைத்திருக்கிறார்கள். காமெடிக்கு நான் மட்டும் தான் பொறுப்பு என களம் இறங்கியிருக்கார் மனோபாலா. ஆனால் வீக்பாடி என்பதால் பாரம் தாங்க முடியவில்லை. போலீஸ் அதிகாரி சக்ரவர்த்திக்கு ஒரு சில காட்சிகள் தான். தனது கடமையை நேர்மையாக செய்திருக்கிறார்.

  அச்சு ராஜாமணியின் பின்னணி இசை படத்தின் டெம்போவை தக்க வைக்கிறது. பாடல்களில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். திருடாதே பாடலை மட்டும் ரிப்பீட் மோடில் வைக்கலாம்.

  செயின் பறிப்பு சம்பவங்களையும், அதன் கோரத்தையும் பார்வையாளர்களின் மனதுக்கு கடத்துகிறது பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு. ஏகப்பட்ட பிளாக்பேக் காட்சிகள் இருப்பதால், திரைக்கதையை குழப்பாமல் கொண்டு போக மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் எடிட்டர் சான் லோகேஷ்.

  ஹீரோ யார், எதற்காக இதையெல்லாம் செய்கிறார் என்பதை பார்வையாளர்கள் யூகித்துவிட கூடாது என்பதற்காக படத்தில் நிறைய கேரக்டர்களை சேர்க்கிறார் இயக்குனர். பெண்களின் மிகப்பெரிய சந்தோஷமாக விளங்கும் தங்க நகைகளை அவர்கள் தைரியமாக அணிய முடியாதபடி செய்கிறார்களே என்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். சிசிடிவி கேமராவின் அவசியத்தையும் சொல்கிறது மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.

  தற்போதைய சூழலுக்கு ஏற்ற படம் என்பதால், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன என்பதை தியேட்டருக்கு சென்று நிச்சயம் தெரிந்துகொள்ளலாம்.

  English summary
  The suspense thriller movie Marainthirunthu Paarkum Marmam Enna tells about the facts and effects of chain snatching incidents.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X