»   »  மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்

மாசு என்கிற மாசிலாமணி - விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: சூர்யா, பிரேம்ஜி, நயன்தாரா, ப்ரணிதா, சமுத்திரக்கனி


ஒளிப்பதிவு: ஆர்டி ராஜசேகர்


இசை: யுவன் சங்கர் ராஜா


தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்


எழுத்து - இயக்கம்: வெங்கட்பிரபுஇன்றைய பேய்க் கதை ட்ரெண்டைப் பயன்படுத்தி வெங்கட் பிரபுவும் சூர்யாவும் ஒரு மாஸ் பேய்ப் படத்தைத் தர முயன்றிருக்கிறார்கள். பேய்கள் என்றாலே பயம், பயங்கரம் என்ற நினைப்பை மாற்றி, அவற்றை தோளில் கைபோட்டு நட்பு பாராட்டும் தோழர்களாகக் காட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு.


கதை.. ரொம்ப சிம்பிள்.. பழசும் கூட. தன் குடும்பத்தை அழித்தவர்களை, மகன் வளர்ந்து பழிவாங்குகிறான் என்ற ஒற்றை வரிக் கதையை, பேய்கள் மற்றும் தனது வழக்கமான துருப்புச் சீட்டு பிரேம்ஜியைக் கொண்டு கலகலப்பாகவும் உருக்கமாகவும் தந்திருக்கிறார் வெங்கட் பிரபு.


நண்பன் பிரேம்ஜி துணையுடன் சின்னச் சின்ன திருட்டுகள் செய்து கொண்டு, நயன்தாராவை லவ்விக் கொண்டிருக்கும் சூர்யா, ஒரு பெரிய திருட்டின் போது கார் விபத்தில் சிக்குகிறார். தலை பட்ட அடியால் அவருக்கு ஒரு புது சக்தி கிடைக்கிறது. ஆவி, பேய்களைக் காணும் சக்தி. அந்தப் பேய்களை வைத்தே கொஞ்ச காலம் பிழைப்பை ஓட்டுகிறார். பேய்கள் தங்கள் நிறைவேறாத ஆசைகளை சூர்யா மூலம் நிறைவேற்றிக் கொள்ள விரும்புகின்றன.அப்போதுதான் தன்னைப் போன்ற உருவ அமைப்புடன் உள்ள ஒரு பேய் (இன்னொரு சூர்யா) அவரிடம் வருகிறது. அந்தப் பேய் சிலரைப் பழி வாங்க மனித சூர்யாவைப் பயன்படுத்திக் கொள்கிறது. இது புரிந்து அந்தப் பேயை விரட்டியடிக்கிறார் சூர்யா. உடனிருக்கும் மற்ற பேய்களின் இறுதி ஆசைகளை நிறைவேற்றுகிறார்.


சூர்யா விரட்டியடித்த பேய் யார்? எதற்காக அந்தப் பேய் சூர்யா மூலம் சிலரை போட்டுத் தள்ளுகிறது? என்பதெல்லாம் திரையில் ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள்.


Masssu Engira Masilamani Review

வழக்கமான பழிவாங்கல் கதைதான் என்றாலும், அதை கலகலப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார் வெங்கட் பிரபு. சம கால சினிமா, அதில் வந்த பாத்திரங்கள், காட்சிகளையெல்லாம் சூழலுக்கு ஏற்ப புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.


குறிப்பாக எங்கேயும் எப்போதும் படத்தில் வரும் விபத்து மற்றும் ஜெய் பாத்திரத்தைப் பயன்படுத்திய விதம், க்ளாமாக்ஸ் சண்டையில் பார்த்திபனைப் பார்த்து கருணாஸ் கூறும் அந்த ஒற்றை வசனம், படம் முழுக்க வரும் பிரேம்ஜியின் டைமிங் வசனங்கள்.. -வெங்கட் பிரபுவின் அக்மார்க் பார்முலா இது.


Masssu Engira Masilamani Review

ஈழத்துக்கு இளைஞராக வரும் இன்னொரு சூர்யா, மண்ணைப் பிரிந்து அயல்நாடுகளில் வாழும் ஒவ்வொரு தமிழனின் பிரதிநிதியாக ஜொலிக்கிறார். 'அயல்நாட்டில் வாழும் தமிழன் சொந்த மண்ணுக்கு வந்தால் ஊரைச் சுற்றிப் பார்த்து போட்டோ புடிச்சிக் கொண்டு போயிடுவான்னு நினைச்சியா?' என்ற வசனம் இன்றைய நிலையின் நிதர்சனம்.


சூர்யாவை அத்தனை பரிமாணங்களிலும் ஜொலிக்க வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. ஒரு ஜாலி திருடனாக, தன்னை வைத்து பழிவாங்கும் தன் உருவ பேயிடம் சீறும் சிங்கமாக, இருபது முரடர்கள் மல்லுக் கட்ட அவர்களை வெளுத்து வாங்கும் அதிரடி நாயகனாக, துறுதுறு காதலாக, அன்பான கணவனாக.. இறுதியில் வெகுண்டு எழும் கோபக்கார மகனாக... மனசை அள்ளுகிறார் மனிதர்.


Masssu Engira Masilamani Review

பிரேம்ஜிக்கும் சூர்யாவுக்குமான நட்பு அருமை. உனக்கு என்னடா கடைசி ஆசை என பிரேம்ஜியிடம் கேட்க, அதற்கு அவர் தமாஷாகத் தரும் பதில் மனசைப் பிசையும் காட்சி.


நாயகிகளில் நயன்தாரா சும்மா ஒப்புக்கு வந்து போகிறார். அவரது நர்ஸ் வேடம் ஒரே ஒரு காட்சிக்குதான் ரொம்ப உதவியாக இருக்கிறது.


Masssu Engira Masilamani Review

ப்ரணிதாவின் அழகும், அந்த அகன்ற விழிகளில் கண்களில் வழியும் காதலும் ரசிக்க வைக்கின்றன. இருவரின் மகளாக வரும் அந்த சுட்டிப் பெண் ஒரு கவிதை.


சின்னச் சின்ன விஷயங்களில் கூட அத்தனை சிரத்தை காட்டியுள்ள வெங்கட் பிரபு, ரசிகர்களை கண்டு கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையிலோ என்னமோ இரு பெரிய தவறுகளை சரிப்படுத்தாமலே விட்டிருக்கிறார்.


Masssu Engira Masilamani Review

பேய்களால் எந்தப் பொருளையும் தொட முடியாது.. எதுவும் செய்ய முடியாது என்பதை ஆரம்பத்தில் சொல்லும் அவர், பின்னர் அதே பேய்கள் கிரேனை இயக்குவது போலவும், கன்டெய்னர் கதவுகளை தூக்கி அடிப்பதுபோலவும் காட்டியிருக்கிறார்.


Masssu Engira Masilamani Review

ஒரு விபத்தில் வந்த பேய்களைக் காணும் சக்தி, அடுத்த விபத்தில் போயிடுச்சி என்ற மெகா காமெடி வசனத்தை சூர்யாவை விட்டு சீரியசாகப் பேச வைத்திருக்கிறார்.


'ஒண்ணுமே புடுங்கலன்னு யாரும் சொல்லிடக் கூடாதில்ல..' என்று பஞ்ச் அடித்தபடி, கைதியின் கண்ணாடியைப் பிடுங்கி, அதை சக போலீசிடம் லஞ்சமாகத் தரும் பார்த்திபன் வரும் காட்சிகள் கலகலப்பாக இருந்தாலும், அவரை இன்னும்கூட சரியாகப் பயன்படுத்தியிருக்கலாம்.


சமுத்திரக்கனியை இத்தனை கொடூர வில்லனாகப் பார்க்க முடியவில்லை. ஜெயப்பிரகாஷ், ராஜேந்திரன், ரியாஸ், கருணாஸ், ஸ்ரீமன், சண்முகசுந்தரம், ஞானவேல் என அத்தனைப் பேரும் கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.


Masssu Engira Masilamani Review

படத்துக்கு பெரிய பலம் ராஜசேகரின் ஒளிப்பதிவும், யுவனின் இசையும். குறிப்பாக பின்னணி இசை.


வெங்கட் பிரபுவிடம் பிடித்த விஷயமே, வழக்கமான விஷயத்தைக் கூட ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி மாற்றித் தரும் புத்திசாலித்தனம்தான். அது இந்தப் படத்தில் கொஞ்சம் மிஸ்ஸான மாதிரி தெரிந்தாலும், ஒரு முறை ரசித்துப் பார்க்கும்படியான படம்தான் இந்த மாசு!

English summary
Venkat Prabhu - Surya's latest release Masssu Engira Masilamani is an usual story with all entertaining ingredients that keeps you in seat keep till the end card. Go for it.
Please Wait while comments are loading...