»   »  மிருதன் விமர்சனம்

மிருதன் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

-எஸ் ஷங்கர்

Rating:
2.5/5

நடிப்பு: ஜெயம் ரவி, லட்சுமி மேனன்

ஒளிப்பதிவு: எஸ் வெங்கடேஷ்


இசை: இமான்


தயாரிப்பு: மைக்கேல் ராயப்பன்


இயக்கம்: சக்தி சவுந்தர்ராஜன்தொடர்ந்து நான்கு வெற்றிகள் தந்த ஜெயம் ரவியும் வெற்றி லட்சுமியாக வலம் வந்த லட்சுமி மேனனும் இணைந்த முதல் படம் மிருதன். ப்ளஸும் ப்ளஸும் சேர்ந்தால் ப்ளஸ் என்பார்கள். ஆனால் இந்தப் படத்தில்....? வாங்க, பார்க்கலாம்!


ஊட்டியில் ட்ராபிக் போலீசாக இருக்கும் ஜெயம் ரவி, தங்கை அனிகாவுக்காக எதையும் செய்யும் ஒரு பாசமலர் பிரதர். ஒரு விபத்தில் டாக்டர் லட்சுமி மேனனைச் சந்திக்கிறார். காதல் கொள்கிறார்.


Miruthan Review

ஒரு நாள் அபாயகரமான ரசாயனக் கழிவை ஏற்றி வரும் லாரியிலிருந்து சிந்தும், கெமிக்கலை நாய் ஒன்று குடித்துவிட, வெறி பிடித்துப் போய் மனிதர் ஒருவரைக் கடித்து வைக்கிறது.


கடிபட்ட மனிதருக்கும் வெறி பிடிக்க, அவர் தன் பங்குக்கு சிலரைக் கடிக்க, ஊருக்குள் அந்த கொடிய வைரஸ் பரவ ஆரம்பிக்கிறது. நிலைமை தீவிரமடைய, போலீஸ் அதைக் கட்டுப்படுத்த முனைகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை சுட்டுத் தள்ள உத்தரவிடுகிறது.


இந்த நேரம் பார்த்து ஜெயம் ரவியின் தங்கை காணாமல் போகிறார். கண்டுபிடிக்க முயலும்போதே ஏகப்பட்ட வெறிபிடித்த மனிதர்கள் தாக்க ஆரம்பிக்கிறார்கள்.


இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க டாக்டரான லட்சுமி மேனன் அடங்கிய ஒரு குழு ஜெயம் ரவி துணையுடன் கிளம்புகிறது. ஆனால் அவர்களை வெறிபிடித்த மனிதர்கள் தடுக்கிறார்கள்.


இவர்களிடமிருந்து தப்பித்து, வைரஸை எப்படி ஜெயம் ரவி அன்ட் கோ அழிக்கிறார்கள் என்பது மீதிக் கதை.


மேற்கத்திய நாடுகளின் சினிமா திரைக்கதைப் பாணியைப் பின்பற்றி மிருதனை உருவாக்க முனைந்திருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன். முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும், இடைவேளைக்குப் பிறகு பொறுமையைச் சோதிக்கின்றன காட்சிகள். ஆனால் க்ளைமாக்ஸ் நெருங்க நெருங்க மீண்டும் அந்த விறுவிறுப்பு வந்துவிடுகிறது.


ஆனால் பல காட்சிகள் பக்கா சினிமாத்தனம். மிருக மனிதர்களுக்கு தண்ணீர்தான் எமன் என்று நன்றாகத் தெரிகிறதே. அந்த டெக்னிக்கை ஆரம்பத்திலேயே கையாண்டிருக்கலாமே?


Miruthan Review

கூட்டம் கூட்டமாக வரும் இந்த மிருக மனிதர்களை தனி ஒரு ஆளாக ஜெயம் ரவி சுட்டுத் தள்ளுவதெல்லாம் அக்மார்க் தமிழ் சினிமா. அதேபோல மிருக மனிதர்களுக்கான ஒப்பனை, கிராபிக்ஸ் போன்றவற்றில் நேர்த்தி குறைவுதான்.


நடிப்பில் குறை வைக்கவில்லை ஜெயம் ரவி. படத்தைத் தாங்கியிருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சிகளில் அவரது அனுபவம் பளிச்சிடுகிறது.


லட்சுமி மேனனுக்கு அதிக வேலையில்லை. ஆனாலும் கவனத்தை ஈர்க்கிறது அவர் நடிப்பு. அதுதான் லட்சுமியின் ஸ்பெஷல் போலும்!


Miruthan Review

குழந்தை அனிகா, காளி வெங்கட் பாத்திரமுணர்ந்து நடித்துள்ளனர்.


இமானின் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை வழக்கம் போல ஒப்பேத்தல்தான்.


கதையை வித்தியாசமாக தேர்வு செய்த இயக்குநருக்கு, காட்சிகளை சுவாரஸ்யமாக எடுக்க முடியாமல் போனதுதான் இந்தப் படத்தின் துரதிருஷ்டம்!

English summary
Director Shakti Soundar Rajan's Miruthan is definitely a new attempt, but not much impressive.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil