For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  முகமூடி - சினிமா விமர்சனம்

  By Shankar
  |

  Rating:
  2.5/5
  தமிழில் வரும் முதல் சூப்பர் ஹீரோ கதை என்ற அறிமுகத்தோடு வந்திருக்கிறது மிஷ்கினின் முகமூடி.

  கதை என்று பார்த்தால்... காலம் காலமாக நாம் பார்த்த அதே கொள்ளை- சாதாரண இளைஞன் துப்பறிதல்தான் இந்தப் படமும். பல எம்ஜிஆர் படங்களின் வெளிப்படையான தழுவல் என்றாலும் மிகையல்ல. அதை மிஷ்கின் தன் பாணியில் நீள நீளமான ஷாட்களில் எடுத்து முகமூடியாகத் தந்திருக்கிறார்.

  வீட்டில் தண்டச்சோறு பட்டத்துடன் ஊரைச் சுற்றி வரும் சாதாரண இளைஞன் ஆனந்த் என்கிற லீ (ஜீவா) குங்பூ கற்று, தன்னை ப்ரூஸ் லீயாக உருவகப்படுத்திக் கொண்டு வலம் வருகிறான். நகரில் அடுத்தடுத்து பல கொள்ளைகள், கொலைகள் நடக்கின்றன. இதன் பின்னணி தெரியாமல் போலீஸ் திணறுகிறது.

  ஒரு முறை தன் காதலிக்காக பேட்மேன் வேஷத்தில் போகும் லீ, எதேச்சையாக ஒரு திருடனைப் பிடித்து போலீசில் ஒப்படைக்கிறான். அதைத் தொடர்ந்து முகமூடி கேரக்டர் பிரபலமாகிறது. ஒரு கட்டத்தில் போலீசே முகமூடி உதவியை எதிர்ப்பார்க்க, கொள்ளையர்களை எப்படி பிடிக்கிறான் லீ என்பது க்ளைமாக்ஸ்.

  நல்ல ஸ்டைலிஷாக ஒரு சூப்பர் ஹீரோ கதை கொடுக்க வேண்டும் என்பது மிஷ்கினின் நோக்கமாக இருந்திருக்கிறது. அதை நிரூபிப்பது போலத்தான் படத்தின் முதல் பாதி ஹாஸ்யமும் ஆக்ஷனுமாகப் போகிறது.

  ஆனால் இரண்டாம் பாதியில் படம் அங்கங்கே முட்டிக் கொண்டு நிற்கிறது. லாஜிக்கும் இல்லை... அதை மறக்கடிக்கும்படியான விறுவிறுப்பும் இல்லை.

  கதாநாயகன் ஜீவா கடுமையாக உழைத்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் குங்பூவை அவர் பயன்படுத்துவதில் அத்தனை நேர்த்தி.

  பூஜாவுடன் அவர் மோதிக் கொள்ளும் இடங்களில் குறும்புத்தனம்.

  பூஜா ஹெக்டே ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். எண்ணி ஆறு காட்சிகளில் வருகிறார். முதல் காட்சியில் பரவாயில்லை. மற்ற காட்சிகளில் இவர் ஒரு பொம்மை மாதிரி வந்து நிற்கிறார். இவருக்கும் ஜீவாவுக்கும் காதல் வர காரணமாகக் காட்டப்படும் காட்சிகள் படு அபத்தம்!

  நாசர் நிறைய காட்சிகளில் வந்தாலும், ஏதோ ஒரு வறட்டுத்தனம் தெரிகிறது அந்தப் பாத்திரத்தில்.

  கிரீஷ் கர்னாட் போன்றவர்களை சின்னச் சின்ன பாத்திரங்களில் வீணடித்திருக்கிறார் இயக்குநர்.

  குங்பூ மாஸ்டராக வரும் செல்வா அந்த பாத்திரமாகவே மாறியிருக்கிறார். ஆனால் பெரிதாக ஊதிக் காட்டப்பட்ட நரேன், பொசுக்கென்று போய்விடுகிறார். அதிலும் க்ளைமாக்ஸில் அவரது நடிப்பு காமெடி இல்லாத குறையைத் தீர்க்கிறது.

  நீண்ட ஷாட்கள் என்பது மிஷ்கினின் ஸ்டைலாக இருக்கலாம். ஆனால் சில காட்சிகளில் லேசாக கணணசந்துவிடும் அளவுக்கு அவற்றின் நீளம் இருப்பதை இயக்குநர் கவனிக்கக் கூடாதா!

  படத்தின் உருப்படியான விஷயங்களில் ஒன்று கேயின் இசை. படத்தின் பெரும்பகுதியை இரவிலேயே எடுத்திருக்கிறார்கள்.

  மிஷ்கின் அடிக்கடி சொன்னது, இந்தப் படம் சாதாரணமான படம். எதிர்ப்பார்ப்பு இல்லாமல் வாங்க.. என்று.

  இந்த விஷயத்தில் அவர் 100 சதவீதம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்!!

  -எஸ். ஷங்கர்

  English summary
  Mysskin's Mugamoodi is good in parts but lacks a proper script and a racy presentation.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X