For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நய்யாண்டி- விமர்சனம்

  By Shankar
  |

  -எஸ் ஷங்கர்

  Rating:
  2.5/5

  நடிப்பு: தனுஷ், நஸ்ரியா நஸீம், சூரி, ஸ்ரீமன், நரேன், பிரமிட் நடராஜன், சத்யன்

  இசை: ஜிப்ரான்

  ஒளிப்பதி: வேல்ராஜ்

  தயாரிப்பா: எஸ் கதிரேசன்

  இயக்கம்: சற்குணம்

  இப்போதெல்லாம் ஓரிரு படங்களிலேயே இயக்குநர்களின் 'ஸ்டஃப்' தீர்ந்து விடுகிறதோ என்ற கேள்வியை எழுப்பியுள்ளது சற்குணத்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் நய்யாண்டி படம்!

  களவாணி, வாகை சூட வா என முதலிரு படங்களிலும் வித்தியாசம் காட்டிய சற்குணம், நய்யாண்டியை இரண்டாம் தர இயக்குநர் ஒருவர் திக்கித் திணறித் தரும் அறிமுகப் படம் மாதிரி தந்திருக்கிறார்.

  ஹீரோ தனுஷைப் பொறுத்தவரை அவரது பட எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்ட இந்கப் படம் உதவியிருக்கிறது என்பதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லை. ஆடுகளத்துக்குப் பிறகு, பெரிய வெற்றிப் படம் எதையும் தமிழில் தனுஷ் தரவே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்!

  தனுஷ் போன்ற நடிகர்கள் கருத்து சொல்வதில் உள்ள கவனத்தை தனக்கான கதைத் தேர்வில் காட்டினால் நன்றாக இருக்கும்.

  இனி நய்யாண்டி படத்தின் கதை...

  ஒரு கிராமத்துத் திருவிழாவுக்குப் போகும் தனுஷ் அங்கு நஸ்ரியாவைப் பார்க்கிறார். தமிழ் சினிமா வழக்கப்படி காதல். ஆனால் நஸ்ரியா முரண்டுபிடிக்க, தனுஷுக்குள் இருக்கும் 'ரொம்ப்ப நல்லவனை' கொஞ்சம் வெளியில் விடுகிறார். ஒரு நாளிரவு பனைமரத்தில் கள்ளடித்துவிட்டு அப்படியே அடுத்த மரத்துக்கு தாவுகிறார். இதை ஒளிந்திருந்து நஸ்ரியா பார்க்க, அடுத்த காட்சியிலேயே கட்டிப்பிடித்து காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு நெருக்கடியான சூழலில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.

  இப்போது சிக்கல், தனுஷின் திருமணமாகாத முதிர் அண்ணன்கள் ரூபத்தில். இவர்களை வைத்துக் கொண்டு தான் திருமணம் செய்துகொண்டதைச் சொன்னால் சரியாக இருக்காதே என்று, தன் வீட்டுக்கே நஸ்ரியாவை, அநாதைப் பெண்ணாக நண்பன் சூரி மூலம் அனுப்பி வேலைக்கு சேர்த்துவிடுகிறார் தனுஷ்.

  சில பல கலாட்டாக்களுக்குப் பிறகு, உண்மையைச் சொல்லி எப்படி சுமுகமாகிறார்கள் என்பதுதான் நய்யாண்டி.

  க்ளைமாக்ஸ் உள்பட பல காட்சிகள் ஏற்கெனவே பல படங்களில் பார்த்த மாதிரிதான் உள்ளன. இந்த லட்சணத்தில் மூலக்கதை என ஒரு மலையாளப் படத்துக்கு கிரெடிட் வேறு!

  தனுஷுக்கு பெரிதாக வேலை எதுவும் இல்லை. அப்பாவின் பாத்திரக் கடையில் வேலை, நண்பர்களுடன் ஜாலியாக சுற்றிக் கொண்டு, நஸ்ரியாவுக்காக மரம் விட்டு மரம் தாவி, அடியாட்களுடன் சண்டை போட்டு... எதுவும் புதுசில்லை. கதைக்காக பெரிதாக மெனக்கெடுவதாகச் சொல்லிக் கொள்ளும் தனுஷ், இப்படியொரு கதையைத் தேர்வு செய்தது ஏன் என்று புரியவில்லை.

  தனுஷால் சற்குணம் கெட்டாரா... சற்குணத்தால் தனுஷ் கெட்டாரா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

  நஸ்ரியா... இந்தப் படத்தில் சுமாராகத்தான் தெரிகிறார். அதுவும் தனுஷுடன்... ஆழாக்கும் ஒல்லிக்குச்சியும் மாதிரிதான் இவர்களின் பொருத்தம் உள்ளது. மற்றபடி, சில காட்சிகளில் இயல்பான நடிப்பு தெரிகிறது (கடைசி காட்சி வரை இடுப்புக்கு மேல் ஒரு துணி, அதற்கும் மேல் தலைப்பாகட்டு மாதிரி ஒரு துணி சுற்றிக் கொண்டுதான் நஸ்ரியா வருகிறார். இதில் தொப்புளும், இஸ்லாமும் எங்கே வந்தன என்றுதான் தெரியவில்லை!!).

  ஸ்ரீமனும் சத்யனும் இடைவேளைக்குப் பின் கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.

  நஸ்ரியாவின் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்ற பிரச்சினையில், எதற்கும் சின்ன வண்டை கேளுங்கப்பா என ஸ்ரீமன் கூற, 'அவன் பச்ச மண்ணுடா' என பிரமிட் நடராஜன் சொல்லும் காட்சியில், எல்லா குறைகளையும் மறந்து கலகலக்கிறது தியேட்டர்.

  தனுஷின் நண்பனாக வரும் பரோட்டா சூரிக்கு, ஒரே மாதிரி வேடம், ஒரே மாதிரி டயலாக் என்றாகிவிட்டது.

  அவ்வளவு பெரிய கோடீஸ்வரரான நஸ்ரியா அப்பா நரேன், ஒரு சுண்டைக்காய் வில்லன் காலில் விழுந்து கதறுவதும், திருமணமாகி கர்ப்பமாகவும் உள்ள பெண்ணைப் போய் தூக்கிக் கொண்டு வில்லன் பறப்பதும்... ம்ஹூம்.. முடியல!

  Naiyaandi review

  வேல்ராஜினி ஒளிப்பதிவு நன்றாகத்தான் உள்ளது. இந்தப் படத்துக்கெல்லாம் எதுக்குங்க பாரின் ஸாங் என்று அவராவது இயக்குநரிடம் கேட்டிருக்கலாம்.

  பாடல்கள் பெரிதாக நினைவில் இல்லை. பின்னணி இசை என்றெல்லாம் ரொம்ப மெனக்கெடவில்லை ஜிப்ரான்.

  தேசிய விருது பெற்ற நடிகர், இயக்குநர்... இருவருமே தங்களைத் தாங்களே நய்யாண்டி செய்து கொள்ள இப்படியொரு படமெடுத்திருக்கிறார்கள் போல!

  English summary
  Sarkunam directed Dhanush's Nayyandi is an average village based movie that fails to satisfy the expectation.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X