»   »  நெஞ்சில் துணிவிருந்தால் விமர்சனம்

நெஞ்சில் துணிவிருந்தால் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

-எஸ் ஷங்கர்

Rating:
2.5/5

நடிகர்கள்: சந்தீப், விக்ராந்த் சந்தோஷ், மெஹ்ரின், சூரி, ஹரிஷ் உத்தமன்
ஒளிப்பதிவு: லக்ஷ்மன் குமார்
இசை: டி இமான்
தயாரிப்பு: ஆன்டனி
இயக்கம்: சுசீந்திரன்

காதல், விளையாட்டு, நட்பு, சமூகக் கொடுமைகள் என எதை எடுத்தாலும் அதில் தனித்துத் தெரிபவர் சுசீந்திரன் (ராஜபாட்டை தவிர்த்து). மாவீரன் கிட்டுவுக்குப் பிறகு அவர் எடுத்திருக்கும் படம் நெஞ்சில் துணிவிருந்தால். இந்த முறை என்ன பிரச்சினையைக் கையிலெடுத்திருக்கிறார்?

வாங்க பார்க்கலாம்.

சந்தீப்பின் அப்பா ஒரு ஏட்டு. தவறான சிகிச்சையால் உயிரிழக்கிறார். சந்தீப்பின் நெருங்கிய நண்பன் விக்ராந்த். சந்தீப்பின் டாக்டர் தங்கைக்கும் விக்ராந்துக்கும் காதல். நண்பனுக்குத் தெரிந்தால் பிரச்சினையாகுமே என விக்ராந்த் பயப்படுகிறான்.

Nenjil Thunivirunthal Review

ஆடிட்டர் ஒருவர் தன் மகளுக்கு எப்படியாவது மெடிக்கல் காலேஜில் எம்டி சீட் வாங்க வேண்டும் என ஹரீஷ் உத்தமன் என்ற கொடூர தாதாவை அணுகுகிறார். சந்தீப்பின் தங்கையும் எம்டி சீட்டுக்கு செலக்ட் ஆகியிருக்கிறாள். இந்த விவரங்களைத் தெரிந்து கொண்ட தாதா, சந்தீப்பின் தங்கையைக் கொன்று, அந்த சீட்டை ஆடிட்டர் மகளுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்கிறான். தங்கையை மட்டும் கொன்றால் பிரச்சினை வரும், எனவே அவள் காதலனையும் போட்டுத் தள்ளிவிட வேண்டும் என திட்டம் போடுகிறான்.

இந்த கொடூர திட்டத்திலிருந்து சந்தீப்பின் தங்கையும் காதலன் விக்ராந்தும் காப்பாற்றப்பட்டார்களா? இதுதான் க்ளைமாக்ஸ்.

சுசீந்திரனின் திரைக்கதைகள் ஒரே சீராக பயணிக்கும் தன்மை கொண்டவை. குழப்பமிருக்காது. ஆனால் இந்தப் படம் நேரெதிர்.

தவறான மருத்துவ சிகிச்சை என ஆரம்பிக்கிறது. அடுத்து கந்துவட்டி பிரச்சினைக்குத் தாவுகிறது. கடைசியில் மெடிக்கல் சீட்டுக்காக கொலை வரை போகும் கொடூரத்தில் முடிகிறது. இந்த குழப்பமான திரைக்கதையால் எதுவுமே மனதில் நிற்காமல் போகிறது. படத்தின் பிரச்சினை இதுதான்.

அடுத்தது, ஹரீஷ் உத்தமனிடம் நாம் போனது தவறு என்பதை உணர்ந்த ஆடிட்டர் ஒரு கட்டத்தில் போலீசில் உண்மையைச் சொல்லி விடுகிறார். அதற்குப் பிறகும் சந்தீப் தங்கையையும் விக்ராந்தையும் கொல்ல ஹரீஷ் துரத்துவதில் எந்த லாஜிக்கும் இல்லையே.

எம்பிஏ தேர்வில் பிட் அடிக்கும் காட்சி சுவாரஸ்யம்.

நடிப்பில் நம்மைக் கவர்பவர் சந்தீப்தான். தமிழுக்கு கிடைத்த இன்னொரு மேன்லி ஹீரோ. நட்பை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துகிறார். பதங்கையும் அவள் காதலனும் விபத்தில் சிக்கிக் கொள்ள, இவர் முதலில் உச்சரிப்பது தங்கை பெயரை அல்ல... மச்சி, என நண்பனை!

இன்னொரு நாயகனாக வரும் விக்ராந்துக்கு பெரிய ஸ்கோப் இல்லை. சண்டைக் காட்சிகளில் தனித்துத் தெரிகிறார்.

ஹீரோயின் மெஹ்ரின் அசப்பில் நஸ்ரியா மாதிரி தெரிகிறார். இந்தப் படத்தில் அவருக்கு பெரிதாக ரோல் இல்லை என்றாலும், ஒரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கிறது.

வில்லனாக வரும் ஹரீஷ் உத்தமன் கெட்டப் பக்கா. நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார். ஆனால் வலுவற்ற திரைக்கதையால் எடுபடாமல் போகிறது.

சூரி இருந்தும் காமெடி இல்லை, அந்த குடிகார சீன் தவிர. அதையும் கூட சுசீந்திரன் ஏற்கெனவே பாயும் புலியில் காட்டிவிட்டார்.

பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை. வில்லனுக்காக போடப்பட்ட பின்னணி இசை நன்றாக உள்ளது. லக்ஷ்மனின் ஒளிப்பதிவவு ஓகே. ஆனால் சில காட்சிகளில் இது ஷூட்டிங் ஸ்பாட் எனத் தெரிகிறது. தவிர்த்திருக்கலாம்.

சுசீந்திரன் நல்ல மேக்கர். அவருக்குத் தேவை நல்ல கதைகள். ஆபாசம், வக்கிரமில்லாத காட்சிகள் என்பதால் குடும்பத்தோடு பார்க்கத் தடையில்லை, நெஞ்சில் துணிவிருந்தால்!

English summary
Review of Suseenthiran's Sundeep, Vikraanth, Mehreen starrer Nenjil Thunivirunthal movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil