»   »  நிசப்தம் விமர்சனம்

நிசப்தம் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
4.0/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: அஜய், அபிநயா, சாதன்யா, கிஷோர்

இசை: ஷான் ஜஸீல்

ஒளிப்பதிவு: எஸ்ஜே ஸ்டார்

தயாரிப்பு: ஏஞ்சலின் டாவின்சி

இயக்கம்: மைக்கேல் அருண்

மிகச் சரியான நேரத்தில் சரியான கருத்தோடு ஒரு படம் வந்திருக்கிறது. அந்த ஒரு காரணத்துக்காகவே நிசப்தம் படத்தின் குறைகளை எல்லாம் மறந்துவிட்டு, ஆரம்பத்திலேயே பாராட்டுக்களைச் சொல்லிவிடுவோம்!

Nisaptham

இடம் பெங்களூர். அஜய் - அபிநயா தம்பதிகளுக்கு எட்டு வயதில் ஒரே மகள் சாதன்யா. அஜய்க்கு தனியார் நிறுவனத்தில் வேலை. அபிநயா சொந்தமாக ஒரு கடை நடத்துகிறார். எந்நேரமும் இருவரும் அவரவர் வேலைகளில் பிஸி. மகளைக் கவனிக்கத் தவறுகிறார்கள். ஒரு மழை நாள். சாதன்யா குடையுடன் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும்போது, ஒரு இளைஞன் குடைக்குள் இடம் கேட்கிறான். சாதன்யாவும் உதவுவதாகக் கூறி, குடைக்குள் அவனையும் அழைத்துக் கொள்கிறாள். ஆனால் அந்த காம வெறியன், ஒரு மறைவிடத்தில் வைத்து சிறுமி சாதன்யாவை பலாத்காரம் செய்துவிடுகிறான். போலீசுக்கு விஷயம் தெரிய, அவர்கள் சிறுமியை மீட்டு வந்து மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.

அதன் பிறகு அந்த சிறுமிக்க ஏற்பட்டது என்ன? பெற்றோரின் நிலை... கோர்ட், வழக்கு, மீடியாக்களிடம் அந்த சிறுமி படும் பாடு... குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா.... என்பதையெல்லாம் மிகவும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லியிருக்கிறார் மைக்கேல் அருண்.

ஒரு குற்றத்தைப் படமாக்குவது மட்டும் முக்கியமல்ல... அந்தக் குற்றத்துக்குக் காரணம்... குற்றம் நடந்த பிறகு பாதிக்கப்பட்டவர்கள் மீதான உலகின் பார்வை, அணுகுமுறை... இவற்றை இத்தனை தெளிவாக - சற்று நிதானம்தான் என்றாலும் - தன் முதல் படத்திலேயே சொன்னதில் மைக்கேல் அருண் ஜெயித்துவிட்டார்.

இந்தப் படத்தின் நாயகி, மையம் எல்லாமே குழந்தை சாதன்யாதான். இத்தனை சின்ன வயதில் எத்தனை நுட்பமான உணர்வுகளை வெளியிடுகிறாள் அந்தக் குழந்தை. சுற்றிப் போட வேண்டும்.

அஜய் - அபிநயா இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். மகளுக்கு நேர்ந்த கொடுமைகளை மருத்துவர் சொல்லக் கேட்டு அஜய் பதறும்போது, பார்க்கும் நாமும் பதறுகிறோம். அபிநயாவுக்கு இன்னொரு சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரம். சிறப்பாகச் செய்திருக்கிறார்.

Nisaptham

போலீசாக வரும் கிஷோர், அஜய்யின் நண்பனாக வரும் பழனி, மனைவியாக வரும் ஹம்சா என அனைவருமே கொடுத்த வேடத்தை இஞ்ச் பிசகாமல் கச்சிதமாகச் செய்துள்ளனர்.

பல காட்சிகள் நிஜத்தின் பிரதிபலிப்புகள்... சில மனதைப் பிசைகின்றன.

எட்டு வயது சிறுமியின் உலகம் எத்தனை வண்ணமயமானதாக, சுமைகளற்றதாக இருக்க வேண்டும்... ஆனால் இந்தக் குழந்தை எட்டு வயதில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகி, கொடிய சிகிச்சைகளைப் பெற வேண்டிய துயரம்? தனக்கு நேர்ந்த கொடுமையை தன் தந்தையிடம் அந்தக் குழந்தை எப்படிக் கூறுவாள்? அந்த மகளின் முகத்தை தந்தையால் எப்படி எதிர்கொள்ள முடியும்? இந்தக் கேள்விகளைப் படிக்கும்போதே பதறுகிறதே... காட்சிகளாகப் பார்க்கும்போது? மனதை ரணமாக்கிய காட்சிகள் இவை!

தன்னை ஒரு கொடியவன் பாழாக்கிவிட்டான். உடனே அதை அந்தக் குழந்தை யாருக்குச் சொல்லும்? தாய் - தந்தைக்கு. ம்ஹூம்... இந்தக் குழந்தை நேராக 100 போன் அடிக்கிறது. காரணம்? "நீங்கதான் எப்பவும் பிஸியா இருப்பீங்களேம்மா?" பெற்றோரின் அலட்சியம் எத்தனை பெரிய துயரத்தில் பிள்ளைகளைத் தள்ளிவிடுகிறது பார்த்தீர்களா?

குழந்தைக்கு இந்தக் கொடுமை நேர ஒரு முக்கிய காரணம், அந்த இளைஞனின் குடிவெறி. மதுக்கடைகளை முற்றாக ஒழிக்க இந்த ஒரே காரணம் போதாதா?

இசை சுமார்தான். ஆனால் ஒளிப்பதிவு அருமை.

காம வெறியும், குடிவெறியும் நிறைந்த இன்றைய சமூகத்துக்கு இதுபோன்ற படைப்புகள்தான் அவசியத் தேவை. வாழ்த்துகள் மைக்கேல் அருண்!

English summary
Movie review of Micheal Arun's debut movie Nisabthan that speaks on child abuse.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil