»   »  ஓ காதல் கண்மணி விமர்சனம்

ஓ காதல் கண்மணி விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

-எஸ் ஷங்கர்

Rating:
3.0/5

நடிகர்கள்: துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன்
ஒளிப்பதிவு: பிசி ஸ்ரீராம்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
தயாரிப்பு: மெட்ராஸ் டாக்கீஸ்
எழுத்து, இயக்கம்: மணிரத்னம்

திருமணத்தில் நம்பிக்கை இல்லாத இருவர், மெல்ல மெல்ல திருமண உறவின் அருமையைப் புரிந்து கொள்வதுதான் ஓ காதல் கண்மணியின் ஒரு வரிக் கதை.

எதற்கு வம்பு என்று நேராக மும்பைக்கே கதையை ஷிப்ட் பண்ணிவிட்டார் மணிரத்னம். பெரிய பணக்காரனாகும் ஆசையில் மும்பைக்கு வரும் துல்கர், ஒரு நாள் ரயில் நிலையத்தில் நித்யா மேனனைப் பார்க்கிறார். அடுத்த நாள் சர்ச்சில் ஒரு திருமணத்தில் பார்க்கிறார். அந்த நிமிடத்திலிருந்து காதலிக்க அல்லது நெருக்கமாகப் பழக ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆனால் திருமணத்தில் இருவருக்கும் நம்பிக்கை இல்லை. அடுத்த ஆறு மாதங்களில் மேற்படிப்புக்காக நித்யா பாரீஸ் போக வேண்டும். துல்கரும் அமெரிக்கா போய் நிறைய சம்பாதிக்கும் திட்டத்திலிருக்கிறார்.

O Kadhal Kanmani Review

இந்த இடைவெளிக்குள் அனைத்து சுகங்களையும் அனுபவித்துவிட வேண்டும் என்பதுதான் இருவரின் நோக்கம். தங்கள் முதல் 'கூடலை' நித்யா மேனனின் விடுதியிலேயே அரங்கேற்றிவிடுகிறார்கள். அடுத்த நாளே தான் வசிக்கும் பிரகாஷ்ராஜ் வீட்டுக்கு அழைத்து வந்து தங்களின் 'லிவிங் டுகெதர்' வாழ்க்கைக்கு அனுமதி கேட்கிறார். முதலில் கறாராக அனுமதிக்க மறுக்கும் பிரகாஷ் ராஜ், தன் 'அல்சீமர்' மனைவி லீலா சாம்சனுடன் நித்யா சரளமாக பழகி, பாட்டுப் பாடியதைப் பார்த்து நெகிழ்ந்து அனுமதி கொடுத்து விடுகிறார். அப்புறமென்ன.. திகட்டத் திகட்ட உரசி, உறவு கொள்கிறார்கள், படத்தின் கடைசி கால் மணி நேரத்துக்கு முன்பு வரை!

O Kadhal Kanmani Review

இந்தக் கதையை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை. திருமண உறவின் பெருமையைச் சொல்வதாகக் கூறிக் கொண்டு, அந்த சிஸ்டத்தையே கேள்விக்குறியாக்கும் முயற்சியாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. நல்ல காதல் கதை என்றெல்லாம் இந்தப் படத்தைச் சொல்ல முடியாது.

அழகான காட்சிகளை இனிமையான இசையில் தோய்த்துக் கோர்த்திருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

[ஓ காதல் கண்மணி படங்கள்]

குறிப்பாக அந்த முதல் காட்சி... இதான்யா பிசி ஸ்ரீராம் என்று சொல்ல வைக்கிறது. அதன் பிறகு படம் முழுக்க அடிக்கடி அப்படிச் சொல்ல வைத்தது!

ரஹ்மானின் பின்னணி இசை, பிசி ஸ்ரீராமின் காமிராவோடே பயணிக்கிறது, நம்மை எப்போதும் ஒரு இதமான சூழலில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

O Kadhal Kanmani Review

இன்னொரு முக்கியமான விஷயம், மணிரத்னத்தின் வழக்கமான வசன பாணியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம். இந்தப் படத்தை அரங்கில் உட்கார்ந்து பார்க்க வைப்பது இந்த மூன்று விஷயங்கள்தான்.

உயர் மேல்தட்டு வர்க்க இளைஞன் வேடத்துக்கு நூறு சதம் பக்காவாகப் பொந்துகிறார் துல்கர். குரல் மிகப் பெரிய ப்ளஸ். இளம் வயதுக்கே உரிய துள்ளல் உடல் மொழி, காதல் காட்சிகளில் சரியாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல் என அனைத்திலுமே டிஸ்டிங்ஷன். தமிழுக்கு ஒரு நல்ல வரவுதான்.

நித்யா மேனன்... இதுவரை சுமார் நடிகையாகப் பார்க்கப்பட்ட இந்தப் பெண், இனி நிறைய இளைஞர்களின் கனவுகளில் துரத்தப் போகிறவராக மாறிவிட்டார். முதல் நன்றியை பிசி ஸ்ரீராமுக்குதான் அவர் சொல்ல வேண்டும்.

O Kadhal Kanmani Review

பிரகாஷ் ராஜ் - லீலா சாம்சன் இருவருமே அந்த பாத்திரங்களாக மாறியிருக்கிறார்கள்.

இந்தக் கதை சரியா... இப்போது கிடைத்திருக்கும் வரவேற்பு, இனி இதுபோன்ற படங்கள் பெருக வழிவகுக்குமே.. என்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஏற்கெனவே டாஸ்மாக்கிலும் சகல வித போதைகளிலும் சீரழிந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில், எவ்வளவு கெட்ட விஷயமாக இருந்தாலும் அதை கொஞ்சம் கவர்ச்சியாகச் சொன்னால் கொண்டாடும் ஒரு சமூகத்தில், இந்த மாதிரிக் கதைகள் பெறும் வெற்றி ஆபத்தானதும் கூட. 'மணிரத்னம் படப் பாணியில்...' என்ற தலைப்புடன் மீடியாக்களில் வாழ்க்கை தோல்விக் கதைகள் கிளம்பாமலிருக்க வேண்டுமே என்ற கவலைதான் படத்தைப் பார்த்து முடித்தபோது எழுந்தது!

O Kadhal Kanmani Review

பள்ளி, இள நிலை கல்லூரி மாணவ மாணவிகள் கட்டாயம் பார்க்காமல் தவிர்க்க வேண்டிய படம்... அந்த வயதினர் காதல் என்ற பெயரில் செய்யும் அத்தனை எல்லை மீறல்களையும் நியாயப்படுத்தும் படம் இது. கொடுத்திருக்கும் மூன்று ஸ்டார்கள் படத்தின் தொழில்நுட்ப நேர்த்திக்காக மட்டுமே.. கதைக்கு -3!

English summary
Manirathnam's O Kadhal Kanmani is watchable movie with neat cinematography and nice music, but its story is dangerous to the society.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil