»   »  ஆரஞ்சு மிட்டாய்- விமர்சனம்

ஆரஞ்சு மிட்டாய்- விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
3.0/5
எஸ் ஷங்கர்

நடிகர்கள்: விஜய் சேதுபதி, ரமேஷ் திலக், ஆறுமுகம் பாலா, ஆஷ்ரிதா

ஒளிப்பதிவு: பிஜு விஸ்வநாத்


இசை: ஜஸ்டின் பிரபாகரன்


தயாரிப்பு: விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்


இயக்கம்: பிஜு விஸ்வநாத்


இளம் வயது.. விதவிதமான வண்ணமயமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கலாம். ஆனால் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்பில் ஆரஞ்சு மிட்டாய் மாதிரி மாற்று சினிமா முயற்சிகளை மேற்கொள்ளும் விஜய் சேதுபதியைப் பாராட்டத்தான் வேண்டும்.


அகஸ்தியா பட்டியில் வசிக்கும் பெரியவரான விஜய் சேதுபதிக்கு திடீர் நெஞ்சுலி. உடனே ஆம்புலன்ஸுக்கு போன் பறக்கிறது. அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ராஜ் திலக்கும் ஆறுமுகம் பாலாவும் ஆம்புலன்ஸ் எடுத்துக் கொண்டு வருகின்றனர்.


Orange Mittai Review

அந்த கிராமத்துக்குள் வாகனம் செல்லுமளவுக்கு வழி இல்லாததால், நடந்து போய் விஜய் சேதுபதியை அழைத்து வரப் போகிறார்கள். விஜய் சேதுபதியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், கிண்டலும் கேலியுமாக லூட்டியடிக்கிறார் பெருசு விஜய் சேதுபதி.


வீட்டிலிருந்து மருத்துவமனைக்குச் செல்வதற்குள் மகனை இழந்து தனிமையில் தவிக்கும் விஜய் சேதுபதியின் கதையும், தந்தையை இழந்து, காதலியை மணக்கப் போராடும் ராஜ் திலக்கின் ப்ளாஷ்பேக்கும் விரிகின்றன.


உண்மையில் விஜய் சேதுபதி நோயாளிதானா? எதற்காக ஆம்புலன்ஸை வரவழைக்கிறார்? ராஜ் திலக் தன் காதலியுடன் இணைந்தாரா? என்பது மீதிக் கதை.


Orange Mittai Review

ஒரு தயாரிப்பாளராக பாராட்டுப் பெறும் விஜய் சேதுபதி, நடிகராக இன்னும் ஒரு மேலே நிற்கிறார். அவரது வேடப் பொருத்தம் கச்சிதம். ஆட்டோவில் போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென இறங்கி ஆட்டம் போடும் அவரைப் பார்த்து சிரித்தாலும், மகனுக்கும் தந்தைக்குமான உறவைச் சொல்லும் கட்டத்தில் நெகிழ வைக்கிறார்.


வேடப் பொருத்தம் கச்சிதமாக இருந்தாலும், சில காட்சிகளில் அவரது வயதுக்கும் உடல் தோற்றத்துக்கும் சம்பந்தமில்லாதது தெரிகிறது.


ரமேஷ் திலக்குக்கு இந்தப் படம் பெரிய புரமோஷன். உணர்ந்து நடித்திருக்கிறார். அதே போலத்தான் ஆறுமுகம் பாலாவும்.


Orange Mittai Review

ரமேஷ் திலக்கின் காதலியாக வரும் ஆஷ்ரிதா பரவாயில்லை, நடிப்பு, தோற்றம் இரண்டிலும்தான்.


பிஜூ விஸ்வநாத்தின் ஒளிப்பதிவு படத்துக்கு புதிய நிறத்தைத் தருகிறது. ஆனால் ஜஸ்டின் பிரபாகரன் இசை எந்த வகையிலும் கைகொடுக்கவில்லை. பின்னணி இசையில் ஏக இரைச்சல்.


வாரிசு இருந்தும், தனிமை ஒரு வயதான தந்தையை என்னவெல்லாம் செய்ய வைக்கும் என்பதை ஓரளவு நன்றாகவே சொல்லியிருக்கிறார்கள். படத்தின் இன்னொரு ப்ளஸ் 101 நிமிடங்கள் மட்டுமே ஓடுவது. அட பரவாயில்லையே அதற்குள் முடிந்து விட்டதே என்ற நிம்மதி!


Orange Mittai Review

வித்தியாசமான கதைகளை, களங்களை படமாக்குவது வரவேற்புக்குரியதுதான். ஆனால் அதைவிட முக்கியம், அதை சுவாரஸ்யமாகத் தருவது. அந்த விஷயத்தில்தான் கொஞ்சம் வேப்பெண்ணை டேஸ்ட் இந்த ஆரஞ்சு மிட்டாயில்!

English summary
Vijay's Sethupathy's maiden production venture Orange Mittai is tastes sweet in bits and pieces.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil