»   »  ப(வர்) பாண்டி விமர்சனம்

ப(வர்) பாண்டி விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
3.0/5

-எஸ் ஷங்கர்

நடிகர்கள்: ராஜ்கிரண், தனுஷ், மடோனா, ரேவதி, பிரசன்னா, சாயா சிங்


ஒளிப்பதிவு: வேல்ராஜ்


இசை: ஷான் ரோல்டன்


தயாரிப்பு: வுண்டர்பார் பிலிம்ஸ்


இயக்கம்: தனுஷ்


எத்தனையோ படங்களில் கோஸ்ட் இயக்குநராக இருந்த தனுஷ் வெளிப்படையாக இயக்கியுள்ள பவர் பாண்டி, கொஞ்சம் மஞ்சப்பை வாசத்துடன் வந்திருக்கிறது.


பவர் பாண்டி எனும் ராஜ்கிரண் ஒரு சினிமா ஸ்டன்ட் மாஸ்டர். மகன் மருமகள் பேரன் பேத்தி என வாழ்ந்து வரும் அவர், தன்னைச் சுற்றி நடக்கும் அநியாயங்களை துணிச்சலாகத் தட்டிக் கேட்கிறார். இதனால் அடிக்கடி போலீஸ் வந்து விசாரணை, சுற்றியுள்ளோர் வேடிக்கை பார்ப்பது என பிரச்சினையாகிறது. இதை அவமானமாகக் கருதும் பிரசன்னா, தந்தையிடம் ரொம்பவே கடுமை காட்ட, வீட்டை விட்டே வெளியேறுகிறார்.


Pa Pandi Review

புல்லட்டை எடுத்துக் கொண்டு ஒரு நீண்ட பயணம் போகிறார். வழியில் சிலர் நண்பர்களாகிறார்கள். அப்போதுதான் தன் பழைய காதலியைத் தேடிப் போவதாக சொல்கிறார். காதலியின் விலாசம், விவரம் எதுவுமே தெரியாத நிலையில், பேஸ்புக் உதவியுடன் அவர் ஹைதராபாதில் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்.


ஹைதராபாதுக்கு புல்லட்டிலேயே போகிறார். காதலியைச் சந்தித்தாரா? அந்த சந்திப்புக்குப் பிறகு அவர்களின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பது மீதி. இடையில் ராஜ்கிரணின் ப்ளாஷ்பேக் வாழ்க்கை. அதில் இளவயது ராஜ்கிரணமாக தனுஷ். காதலியாக மடோனா.


Pa Pandi Review

முன்பே சொன்ன மாதிரி... ராஜ்கிரண் நடித்ததாலோ என்னமோ முதல் பாதியில் ஒவ்வொரு காட்சியும் மஞ்சப்பையை நினைவூட்டுகிறது.


ஆனால் இந்த வேடத்துக்கு இவரை விட்டால் ஆளே இல்லை என்பது போல அப்படி ஒரு பொருத்தம். மொத்தப் படத்தையும் ராஜ்கிரண் தோளில் தூக்கி நிறுத்துகிறார். தாத்தாவாக நெகிழ்வு காட்டும் இந்த மனிதர், ஆக்ஷன் காட்சிகளில் பின்னுகிறார். இவர் அடித்தால்தான் நம்புகிற மாதிரி இருக்கிறது.


சின்ன வயது ராஜ்கிரணாக வரும் தனுஷும் 'தட்டி தூக்கியிருக்கிறார்' நடிப்பிலும்! கபடி ஆடும் லாவகம், திருவிழாவில் கலாட்டா செய்யும் கூட்டத்தை எகத்தாளத்துடன் பந்தாடும் விதம், மடோனாவுடனான அவரது மென்மையான காதல்... எல்லாமே நிறைவாக அமைந்துள்ளன. மடோனாவை எண்ணெய் வழிய வழிய காட்டி டல்லடிக்கிறார்கள்.


Pa Pandi Review

ரேவதிக்கு சின்ன வேடம் என்றாலும், மிக அருமையாகச் செய்திருக்கிறார். முக்கியமாக ஓவர் ஆக்டிங் எதுவுமில்லாதது பெரிய ஆறுதல்.


பிரசன்னா, சாயா சிங், வழக்கம்போல லூஸுப் பெண்ணாக வரும் வித்யுலேகா, அந்தக் குழந்தைகள் அனைவருமே நிறைவான நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.


வேல்ராஜின் ஒளிப்பதில் ஓகேதான். ஆனால் கிராமத்து ப்ளாஷ்பேக்கை எதற்காக இப்படி மங்களாக, வெளிறிப் போன டோனில் காட்ட வேண்டும்? நிகழ்காலமோ இறந்த காலமோ.. இயற்கை அதே வண்ணமயமாகத்தானே இருக்கிறது? ப்ளாஷ்பேக்குக்காக மரங்களும் பயிர்களும் சாம்பல் நிறத்துக்கா மாறிப் போகும்?


Pa Pandi Review

ஷான் ரோல்டனின் பின்னணி இசை, பாடல்கள் காதுகளை உறுத்தவில்லை. இன்றைய சூழலில் இதுவே பெரிய விஷயம்தான்.


இயக்குநராக தனுஷுக்கு இந்தப் படம் நல்ல பெயரைத் தரும். காரணம் அவர் எடுத்துக் கொண்ட கதை. அதை கடைசிவரை நேர்மறையாகவே சொல்லியிருக்கும் விதம். வீட்டில் உள்ள மூத்தவர்களை அவர்களுக்கான சுதந்திரத்தை அனுபவிக்க விடாமல், பிள்ளைகள் எந்த அளவு காயப்படுத்துகிறார்கள் என்பதை ரொம்ப பிரச்சார நெடியில்லாமல் கையாண்டிருக்கிறார். க்ளைமாக்ஸை எந்த உறுத்தலும் வராத அளவுக்கு நிறைவாக அமைத்திருக்கிறார்.


குடும்பத்துடன் பார்க்கத் தகுதியான படம்!

English summary
Rajkiran's Dhanush directed Pa Pandi is a family entertainer and worth to watch.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil