»   »  பகிரி - விமர்சனம்

பகிரி - விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
3.0/5


-எஸ் ஷங்கர்

நடிகர்கள்: பிரபு ரணவீரன், ஷ்ரவ்யா, ரவி மரியா, ராஜன்


இசை: கருணாஸ்


தயாரிப்பு: லட்சுமி கிரியேஷன்ஸ்


எழுத்து, இயக்கம்: இசக்கி கார்வண்ணன்


பெரிய எதிர்ப்பார்ப்பு ஏதுமில்லாமல், தலைப்பு புதுசா இருக்கே... என்னதான் சொல்கிறார்கள் பார்ப்போம் என்று போய்ப் பார்த்த படம் இந்த பகிரி.


Pagiri a pucca political satire

படம் ஆரம்பித்த சில காட்சிகளிலேயே பச்சை மிளகாயைக் கடித்த மாதிரி அப்படி ஒரு விறுவிறுப்பு. காரணம் வசனங்கள். அட பரவால்லையே என நிமிர்ந்து உட்கார்ந்தால், விவசாயத்தின் முக்கியத்துவத்தை, அரசியல் - டாஸ்மாக் அவலங்களை வெளுத்தெடுக்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். சென்சாரில் 18 காட்சிகளை வெட்டிவிட்டார்களாம். அவையும் இருந்திருந்தால் படம் சரவெடியாக வந்திருக்கும்போல!


மகன் விவசாயம் பார்க்க வேண்டும் என விரும்புகிறார் அப்பா. அதற்காகவே பிஎஸ்ஸி அக்ரி படிக்க வைக்கிறார். படித்த மகனோ அரசாங்க உத்தியோகம்தான் வேண்டும்... அதுவும் டாஸ்மாக்கில் வேலை வேண்டும் என அலைகிறார். இதற்கு தன் நகைகளைக் கொடுத்து உதவுகிறார் அவரது காதலியும் காதலியின் அம்மாவும். டாஸ்மாக்கில் வேலை கிடைத்ததா... அப்பாவின் ஆசைப்படி விவசாயம் பார்க்கிறானா? என்பது மீதி. ஒண்ணே முக்கால் மணி நேரம்தான். ஆனால் காரசாரம்!


Pagiri a pucca political satire

மதுவை ஏன் ஒழிக்க முடியவில்லை? இந்தக் கேள்வியோடுதான் தொடங்குகிறது படம். இந்தக் கட்சி, அந்தக் கட்சி, ஆளும் கட்சி என எந்த பேதமுமின்றி சரிசமமாக வெளுக்கிறார் இயக்குநர்.


அமைச்சராக வரும் டிபி.கஜேந்திரனுக்கும் எதிர்கட்சிகளுக்கும் உள்ள கனெக்ஷன், தன் 'மூன்று வீடு'களை அவர் மெயின்டெய்ன் பண்ணும் டெக்னிக், டாஸ்மாக் வேலைக்காக நடக்கும் அந்த இன்டர்வியூ, கட்சிகளின் மதுவிலக்கு பாலிடிக்ஸ், வரதட்சணையாக வயலைக் கேட்கும் மாப்பிள்ளை வீட்டாரை ஓடவிடுவது.... என ஏக சுவாரஸ்ய காட்சிகள்.


வசனங்கள்தான் படத்தின் ஹீரோ.


Pagiri a pucca political satire

'எப்படிய்யா மதுவிலக்கை கொண்டு வர விட்ருவோம்? மதுபான ஆலையெல்லாம் எங்ககிட்டதானே இருக்கு...'


"எட்டு லட்ச ரூபாய் கொடுத்த உங்களுக்கே இப்படி பதறுதே..? பல்லாயிரம் கோடி வருமானம் வர்ர இந்த நாஸ்மாகை அரசாங்கம் அவ்வளவு சீக்கிரம் மூடுவாங்களா... பயப்படாம போங்க..!"


'வாழ வைக்கிற வேலைல வர்ற காசு தாண்டா நல்லது. சாக வைச்சு வர்ற காசு கவர்ன்மெண்ட் காசா இருந்தாலும் வேண்டாம்டா...''


"உசுரே போனாலும் விவசாய நிலத்தை விக்க மாட்டேண்டா..."


Pagiri a pucca political satire

டாஸ்மாக்கில் வேலை என்றதும் ஜஸ்ட் லைக் தட் எனப் பார்க்கிறார்கள். ஆனால் அந்த வேலையைப் பெற படும் பாடு... ரொம்ப விலாவாரியாகவே சொல்லியிருக்கிறார் இயக்குநர்.


படத்தின் நாயகன் பிரபு ரணவீரன் பக்கத்து வீட்டுப் பையனைப் பார்ப்பது போல மிக இயல்பாக நடித்திருக்கிறார். காதலியை கவரும் டெக்னிக், மதுபானக் கடை வேலைக்காக மெனக்கெடுவது என அனைத்துக் காட்சிகளிலும் உறுத்தலில்லாத நடிப்பைத் தந்திருக்கிறார்.


நாயகி ஷ்ரவ்யா பார்க்க நன்றாக இருக்கிறார். நடிப்பிலும் பரவாயில்லை. இவரைவிட இவரது அம்மாவாக வருபவர் அதிகம் திரையை ஆக்கிரமிக்கிறார்.


நாயகியின் அம்மாவை ரவி மரியா கரெக்ட் செய்வது போன்ற காட்சிகள் தேவையா? அதே நேரம் ரவி மரியாவின் காமெடிக்கு செம ரெஸ்பான்ஸ் திரையில்.


ஏ வெங்கடேஷ் வில்லத்தனத்திலிருந்து காமெடிக்குத் தாவியிருக்கிறார். ஆனால் பெரிதாக எடுபடவில்லை.


அரசியல்வாதி கேரக்டருக்கு அப்படி பொருந்தியிருக்கிறார் கே ராஜன். அவரது குரல் இன்னொரு ப்ளஸ். மாரிமுத்து, சூப்பர் குட் சுப்பிரமணி உள்ளிட்ட அனைவருமே தங்கள் வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.


வித்தியாசமான கதைக் களம்... விவசாயத்துக்கு முக்கியத்துவம் என ஆரம்பிக்கும் கதை, இடை வேளைக்குப் பிறகு முழுக்க முழுக்க டாஸ்மாக்கைச் சுற்றியே வருவது சற்று அலுப்பு. திரைக்கதையில் இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.


படத்தின் இன்னொரு மைனஸ் பின்னணி இசை.


ஆனால் அந்தக் கடைசிக் காட்சி... இன்றைய ஒவ்வொரு இளைஞருக்கும் செம சூடு. 'வயித்துல பசி இருக்கற வரைக்கும் விவசாயி இருப்பாண்டா!' அங்கே ஜெயித்திருக்கிறார் இசக்கி கார்வண்ணன்!

English summary
Review of Isakki Karvannan's Pagiri movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil