twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பருத்தி வீரன்- விமர்சனம்

    By Staff
    |

    பருத்தி வீரன் மூலம் புதிய கிராமத்து அத்தியாயத்தைப் படைத்துள்ளார் அமீர்.

    ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாத காட்சிகள், தேவையே இல்லாத பஞ்ச் டயலாக்குகள், அநாவசியமான குத்துப் பாட்டுக்கள், ரத்தம் சிந்தும்சண்டைகள், டபுள் மீனிங் டயலாக்குகள் என்று வரிசை கட்டி தமிழ் படங்கள் வந்து கொண்டுள்ள நிலையில் முற்றிலும் வித்தியாசமான, அச்சு அசல்கிராமத்துப் படம் ஒன்றைக் கொடுத்துள்ளார் அமீர்.

    பருத்தி வீரன் படத்தைப் பார்க்கும் யாருக்குமே இது படமா அல்லது ஏதாவது கிராமத்துப் பக்கம் வந்து விட்டோமா என்ற சந்தேகம் எழுவதைதவிர்க்க முடியாது. அந்த அளவுக்கு படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் அப்படியே கிராமத்து மக்காக்களாக மாறி அசத்தியுள்ளனர்.

    குறிஞ்சி பூக்கள் போல, இதுபோன்ற படங்கள் எப்போதாவதுதான் வரும். அப்படி வந்துள்ள படம்தான் பருத்தி வீரன். வாடாமல்லியாய் மணம்வீசி வரும் நமது கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக வந்துள்ளது பருத்தி வீரன்.

    இப்படிப்பட்ட படங்களைக் கொடுப்பதில் தமிழ் சினிமாவுக்கு இதுவரை ஒரே ஒரு பாரதிராஜாதான் இருந்தார். இப்போது இன்னொருபாரதிராஜாவாக உருவாகியுள்ளார் அமீர். பாலாவையும் உடன் சேர்த்துக் கொள்ளலாம்.

    முதல் படமான மெளனம் பேசியதே மூலம் தனது முத்திரையை கோலிவுட்டில் பதித்த அமீர், ராம் மூலம் உச்சத்திற்குப் போனார். பருத்தி வீரன்மூலம் தமிழ் சினிமாவுக்கே ஒரு புது கெளரவத்தைக் கொடுத்துள்ளார்.

    வர்த்தகம் மட்டுமே கோலோச்சி வரும் கோலிவுட்டில் தரத்தையும் அழுத்தம் திருத்தமாக கொடுத்துள்ளார் பருத்தி வீரனில். இந்தப் படத்தைப்பார்க்கும் யாருக்குமே 20 ஆண்டுகளுக்கு முன்பு வந்த பாரதிராஜாவின் மண்வாசனை ஞாபகத்திற்கு வருவதைத் தவிர்க்க முடியாது.

    முற்றிலும் புதுமுகங்களோடு அந்தப் படத்தை எடுத்தார் பாரதிராஜா. மிகப் பெரிய ஹிட் படமாக அது மாறியபோது பாரதிராஜாவின்விஸ்வரூபமும் உயர்ந்து போனது. அதேபோன்ற அலையை இப்போது பருத்தி வீரன் மூலம் ஏற்படுத்தியுள்ளார் அமீர்.

    படத்தின் கதை ரொம்ப சாதாரணமானது. பருத்தி வீரனாக வருகிறார் கார்த்தி. இப்படிப்பட்ட ஒரு ஆசாமியை நமது ஒவ்வொரு கிராமத்திலும்பார்க்க முடியும். ஏத்திக் கட்டிய லுங்கி, முரட்டு மீசை, கரடு முரடு தாடி, மண்டிப் போன தலைமுடி என டிப்பிக்கல் கிராமத்து ஆசாமியாக அடித்துக்கலக்கியுள்ளார் புதுமுகம் கார்த்தி.

    புதுமுகமாக இவர் என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு படு தத்ரூபமாக நடித்துள்ளார் கார்த்தி. சிவக்குமார், சூர்யாவின் வாரிசாச்சே! கார்த்தியின்கேரக்டர் பெயர்தான் வீரன். அடிதடி, கலாட்டா, அலப்பறை என கிராமத்தையே மிரள வைக்கும் ரவுடியாக வருகிறார் வீரன்.

    சிறைக்குப் போவதும், வெளியே வருவதுமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார் வீரன். அவர் மீது கிராமத்து கிளியோபாட்ரா முத்தழகுக்கு(பிரியா மணி) காதல் பிறக்கிறது. வீரனின் முரட்டுத்தனத்தால் கவரப்பட்டு காதல் கொள்கிறார் முத்தழகு.

    ஆனால் வீரன் மற்றும் முத்தழகு குடும்பங்களுக்கு இடையே நிலவும் ஜென்மப் பகையால், இந்தக் காதல் கை கூடுவதில் ஏகப்பட்ட இடியாப்பச்சிக்கல்கள்.

    பிரியாமணியின் அப்பாவாக வரும் பொன்வண்ணன், மகளின் மனதில் அரும்பெடுத்து இரும்பாக உறுதிப்பட்டுக் கிடக்கும் காதலைக் கலைத்துவேறு மாப்பிள்ளையை கட்டிக் கொள்ள அரும்பாடு படுகிறார். பொழுதுக்கும் சிறைக்குப் போகிறவனையா கட்டிக்க்கப் போறே என்று கூறிமகளின் மனதைக் கலைக்கப் பார்க்கிறார்.

    தந்தையின் கட்டாயத்தால் மனம் உடையும் பிரியா மணி விஷம் சாப்பிடுகிறார். ஆனால் காப்பாற்றப்பட்டு விடுகிறார். இது கார்த்திக்கும்,பிரியாமணிக்கும் இடையிலான காதலை மேலும் வலுப்படுத்துகிறது.

    கார்த்தியின் மீது கொண்ட காதலால், அவரை மணக்க வேண்டும் என்ற ஆதங்கத்தால், கார்த்தியின் உறவினராக வரும் சரவணனிடம் (நடிப்பில்பின்னி எடுத்துள்ளார் சரவணன்!), கார்த்தியின் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளச் சொல்லுங்கள், ஒழுங்காக இருக்கச் சொல்லுங்கள்,அப்பத்தான் கல்யாணம் நடக்கும் என்று கோருகிறார்.

    இதை அறிந்த கார்த்தி கடுப்பாகி, பிரியா மணியை அடித்து விடுகிறார். இதனால் பிரியா மனம் உடைந்து, கோபித்துக் கொண்டு ஓடுகிறார். ஆனால்மறு விநாடியே கார்த்தியிடம் ஓடி வருகிறார். இப்படியெல்லாம் செய்தால் நான் உன்னை மறந்து விடுவேன் என்று நினைக்கிறாயா, எந்த நெருக்கடிவந்தாலும் நாம் கல்யாணம் செய்து கொள்ளப் போவதை யாராலும் தடுக்க முடியாது என்று அழுதுகொண்டே கூறுகிறார்.

    பிரியா மணி தன் மீது வைத்துள்ள ஆழமான காதலைப் புரிந்து கொள்ளும் கார்த்தி, தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார். அதில் வெற்றியும்பெறுகிறார். பிரியா மணியின் மனசுக்கேற்ற காதலனாக மாறுகிறார்.

    ஆனால் இங்கே ஜாதி வெறி குறுக்கிடுகிறது. காதலர்களைப் பிரிக்க ஜாதி வெறியர்கள் சதி செய்கிறார்கள். இதை மீறி எப்படி காதலர்கள் கரம்கோர்க்கிறார்கள் என்பதுதான் பருத்தி வீரனின் கதை.

    இப்படி ஒரு திரைக்கதையை பார்த்து ரொம்ப நாட்களாகிறது. படு அற்புதமாக காட்சிகளைப் பின்னி, பாத்திரங்களை நடமாட விட்டிருக்கிறார்அமீர்.

    கதையைச் சொன்ன விதம், பாத்திரங்களை படைத்த விதம், பாடல் வரிகள், படமாக்கிய விதம், கிராமத்து மணத்தை மாறாமல் கொடுத்தது எனபடத்தின் பிளஸ் பாயிண்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    குறிப்பாக கார்த்தி, சரவணன், பொன் வண்ணன், பிரியா மணி என அத்தனை பேருமே படு அற்புதமாக நடித்துள்ளனர். மதுரைக்கு அருகே உள்ளகருமாத்தூர் கிராமத்துக்கு நேரடியாகப் போன உணர்வு இந்தப் படத்தைப் பார்த்தால் கிடைக்கும்.

    முதல் படம் என்றாலும் காட்சிகளையும், மண்ணின் மணத்தையும் உள் வாங்கிக் கொண்டு படு நேர்த்தியாக டெலிவரி செய்துள்ளார் கார்த்தி.ஹேட்ஸ் ஆப் தம்பி!

    நடிப்பதற்கே கஷ்டம் என பெரிய நடிகர்களே பயப்படும் காட்சிகளில் கூட கார்த்தி படு இயல்பாக நடித்துள்ளார். சூர்யாவுக்கு விஜய், அஜீத்,விக்ரம் எல்லாம் போட்டியே கிடையாது, தம்பிதான் இனி உண்மையான போட்டியே!

    பிரியாமணி முத்தழகாகவே மாறி விட்டார். உசிலம்பட்டி ஸ்டைல் பேச்சும், நக்கல், நையாண்டி என பின்னி எடுத்துள்ளார். பெங்களூர் பப்பில்உட்கார்ந்து நுனி நாக்கில் ஆங்கிலத்தில் பேசி, அசத்தும் பெண்ணா இவர் என்று இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்குஉசிலம்பட்டிக்காரியாகவே மாறி விட்டார் பிரியா.

    ராஜாவின் புள்ளை என்று இப்படத்தில் நிரூபித்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. மாடர்ன் மெட்டுக்களோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்த யுவன் சங்கர்ராஜா, இந்தப் படத்தில் கிராமத்து சிட்டுக்களோடு ஜில்லென்று விளையாடியிருக்கிறார். அப்படி ஒரு நேட்டிவிட்டி பாடல்களில், பின்னணிஇசையில்!

    அதிலும் இளையராஜாவின் குரலில் வரும் யாரது பாடல், அய்யோ அட்டகாசம் போங்க! படத்தின் கிளைமாக்ஸ் காட்சி உருக வைத்து விடுகிறது.கரகாட்டம், ஒயிலாாட்டம் என படம் முழுக்க ஒரே கிராமத்து களேபரமாக இருக்கிறது.

    மவுண்ட் ரோட்டில் மண்டை காய மல்லாடிக் கொண்டிருக்கும் சென்னைவாசிகளை கூட்டிக் கொண்டு போய் இந்தப் படத்தைப் பார்க்க வைத்தால்,நிச்சயம் மன ரீதியாக அவர்கள் பெரும் மாறுதல்களை அடைவார்கள் என்பது உறுதி!

    இன்னொரு பாரதிராஜா கிடைத்த திருப்தி ரசிகர்களுக்கு, கிராமத்து கதைகளுக்கு மறுபிறவி கிடைத்துள்ள சந்தோஷம் தமிழ் சினிமாவுக்கு.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X