twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பட்டைய கெளப்பணும் பாண்டியா- விமர்சனம்

    By Shankar
    |

    -எஸ் ஷங்கர்

    Rating:
    3.5/5

    நடிப்பு: விதார்த், சூரி, மனீஷா யாதவ், இளவரசு, கோவை சரளா, இமான் அண்ணாச்சி

    ஒளிப்பதிவு: மூவேந்தர்

    இசை: அருள்தேவ்

    பிஆர்ஓ: நிகில்

    தயாரிப்பு: முத்தியாரம்மன் பிலிம்ஸ்

    எழுத்து, இயக்கம்: எஸ் பி ராஜ்குமார்

    இன்றைக்கு சின்னத்திரையில் நகைச்சுவை தொலைக்காட்சிகளில் நாம் பார்த்து ரசித்துச் சிரிக்கும் பல நகைச்சுவைக் காட்சிகளுக்குச் சொந்தக்காரரான எஸ் பி ராஜ்குமார், சுறா படத்துக்குப் பிறகு இயக்கியுள்ள படம் இந்த பட்டைய கெளப்பணும் பாண்டியா.

    ரொம்ப எளிமையான கதை. கிராமங்களில் நாம் பார்த்த மனிதர்கள், நிகழ்வுகளைத் தொகுத்து கடைசி வரை கலகலப்பாகவே கொண்டு போயிருக்கிறார் இயக்குநர்.

    பழனி - பாப்பம்பட்டி வழித்தடத்தில் ஓடும் ஒரு சிற்றுந்தில் ஓட்டுநராக வேலை பார்க்கும் விதார்த்தும் நடத்துநராகப் பணியாற்றும் சூரியும் அண்ணன் தம்பிகள். அந்த சிற்றுந்தில் பயணிக்கும் செவிலியர் மனீஷா மீது விதார்த்துக்கு காதல். ஆனால் எவ்வளவோ முயற்சித்தும் மனீஷா அந்தக் காதலை ஏற்க மறுக்கிறார்.

    எதிர்ப்பார்த்தது போலவே குடும்ப சூழல்தான் அதற்கு காரணம் என்பது தெரிந்து, மனீஷாவிடமிருந்து விலகுகிறார் விதார்த். எப்போதும் தன்னைத் தொடர்ந்து வந்து காதலிக்க கெஞ்சிய விதார்த், இப்போது ஒரேயடியாக விலகி நிற்க.. அந்தப் பிரிவே மனீஷாவின் மனதில் காதலை உண்டாக்குகிறது. ஆனால் அந்தக் காதல் நிறைவேற ஒரு தடை, மனீஷாவின் கண் தெரியாத அக்கா திருமணம் மற்றும் வயதான தாய்.

    முதல் வேலையாக அந்தப் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறார் விதார்த். அந்தப் பெண்ணைப் பார்த்ததும் பிடித்துப் போய் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொள்கிறார் விதார்த்தின் நெருங்கிய நண்பன். திருமணத்தின் போது, விதார்த் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்ள, அதிலிருந்து மீண்டு எப்படி இணைகிறார்கள் என்பது மீதிக் கதை.

    ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு ஜாலியான கிராமத்துப் படம். ஒவ்வொரு காட்சியிலும் நகைச்சுவை மிளிர்கிறது. படம் முழுக்க சிரித்தபடி பார்த்து எத்தனை நாளாச்சு...

    சூரி, விதார்த், இளவரசு, கோவை சரளா, இமான், இசையமைப்பாளர் அருள்தேவ் அனைவருமே பட்டையக் கிளப்பியிருக்கிறார்கள். நாயகி மனிஷா இயல்பாக நடித்திருக்கிறார்.

    சிற்றுந்தில் நடக்கும் சில்லறைத்தனமான விஷயங்கள், சில்மிஷங்கள் அனைத்தையும் கலகலப்பாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர். அப்படி நடக்கும் ஒரு சில்மிஷத்தையே படத்தின் முக்கியத் திருப்பமாகவும் வைத்திருக்கிறார்.

    ஆற்றங்கரையில் விதார்த் வெறுத்துப் போய் அமர்ந்திருக்க, மனீஷா அவரிடம் தன் காதலைச் சொல்லும் விதம் ரொம்ப இயல்பு. அதைத் தொடர்ந்து வரும் அந்த பாடலும் இசையும் படமாக்கப்பட்ட விதமும் மிக அருமை.

    பணம் கேட்டு போகும் இடத்தில், கடனைத் திருப்பிக் கொடுக்காவிட்டால் என்னவாகும் என சூரியும் விதார்த்தும் கற்பனை செய்யும் காட்சி செம.

    கோவை சரளாவும் இளவரசுவும் நகைச்சுவை நடிப்பில் ஒருவரையொருவர் மிஞ்சியிருக்கிறார்கள். மகன்களுடன் சேர்ந்து கணவனைக் கலாய்ப்பதும், என்ற ரோப்பு என தாலிக் கயிறைக் காட்டி கணவனுக்கு பரிந்து பேசுவதும்.. கோவை சரளா பின்னிவிட்டார்.

    சூரி இன்னொரு நாயகன் என்றுதான் சொல்ல வேண்டும். படத்துக்கு இவரது நகைச்சுவை பெரும் பலம். சிற்றுந்தில் அடக்கமாக நின்றபடி வரும் ஒரு பெண் வலிய வந்து தன் செல் எண்ணைத் தர, நாமும் காதல்ல குதிச்சிட்டோம்ல என்றபடி அந்தப் பெண்ணுக்கு போன் செய்ய.. அவள் ஒரு பலான பார்ட்டி என்று அறிந்து சூரி புலம்பும் காட்சி ஒரு சாம்பிள்...

    ரசத்தை ஊத்தவா என்று மனைவி நச்சரிக்க, போன் பேசிக்கொண்டிருக்கும் இமான் அண்ணாச்சி என் தலையில ஊத்து என்று எரிச்சலாக சொல்ல, கடுப்பில் அதே மாதிரி செய்யும் மனைவி கலகலக்க வைக்கிறார்.

    Pattaya Kelappanum Pandiya Review

    இப்படி.. சொல்ல நிறைய ஜாலி காட்சிகள் படம் முழுக்க. ஒரே உறுத்தல் படத்தில் நீக்கமற நிறைந்து நிற்கும் குடி காட்சிகள். அதுவும் வீட்டுக்குள் அப்பாவின் சரக்கு பாட்டிலை மகன்கள் திருடிக் குடிக்க, அதில் அப்பாவுக்கு பங்கு கேட்டு அம்மாவே டம்ளர் நீட்டும் காட்சியெல்லாம் ரொம்பவே ஓவர்.

    அருள் தேவின் இசை அருமை. குறிப்பாக ஏன் விழுந்தாய், சொல்லாமலே.. போன்ற பாடல்கள் திரும்ப கேட்க வைக்கும் ரகம். பின்னணி இசை பரவாயில்லை.

    மூவேந்தரின் ஒளிப்பதிவு பிரமாதம். அதுவும் அந்த ஏன் விழுந்தாய் பாடலில் கிறங்கடிக்கிறது!

    காதைக் கிழிக்கும் சத்தத்துடன் ஆக்ஷன், அதிரடி, பேய், திணறத் திணற மசாலா காட்சிகள் என தொடர்ந்து பார்த்த கண்களுக்கும் மனசுக்கும் ஒரு நல்ல மாறுதல் பட்டைய கெளப்பணும் பாண்டியா!

    English summary
    Pattaya Kelappanum Pandiya is a village based story with full of enjoyable humourous scenes. A complete comedy ride.. Go for it!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X