»   »  பாட்டு எப்படி?

பாட்டு எப்படி?

Subscribe to Oneindia Tamil

படம்: பெண்ணின் மனதைத் தொட்டு
இசை: எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடல்கள்: வாலி, வைரமுத்து, முத்துவிஜயன், எஸ்.ஏ.ராஜ்குமார்.
பாடியவர்கள்: அனுராதா ஸ்ரீராம், கிருஷ்ணராஜ், தேவன், உன்னிமேனன், உன்னிகிருஷ்ணன், சுக்வீந்தர் சிங்.

அறிமுக ஹிட் கொடுத்த டைரக்டர் எழிலின் துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு இசையமைத்த அதே எஸ்.ஏ.ராஜ்குமார் பெண்ணின் மனதைத் தொட்டுபடத்திற்கும், அசத்தலாக இசையமைத்து ரசிகர்களின மனதையும் தொட்டிருக்கிறார்.

முதல் பாட்டு...கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... மனசை கிறங்கடிக்குது. முத்து விஜயன் எழுதிய இந்தப் பாட்டை உன்னிமேனனும்,உன்னிகிருஷ்ணனும் பாடியிருக்கிறார்கள். இது பாட்டு போலவே தெரியவில்லை. ஆன்மாவின் அலறல். இருவரும் மிரட்டிவிட்டுப் போயிருக்காங்க. ஆமாம்.அந்த வார்த்தைதான் சரி.

பாட்டின் மென்மைக்குக் காரணம், இசையமைப்பாளரா, பாடகர்களா, அல்லது பாட்டை எழுதியவரா என்று இனம்பிரித்துப் பாக்க முடியாத அளவுக்குமனதில் மீண்டும், மீண்டும் ரீங்காரம் அடிக்கிறது.

பாடலில் வரும் உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி, அது இல்லையென்றால் நானும் இங்கு ஏழையடி என்ற வார்த்தைகள் ஆஹா... ஆஹா...

கிறங்க வைக்கும் இன்னொரு பாட்டு...உதட்டுக்கும் கன்னத்துக்கும் வண்ணமெதுக்கு? கொஞ்சம் வெட்கப்படு வந்துவிடும் அந்த சிவப்பு...பாடல். 50கேஜி தாஜ்மஹால் என்று பாடிய வைரமுத்துவுக்கு வார்த்தைகளைப் போட சொல்லியா கொடுக்க வேண்டும்?.

வாலி எழுதிய...கல்லூரி வானில் சாய்ந்த நிலாவே...மாணவர் நெஞ்சில் பாய்ந்த நிலாவே...பாட்டில் இளமை துள்ளுகிறது. வரிகளில் துடிப்பு தெரிக்கிறது.வாலிக்கு வாலிபம் திரும்புகிறதோ? (இந்தப் பாட்டு ரசிகர்களின் அப்ளாஸ் பெறும்)

இப்போ கர்நாட்டிக் மியூசிக்ல படத்துக்குப் படம் ஒரு பாட்டு வெக்கறது சினிமா உலகத்துல புது பேஷனா?. இந்தப் படத்துல கூட ஒரு பாட்டு தியாகராஜரின்...வாலி எழுதிய இப்பாடலை உன்னிகிருஷ்ணன், நித்யஸ்ரீ, எஸ்ஏ.ராஜ்குமார் பாடியிருக்காங்க. கர்நாடக சங்கீதத்தில் உள்ள இந்தப் பாட்டுக்கு இடையிடையேவெஸ்டர்ன் வரிகள். கொஞ்சம் போர்தான். ம்ஹூம் தேறாது. ஏன்னா இதைக் கேக்க நம்ம பசங்களுக்கு அவ்வளவு தூரம் பொறுமையில்லையே?!

டப்பாங்குத்து பாட்டுக்கள் வேணும்னு பிரியப்படற ரசிகர்களையும் கவனிச்சிருக்கார் எழில். நான் சால்ட்டுக்கொட்டா... நீ சைதாப்பேட்ட... டிபிகல்பேட்டை ராப். அண்ணன் ராஜு சுந்தரம், தம்பி பிரபு தேவாவின் அமர்க்களமான ஆட்டமும், எஸ்.ஏ.ராஜ்குமாரின் பாட்டும் அதிரடியாக இருக்கிறது.

துள்ளாத மனமும் துள்ளும் மாதிரி வாராவிட்டாலும் பாட்டுக்கள் ஓகே. குறை சொல்ல முடியாது. நம் மனதையும் தொடுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil