»   »  பிடிச்சிருக்கு- பட விமர்சனம்

பிடிச்சிருக்கு- பட விமர்சனம்

Subscribe to Oneindia Tamil
Visaka
சின்னக் கதையை எடுத்துக் கொண்டு, அதை அழகான படமாக கொடுத்துள்ளார் இயக்குநர் கனகு.

லிங்குச்சாமியின் உதவியாளரான கனகு, பிடிச்சிருக்கு மூலம் இயக்குநராகியுள்ளார். முதல் படத்திலேயே குருவுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளார்.

தூத்துக்குடியில் லாரி புக்கிங் நிறுவனத்தை நடத்தி வருகிறார் நாயகன் வேல் (அசோக்). அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பெண் மஞ்சு (விசாகா). இருவரும் ஒரு விபத்தில் சந்திக்கின்றனர்.

விபத்தின்போது மஞ்சுவின் தந்தையை சரமாரியாக திட்டி விடுகிறார் வேல். ஆனால் அவர்தான் கஸ்டம்ஸ் அதிகாரி என்று அவருக்கு அப்போது தெரியாது.

விபத்துக்குப் பின்னர் வேல் மீது காதல் கொள்கிறார் மஞ்சு. தினசரி கல்லூரிக்குச் செல்லும் வழியில்தான் வேலின் அலுவலகம் இருப்பதால் தினசரி வேலை பார்த்தபடியே கல்லூரிக்குச் செல்கிறார் மஞ்சு.

இருவரும் காதலிக்கத் தொடங்குகின்றனர். தனது நண்பர்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க ஒருமுறை, காலி லாரியில் மஞ்சுவுடன் காதலில் ஈடுபட்டிருக்கிறார் வேல். அப்போது லாரியை மடக்குகிறார் மஞ்சுவின் தந்தை.

வேலுடன், தனது மகளைப் பார்த்து அதிர்ச்சி அடையும் மஞ்சுவின் தந்தை, மஞ்சுவை வீட்டுக்குக் கூட்டிச் சென்று அடிக்கிறார். இடையில் புகுந்து தாயார் காக்கிறார்.

சில நாட்கள் கழிந்த நிலையில் நள்ளிரவில் நன்றா குடித்து விட்டு, சக லாரி டிரைவர்களுடன் மஞ்சுவின் வீட்டுக்குச் சென்று பெண் கேட்கிறார் வேல்.

நிலைமை மோசமாவதை உணர்ந்த மஞ்சுவின் தந்தை தனது வேலையை விட்டு விட்டு குடும்பத்துடன் வேறு ஊருக்குச் செல்கிறார். இதனால் குழப்பமடையும் வேல், மஞ்சுவைத் தொடர்பு கொள்ள முயன்று தோற்கிறார்.

இந்த நிலையில் மஞ்சுவை புனேவில் பார்த்ததாக ஒரு பஞ்சாப் லாரி டிரைவர் வேலிடம் தெரிவிக்கிறார். இதையடுத்து வேல் தனது நண்பன் கஞ்சா கருப்புவுடன் புனே செல்கிறார்.

மஞ்சுவையும் சந்திக்கிறார். ஆனால் மஞ்சு முகம் கொடுத்துப் பேசவில்லை. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படம் படு இயல்பாக, இன்டரஸ்டிங்காக செல்கிறது. குறிப்பாக சரண்யாவின் நடிப்பு படு யதார்த்தம். அசத்தியுள்ளார். கடைசிக் காட்சிகளில் அவரது நடிப்பு சபாஷ் போட வைக்கிறது.

படத்தின் முதல் பாதி பல்வேறு நிகழ்வுகளுடன் கூடியதாக இருக்கிறது. 2வது பாதியில் சில காட்சிகளை குறைத்து விறுவிறுப்பை தக்க வைத்திருக்கலாம்.

முருகா படத்தின் நாயகன் அசோக்குக்கு இது 2வது படம். நன்றாக செய்திருக்கிறார். நடிப்பிலும் தேறியிருக்கிறார்.

புதுமுக நாயகி விசாகா பார்க்க பளிச்சென இருக்கிறார். உணர்ச்சிகளை காட்ட வேண்டிய நேரத்தில் சரியாக வெளிப்படுத்தி பலே போட வைக்கிறார். ஆனால் இவரது உடல் வாகுக்கு கிளாமர் தேவைதானா, பொருத்தமாக இருக்குமா என்பதை அடுத்தடுத்து அவரை இயக்கவுள்ள இயக்குநர்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும்.

கிட்டத்தட்ட 2வது நாயகன் போலவே வருகிறார் கஞ்சா கருப்பு. பல இடங்களில் கலகலக்க வைத்திருக்கிறார். அதிலும் ரயில்வே நிலையத்தில் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் குடும்பத்திடம் போய் சாப்பாட்டை படு நாசூக்காக கேட்டு சாப்பிடும் இடத்தில் அசத்தியிருக்கிறார். படத்தை தூக்கி நிறுத்த உதவியிருக்கும் கஞ்சா கருப்புக்கு, இப்படம் ஒரு முத்திரைப் படம்.

மனு ரமேசனின் இசை பெரிய அளவில் இல்ைல. கேமரா படத்தை நகர வைக்க உதவியுள்ளது. புனேவின் அழகை சூப்பராக வெளிப்படுத்தியிருக்கிறார் கேமராமேன்.

முதல் படத்திலேயே தப்பியுள்ள கனகுக்கு, கோலிவுட்டில் நல்ல எதிர்காலம் உள்ளது.

பிடிச்சிருக்கு - எல்லோருக்கும் பிடிக்கும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil