twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புலிமுருகன் விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    3.0/5

    -எஸ் ஷங்கர்

    நடிகர்கள்: மோகன் லால், கமலினி முகர்ஜி, ஜெகபதி பாபு, நமிதா, லால்

    ஒளிப்பதிவு: ஷாஜி குமார்

    இசை:கோபி சுந்தர்

    தயாரிப்பு: டோமிச்சன் முலகுப்படம்

    இயக்கம்: வைசாக்

    மோகன்லாலின் கேரியரில் மிகப் பெரிய ஆக்ஷன் படமாகக் கருதப்படும் புலிமுருகன் மலையாளத்திலிருந்து அதே தலைப்பில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. டப்பிங் என்று சட்டென்று சொல்லிவிட முடியாத அளவுக்கு சிரத்தை எடுத்து செய்திருக்கிறார்கள்.

    மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் உள்ள கிராமங்களில் ஒன்று புலியூர். அங்கு வாழும் மனிதர்களை அவ்வப்போது அடித்துக் கொல்கின்ற புலிகள். அப்படி ஒரு புலியிடம் தன் தந்தையை கண்முன்னே இழக்கிறான் முருகன். அந்தப் புலியை தன் மாமாவின் துணையுடன் அடித்துக் கொல்கிறான். அன்று முதல் அவனை புலிமுருகன் என்று கொண்டாடுகின்றனர் மக்கள்.

    Pulimurugan Review

    வளர்ந்து பெரியவனான பிறகும், எந்த மலைக் கிராமத்தில் புலித் தொல்லை என்றாலும் புலிமுருகன்தான் அந்த மக்களைக் காப்பாற்றுகிறான். புலிமுருகனுக்கு நகரத்தில் கல்லூரியில் படிக்கும் தம்பி மேல் அளவு கடந்த பாசம். ஒரு முறை தம்பியின் நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு மூன்று பேர் புலியூருக்கு வருகின்றனர். கேன்சருக்கு மருந்து தயாரிக்க தாதா ஜெகபதி பாபு வைத்துள்ள கம்பெனிக்கு கொஞ்சம் கஞ்சா வேண்டும் எனக் கேட்கின்றனர். தம்பியின் நண்பர்கள், கேன்சருக்கு மருந்து மற்றும் தம்பிக்கும் இதில் வேலை கிடைக்கும் என்பதால் உடனே ஒப்புக் கொள்கிறான் புலிமுருகன்.

    கஞ்சாவை லாரியில் ஏற்றிக் கொண்டு போகும்போது போலீஸ் மடக்க, அவர்களுக்கு போக்குக் காட்டிவிட்டு கஞ்சாவுடன் தப்பிக்கிறான் புலிமுருகன். அதை தாதா ஜெகபதிபாபுவிடம் பத்திரமாக ஒப்படைக்கிறான். புலிமுருகனின் தைரியம், எதற்கும் அஞ்சாத குணம் ஜெகபதி பாபுவுக்குப் பிடித்துவிடுகிறது. ஆனால் ஜெகபதி பாபுவின் உண்மை முகம் தெரிந்த பிறகு அவரை எதிர்த்து நிற்கிறான் புலிமுருகன். இருவரும் பரம விரோதிகளாக மாற, இந்த பகை எப்படித் தீர்கிறது என்பது மீதி.

    Pulimurugan Review

    படத்தின் பலம் அந்த ஆக்ஷன் காட்சிகள் மற்றும் மோகன் லாலின் அலட்டிக் கொள்ளாத நடிப்பு. மிருகங்களையே தனக்குப் பணிய வைக்கும் அந்தப் பார்வை, எதிர்ப்பவர்களைப் பந்தாடும் அந்த உடல்கட்டு, மனைவியிடம் ரொமான்ஸ், ஒருதலையாய் லவ்ஸ் விடும் நமிதாவிடம் நெளிந்து வழிவது என பின்னியிருக்கிறார் மனிதர்.

    சண்டைக் காட்சிகளில் அதிரடி கிளப்புகிறார் என்றாலும் அவ்வளவு பல்க்கான தம்பியை தோளில் சுமந்தபடி சண்டை போடும் காட்சி கொஞ்சமல்ல, ரொம்பவே ஓவர்.

    வயசான கமலினி முகர்ஜியை சின்னப் பெண்ணாகக் காட்ட முயற்சித்திருக்கிறார்கள். ஒரு காட்டில் வாழும் பெண்ணுக்கு அந்த மேக்கப்பும், லிப்ஸ்டிக்கும் உறுத்திக் கொண்டு நிற்கிறது.

    நமிதா சில காட்சிகளில்தான் வருகிறார். கவர்கிறார். இவரால் மோகன்லாலுக்கும் கமலினிக்கும் தகராறு வருவதும், அந்தக் களேபரத்திலும் நமிதாவைப் பார்த்து மோகன் லால் 'அப்புறம் பேசலாம்' சைகை காட்டுவதும், அதை நமிதா ரசிப்பதும் தனி கிளுகிளு சமாச்சாரம்!

    தாய் மாமனாக வரும் லால், வில்லன் ஜெகபதி பாபு, கொஞ்ச நேரம் வில்லனாக இருந்து நல்லவனாக மாறும் கிஷோர், சின்ன வயது மோகன் லாலாக வரும் அந்த க்யூட் பையன் என யாரும் நடிப்பில் குறை வைக்கவில்லை. வீரப்பன் மாதிரி ஒரு கேரக்டர். காமெடி பீஸ் மாதிரி காட்டியிருக்கிறார்கள்.

    ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு பிரமாதம். குறிப்பாக அந்த லாரி சேஸிங். காட்டுவாசியாகவே வாழலாம் என ஏக்கத்தை ஏற்படுத்துகின்றன அந்த அருவிகளும், இயற்கை அழகுகளும்.

    Pulimurugan Review

    கோபி சுந்தரின் இசையில் அந்த புலி முருகன் தீம் பாடல் விறுவிறு. பின்னணி இசையும் ஓகே.

    எது நிஜப் புலி, எது கிராஃபிக்ஸ் புலி என்றே தெரியவில்லை. விஷுவல் எஃபெக்ட்ஸ் அத்தனை கச்சிதம்.

    இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக பீட்டர் ஹெய்னுக்கு இந்த ஆண்டு தேசிய விருது கிடைத்தது மிகப் பொருத்தமே. தமிழ் சினிமா மீண்டும் பீட்டரைத் தேடும்.

    படத்தின் தமிழ் மொழியாக்கம் அத்தனை கச்சிதம். குறிப்பாக லாரியின் முகப்பில் எழுதப்பட்டுள்ள மயில்வாகனம் என்ற தமிழ் எழுத்துகள். ஒரிஜினலில் மலையாளத்தில்தான் இருக்கும்.

    கேரளாக்காரர்களுக்கு இந்தப் படம் புதிதோ என்னமோ... ஆனால் தமிழ் ரசிகர்கள் இது போல நிறையவே பார்த்துவிட்டார்கள். அதுவும் கேப்டன் பிரபாகரன் மாதிரி படங்களைப் பார்த்தவர்களுக்கு, புலிமுருகன் பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.

    English summary
    Review of Mohanlal's Pulimurugan Tamil version. Final verdict is 'just watch it for Mohan Lal and breathtaking cinematography'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X