twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராட்டினம் - திரைப்பட விமர்சனம்

    By Shankar
    |

    -எஸ் ஷங்கர்

    நடிப்பு: லகுபரன், ஸ்வாதி, தங்கசாமி, எலிசபெத்

    ஒளிப்பதிவு: ராஜ் சுந்தர்

    இசை: மனு ரமேசன்

    பிஆர்ஓ:
    நிகில்

    தயாரிப்பு: ஜே மகாலட்சுமி

    எழுத்து - இயக்கம்:
    கே எஸ் தங்கசாமி

    தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறைதான் சினிமா அல்லாத ஒரு வாழ்க்கையை திரையில் பார்த்து, அந்த மனிதர்களோடே நாமும் பயணிக்க முடியும். அப்படிப்பட்ட அழகான, அரிதான சினிமாக்களில் ஒன்று ராட்டினம்.

    நாம் பார்த்த அல்லது அனுபவித்த வலியை, அந்தத் தன்மை மாறாமல் திரையில் மீண்டும் பார்க்கும்போது மனசெல்லாம் இனம்புரியாத உணர்வு ஆக்கிரமித்து நிற்கிறது.

    எளிமையான கதை, நேர்மையான காட்சியமைப்பு, எந்த இடத்திலும் சினிமாத்தனமில்லாத இயல்பு...இவைதான் ராட்டினத்தின் சிறப்புகள்.

    தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை இதற்கு முன் வேறு எந்தப் படத்திலும் இத்தனை சிறப்பாக கதைக்களமாக்கியதில்லை என்பதற்காகவே இயக்குநர் தங்கசாமியைப் பாராட்ட வேண்டும்.

    பள்ளி முடித்த ஜெயத்துக்கும் (லகுபரன்) பள்ளியில் படிக்கும் தனத்துக்கும் (ஸ்வாதி) காதல். ஜெயத்தின் அண்ணன் வளரும் இளம் அரசியல்வாதி. அண்ணி லோக்கல் கவுன்சிலர். தனத்தின் அப்பா தூத்துக்குடி துறைமுகத்தின் சேர்மன். தாய் மாமா பெரிய 'க்ரிமினல்'... லாயர். அரசியல் தொடர்புகள் எக்கச்சக்கம்!

    காதலர்கள் இருவரும் அன்பையும் பரிசுகளையும் பரிமாறிக்கொள்வதோடு நில்லாமல், ஒரு முறை திருச்செந்தூர் வரை ஜாலியாக பைக்கில் போகிறார்கள். வரும்போது ஆத்தூர் பாலத்தில் போலீஸ் மடக்கி விசாரிக்கிறது. அதோடு நில்லாமல் பெண்ணின் வீட்டில் போட்டுக் கொடுத்துவிடுகிறார் இன்ஸ்பெக்டர்.

    பிரச்சினையை பக்குவமாகக் கையாள நினைக்கும் பெண்வீட்டுத் தரப்பு, நேராக ஜெயம் வீட்டுக்கு வந்து விஷயத்தைச் சொல்லி கண்டித்து வைக்கச் சொல்கிறார்கள். பெண்ணை கொஞ்ச நாள் வெளியூருக்கு அழைத்துப் போய் வைத்திருந்து, மீண்டும் வருகிறார்கள். ஆனால் காதலர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். தனத்தின் அண்ணன் பார்த்துவிட பிரச்சினை வெடிக்கிறது.

    பெற்றோரின் வெறுப்பு தாங்காமல் வீட்டைவிட்டு வெளியேறும் தனம், தன்னை அழைத்துப் போய் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள். குலசை தசரா விழாவில் வைத்து தாலி கட்டுகிறான் ஜெயம்.

    அதற்குள் விஷயத்தை இருவீட்டாரும் அரசியலாக்கிவிடுகிறார்கள். ஜெயத்தின் அண்ணன் அசோக்கை, கட்சியின் அண்ணாச்சி அழைத்து எச்சரிக்க, பதிலுக்கு இவரும் கையை உயர்த்த, அது அசோக் கொலையில் முடிகிறது.

    விஷயம் கேள்விப்பட்டு கதறிக்கொண்டு புது மனையியுடன் வீடு திரும்புகிறான் ஜெயம். அங்கே விதவை அண்ணி வெறுப்பை உமிழ, இன்னொரு பக்கம் காத்திருக்கும் தனத்தின் வீட்டினர், அவளை தரதரவென இழுத்துப் போகிறார்கள்.

    ஜெயம் கட்டிய தாலி என்ன ஆனது? என்பது க்ளைமாக்ஸ்!

    ஜெயம் - தனம் திருமணம், அசோக் கொலை போன்ற சில காட்சிகள், திருப்பங்களை யூகிக்க முடிந்தாலும் எந்தக் காட்சியிலும், 'அட இது சினிமாத்தனமா இருக்கே' என்று சொல்ல முடியாததுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய ப்ளஸ்.

    லகுபரன், ஸ்வாதி இருவருக்குமே இது முதல் படம் என்றாலும் நம்ப முடியாத அளவு இயல்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு இம்மி கூட மிகைப்படுத்தல் இல்லாத காதலையும் சோகத்தையும் திரையில் பார்ப்பது, நம்மை நாமே பார்த்துக் கொள்வதைப் போல புதிதாக உள்ளது.

    தனத்தின் பெற்றோர், அந்த கிரிமினல் லாயர், அரசியல் அண்ணாச்சி, ஜெயத்தின் அண்ணி, குறிப்பாக அண்ணன் வேடத்தில் அசத்தியிருக்கும் தங்கசாமி என அனைவருமே நிஜ பாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்.

    கதை புதிதில்லை... 'காதல்' போன்ற படங்களில் பார்த்ததுதான் என்றாலும், தினம் இப்படி ஒரு கதை, சம்பவங்கள் நடந்து கொண்டுதானே உள்ளன. அப்படிப் பார்த்தால் ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் என்பதே கூட திரும்பத் திரும்ப அரங்கேறிய நாடகம்தானே!

    படத்தின் முக்கிய பலம் க்ளைமாக்ஸ். ஆனால் இன்னொரு பக்கம் இது சர்ச்சைக்குரியதும் கூட. பள்ளி வயதில் வரும் எல்லா காதலுமே மாறுதலுக்குட்பட்டது என்று சொல்ல முடியாதே. அந்தக் காதலின் தொடர்ச்சி அடுத்தக் கட்டத்துக்குப் போய், வாழ்க்கையில் இணைந்தவர்களை என்னவென்பது!

    ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவு, மனு ரமேசனின் இசை என தொழில்நுட்ப ரீதியாகவும் இந்தப் படம் சோடை போகவில்லை. பின்னணி இசையில் மண்ணும் மனிதர்களின் மனமும் தெரிகிறது.

    புதிய இயக்குநர்களில் தங்கசாமி நம்பிக்கை தரும் படைப்பாளியாகத் தெரிகிறார். வாழ்த்துகள்!

    English summary
    Raatinam is another treat of a film that packed with all ingredients in right mix and natural flavour. Kudos to debutant director KS Thangasamy who injects a rare freshness into this simple, straightforward love story which reaches out because it is presented well in a racy
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X