For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  Petta review - “இருக்கு ரசிகர்கள் கொண்டாட படத்தில் ஒரு சிறப்பான சம்பவம் இருக்கு” - பேட்ட விமர்சனம்

  |
  பேட்ட பட விமர்சனம்- வீடியோ
  Rating:
  3.5/5
  Star Cast: ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சனத், சிம்ரன், பாபி சிம்ஹா
  Director: கார்த்திக் சுப்பராஜ்
  கதை, திரைக்கதை, லாஜிக் என்பதையெல்லாம் கொஞ்சம் ஓரம் கட்டி வைத்து விட்டு, 'மீண்டும் ஒரு தலைவர் படம்'.. இப்படித்தான் இந்த விமர்சனத்தை ஆரம்பிக்கத் தோன்றுகிறது. ஏனென்றால் அந்தளவிற்கு ரஜினியின் பழைய துள்ளல், காமெடி, ஆக்‌ஷன் என அதிக எனர்ஜியோடு வெளிவந்திருக்கிறது பேட்ட.

  பழைய பகையை தீர்த்துக் கட்ட நாயகன் நிகழ்காலத்தில் எடுக்கும் முயற்சிகள் தான் கதையின் களம். ஏற்கனவே தமிழ் சினிமாவிற்கு ரொம்பவே பழக்கப்பட்ட கதைதான் என்றாலும், ரஜினி இதில் நடித்திருக்கும் போது ரசிக்க வைக்கிறது.

  Rajinis Petta review

  மலைப் பிரதேசம் ஒன்றில் இயங்கி வரும் கல்லூரியில் பலத்த சிபாரிசுகளுக்கு இடையே வார்டனாகச் சேர்கிறார் காளி (ரஜினி). இந்த வேலைக்கு ஏன் இவர் இப்படி மெனக்கெடுகிறார் என நாம் நினைக்கும் போதே, 'ஒரு சம்பவம் காத்திட்டிருக்கு..' என நம் எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார்கள். வழக்கம்போல, கல்லூரியில் பிரச்சினை வருகிறது. அதற்குக் காரணம் பாபி சிம்ஹாவும், அவரது அப்பாவான ஆடுகளம் நரேனும். அந்தப் பிரச்சினைகளை எல்லாம் தன் பாணியில் தட்டி சரி செய்கிறார் ரஜினி.

  இப்படியாக போய்க் கொண்டிருக்கையில் உத்தரப் பிரதேசத்தில் மிகப்பெரிய ரவுடியாக நவாசுதீன் சித்திக், அவரது மகனாக விஜய்சேதுபதி. காதலர் தினத்தன்று காதலர்களுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்து அராஜகம் பண்ணுகிறார்கள். தமிழகத்திலும் அதே போன்ற சம்பவம் நடக்கிறது.

  Rajinis Petta review

  இதற்கிடையே ரஜினி வேலை பார்க்கும் கல்லூரியில், காதல் பிரச்சினை காரணமாக அன்வர் என்ற மாணவரைக் கொல்ல ஆட்களை அனுப்புகிறார் விஜய் சேதுபதி. அந்த ஆட்களிடம் இருந்து அன்வரைக் காப்பாற்ற போராடுகிறார் ரஜினி. இப்போது தான் தெரிகிறது அன்வரைக் காப்பாற்றத்தான் ரஜினி ஹாஸ்டல் வார்டன் ஆனார் என்று.

  ஏன் ரஜினி அன்வரைக் காப்பாற்றத் துடிக்க வேண்டும்? அன்வர் யார்? ரஜினியின் மகனா? அன்வருக்கும், ரஜினிக்கும் என்ன தொடர்பு? என இப்படியாகச் செல்கிறது முதல்பாதி. இவற்றிற்கெல்லாம் இரண்டாம் பாதியில் விடையை ஒளித்து வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

  Rajinis Petta review

  படத்தின் முதல் காட்சியிலேயே ஐம்பது பேரை அடித்து அதகளம் செய்யும் மாஸ் நாயகனாக இண்ட்ரோ கொடுக்கிறார் ரஜினி. இதற்கு முந்தைய சில படங்களில் ரஜினியின் அறிமுகக் காட்சியோடு ஒப்பிடுகையில், இந்தக் காட்சி ஓஹோ ரகம். அவரோடு காட்சிக்கு காட்சி மற்ற நடிகர்கள் மாறுகிறார்களே தவிர, ஒவ்வொரு காட்சியிலும் ரஜினி இருக்கிறார். ரஜினியின் கதாபாத்திரம் அந்தளவிற்கு முக்கியத்துவப்படுத்தப் பட்டிருக்கிறது. ஜாலியான, துள்ளலான, காமெடியான பழைய ரஜினியை இதில் பார்க்க முடிகிறது. அவரது பழைய படங்களில் பார்த்த காமெடி இதில் வஞ்சம் இல்லாமல் நிறைந்திருக்கிறது.

  சண்டைக் காட்சிகளில் வயதான நபர் ஒருவர் எப்படி சண்டை போட முடியுமோ அந்தளவிற்கு கண்களை உறுத்தாத அளவில் பீட்டர் ஹெயின் காட்சிகளை அமைத்திருப்பது ரசிக்க வைக்கிறது. லாஜிக்கை மீறாமல் சண்டைக் காட்சிகள் ரஜினிக்கே உரிய முறையில் படமாக்கப்பட்டிருப்பது சிறப்பு.

  Rajinis Petta review

  முதல் பாதி முழுவதும் கொஞ்சம் முதுமை தெரிகிறது ரஜினி முகத்தில். ஆனால், அது காரணமாகத் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது இடைவேளையின் போது பிளாஷ்பேக் ஆரம்பமாகும்போது புரிகிறது. கபாலி மற்றும் காலாவில் ரஜினியை வயதான தோற்றத்தில் பார்த்து கவலைப்பட்ட ரசிகர்களுக்கு விருந்தாக, கலர்புல் காஸ்ட்யூமில் ரஜினி கலக்கியிருக்கிறார்.

  சிம்ரன் தான் முதல் பாதி முழுவதும். திரிஷாவுக்கு இரண்டாவது பாதி. செகண்ட் இன்னிங்சை மங்களகரமாக துவக்குகிறார் என்பதைக் குறிக்கவோ என்னவோ, மங்களம் என்ற பெயரில் கல்லூரி செல்லும் மாணவியின் ( மேகா ஆகாஷ்) தாயாக வந்தாலும், இளமையாகவே தோன்றுகிறார் சிம்ரன். ரஜினிக்கும், இவருக்கும் இடையேயான செகண்ட் லைப் காதல் காட்சிகள் இதயத்தை வருடும் மயிலிறகாக இருக்கிறது. அதிலும், 'இளமை ததும்புதே' பாடல் கண்களுக்கும், காதுகளுக்கும் ரம்மியமான உணர்வைத் தருகிறது. படத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஷாட் என கார்த்திக் சுப்புராஜ், ரஜினியும், சிம்ரனும் இருக்கும் ஒரு புகைப்படத்தை முன்பு வெளியிட்டாரே, அது படத்தில் காட்சியாக இன்னும் அசர வைக்கிறது.

  Rajinis Petta review

  திரிஷாவிற்கு தனது சினிமா கேரியரில் ரஜினியுடன் மட்டும் நடிக்கவில்லையே என்ற ஆதங்கத்தை தீர்த்துக் கொள்ள மட்டுமே இந்தப் படம் உதவும். மற்றபடி சொல்லிக் கொள்ளும்படி அவரது கதாபாத்திரம் இல்லை. அந்தக் காலத்து மயில் மாதிரி கிராமத்துப் பெண் தோற்றத்தில் அழகாக இருக்கிறார்.

  பிரதான வில்லனாக வரும் நவாசுதீன் சித்திக், 'நடிப்பு ராட்சசன்' என செல்லமாக திரையுலகினரால் குறிப்பிடப்படும் மிகப் பிரமாதமான நடிகர். தமிழிலும் அதனை நிரூபித்திருக்கிறார். இளமையான தோற்றத்தில் அசர வைக்கிறார். தமிழில் முதல் படமே அவரது நடிப்பிற்கு தீனி போடும் வகையில் அமைந்தது அவரது அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். சிறிய பாத்திரங்களில்கூட அசரவைக்கும் நவாசுதீன் போன்ற திறமையான நடிகருக்கு, இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் விடுவாரா, புகுந்து விளையாடி இருக்கிறார் மனுசன்.

  Rajinis Petta review

  விஜய் சேதுபதி நடிப்பு பற்றி சொல்லவே வேண்டாம். தனக்கு தரும் கதாபாத்திரத்தை, தனக்கே உரிய ஸ்டைலில் சிறப்பாக செய்வதில் வல்லவர். இதிலும், ஏறக்குறைய ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார். ரஜினியும், இவரும் ஒன்றாக திரையில் தோன்றும் காட்சிகளில் இருவரது பெர்பாமன்ஸையும் விட்டுக் கொடுக்காமல் காட்டியிருப்பதற்காகவே கார்த்திக் சுப்புராஜுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம்.

  சசிகுமாரின் அறிமுகத்தோடு ஆரம்பமாகிறது இடைவேளை. முதல் பாதியில் பாபி சிம்ஹா என்றால், இரண்டாம் பாதியில் சசிகுமார் என காட்சிகளை நகர்த்த இருவரும் உதவி செய்கிறார்கள்.

  ரஜினியின் நடை, கண்ணசைவு, சிரிப்பு என ஒவ்வொரு அசைவுக்கும் தனித்தனியே ரசித்து ரசித்து இசையமைத்துள்ளார் அனிருத். ஏற்கனவே பாடல்கள் சூப்பர் ஹிட். படத்தில் பின்னணி இசையும் வேற லெவலில் இருக்கிறது.

  சந்தேகமேயில்லாமல் ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்தும் படமாக காட்சிக்கு காட்சி பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். அவரது முந்தைய படங்களின் சாயல் அதிகம் இல்லாமல் ரஜினியின் மாஸ் மட்டுமே நம் கண்களுக்கு தூக்கலாகத் தெரிகிறது.

  முதல் பாதி கல்லூரி, அங்கு நடக்கும் பிரச்சினை என கொஞ்சம் இழுவையாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி ப்ளாஷ் பேக், உத்தரப்பிரதேசம் என உண்மையிலேயே 'சிறப்பான' சம்பவங்களுடன் ரசிக்க வைக்கிறது. கிளைமேக்ஸ் நெருங்கும்போது மீண்டும் சூடுபிடிக்கும் திரைக்கதையில், சர்ப்ரைஸுடன் கூடிய திருப்பம் நல்ல யுக்தி.

  Rajinis Petta review

  திருவின் ஒளிப்பதிவு படத்திற்கு பிளஸ். மலைப் பிரதேச அழகை காட்டுவதாகட்டும், உத்தரப்பிரதேசத்தின் வெம்மையை காட்டுவதாகட்டும், படத்தில் வண்ணங்களும் கதை சொல்கின்றன. சரியான இடங்களில் தேவையற்ற காட்சிகளை வெட்டி தூக்கி எறிந்து, சிறப்பான சம்பவமாக படத்தைத் தந்திருக்கிறார் விவேக் ஹர்சன்.

  ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பெரிதும் துணை புரியும் வகையில் இருக்கின்றன வசனங்கள். 'புதுசா வந்தா அடிச்சு விரட்டுவீங்க, கலாய்ப்பீங்க.. அப்டித்தானே.. ஆனா, அதுக்கெல்லாம் பயந்து ஓடிப்போக மாட்டேன், இது உங்க கோட்ட இல்ல என் பேட்ட ' என சமயம் கிடைக்கும் போதெல்லாம் டபுள் மீனிங்கில் பஞ்ச் பேசுகிறார் ரஜினி.

  மொத்தத்தில் ரஜினி படமாகவே வெளிவந்திருக்கிறது பேட்ட. பழைய ரஜினியைப் பார்க்க வேண்டும் என ஆவலாகக் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஸ்டைலிஷான ரஜினியைக் காட்டி, எக்ஸ்ட்ரா புத்துணர்ச்சி அடைய வைத்திருக்கிறார்கள். ரஜினி ரசிகர்களை நிச்சயம் திருப்தி படுத்தும் இந்த 'பேட்ட' என்பதில் சந்தேகமே இல்லை.

  English summary
  Rajini starrer Petta is full and full engaging and entertaining.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more