»   »  ரஜினிமுருகன் விமர்சனம்

ரஜினிமுருகன் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
3.0/5
-எஸ் ஷங்கர்

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சூரி, ஞானசம்பந்தம்

ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியெம்


இசை: டி இமான்


தயாரிப்பு: திருப்பதி பிரதர்ஸ்


இயக்கம்: பொன்ராம்


கொஞ்சம் ஆக்ஷன், ஏகத்துக்கும் நகைச்சுவை, முக்கிய வில்லனே காமெடியனாக மாறுவது, துருப்புச் சீட்டு மாதிரி ஒரு சீனியர் நடிகர்... இதுதான் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைத் தந்த இயக்குநர் பொன்ராமுக்கு பிடிபட்டுவிட்ட வெற்றி ஃபார்முலா!


Rajinimurugan Review

இந்த ஃபார்முலாவை வைத்து மீண்டும் ஒரு வெற்றிப் படத்தைத் தந்திருக்கிறார்.


படத்தின் தலைப்பே இது எந்த மாதிரி படம் என்பதைச் சொல்லிவிடுகிறது. எதிர்ப்பார்ப்போடு போகும் யாரையும் ஏமாற்றாத கலகல திரைக்கதை, படம் கொஞ்சம் நீளமாக இருந்தாலும் உட்கார வைத்து விடுகிறது.


வழக்கம் போல மதுரைதான் கதைக் களம். ஆனாலும்... மதுரையில்தான் எத்தனை விதமான சுவாரஸ்யங்கள்!


அப்படி ஒரு சுவாரஸ்ய கேரக்டர் ரஜினி முருகன். வேலை இல்லை. நினைத்தால் எந்த வேலையும் செய்யக் கூடிய ரஜினி முருகனுக்கு, கீர்த்தி சுரேஷ் மீது இன்று நேற்றல்ல... சின்ன வயசிலிருந்தே காதல். காரணம் இருவரின் அப்பாக்களும் அத்தனை நெருங்கிய சிநேகிதர்கள். அந்த சிநேகம் தந்த உரிமையில் 'உம் மகனுக்குத்தான்டா எம் பொண்ணு' என்று வாக்கு தந்து விடுகிறார் கீர்த்தியின் அப்பா.


Rajinimurugan Review

ஆனால் கால மாற்றத்தில் நட்பில் விரிசல் விழ, மகளுக்கு ரஜினி முருகனைப் பிடித்தாலும், அப்பாவுக்குப் பிடிக்காமல் போகிறது. இந்த சூழலில் ரஜினி முருகன் வீட்டு விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறார் ஏழரை மூக்கனாக வரும் சமுத்திரக் கனி.


'ரஜினி முருகனின் தாத்தா ராஜ்கிரணுக்கு தானும் ஒரு பேரன்தான்... எங்க அப்பத்தாவை அவர் வச்சிருந்தார்.. எனவே சொத்தில் பங்கு வேண்டும்' என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார்.


இந்த குண்டு வீச்சிலிருந்து ரஜினி முருகன் தன் குடும்பத்தைக் காத்தானா... மனசுக்குப் பிடித்த கீர்த்தியை மணம் முடித்தாரா என்பது கொஞ்சம் எதிர்ப்பார்த்த, கொஞ்சம் எதிர்ப்பார்க்காத திருப்பங்களுடன் கூடிய க்ளைமாக்ஸ்.


Rajinimurugan Review

பொங்கல் எத்தனை கலகலப்பான பண்டிகை. அந்த கலகலப்பை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்துவது மாதிரியான குதூகலமான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.


சிவகார்த்திகேயனுக்கு நடிப்புக்கு சவால் விடுவது மாதிரியான வேடமெல்லாம் இல்லை. அதே வவச -வின் நீட்சிதான் இந்த ரஜினி முருகன். பிடித்த, பழகிய வேலை என்பதால் புகுந்து விளையாடியிருக்கிறார் சிவா.


அவருக்கு துணையாக வரும் சூரிக்கு வழக்கமான நண்பன் பாத்திரம்தான். சில இடங்களில் ஹீரோவையே டாமினேட் செய்கிறார்.


Rajinimurugan Review

கீர்த்தியின் அழகும் இயல்பான நடிப்பும் பையன்கள் தூக்கத்தை இன்னும் பல நாட்களுக்கு பதம் பார்க்கும்.


சமுத்திக்கனி... காமெடி வில்லன். ராஜ்கிரண் வழக்கம்போல கம்பீர தாத்தா. அந்த சாவு வீட்டு காட்சியில் சுவாரஸ்யம்.


கீர்த்தியின் அப்பாவாக வரும் ரஜினி ரசிகர் அசத்துகிறார். அதுவும் அண்ணாமலை பட காட்சியை டிவியில் ஓடவிட்டு, மகளுக்கு அட்வைஸ் பண்ணும் காட்சி.. அருமை.


திரை முழுக்க ஏகப்பட்ட நட்சத்திரங்கள். ஆனால் அந்த இரண்டு பஞ்சாயத்து காட்சிகளும் வெகு யதார்த்தம். குறிப்பாக செல்லம்பட்டி பஞ்சாயத்து காட்சி.


இமானின் இசையில் பாடல்கள் ஏற்கெனவே பிரபலம் என்றாலும், இரண்டாம் பாதியில் இரு பாடல்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் தூக்கியிருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.


சில பழகிய காட்சிகள், பழகிய திரைக்கதைதான் என்றாலும்... கொண்டாட்ட மனநிலையுடன் கொட்டகைக்கு வரும் ரசிகர்களை ஏமாற்றவில்லை ரஜினி முருகன்!

English summary
Rajinimurugan is a jolly Pongal fun ride that ensures hundred percent entertainment for movie goers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil