For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சபரி-கிழிஞ்சு போன சஃபாரி

By Staff
|

ஆஹாஹா, ஓஹோஹோவென பேசப்பட்ட விஜய்காந்தின் சபரி ஒரு வழியாக வந்து விட்டது. ஆனால் இன்னொரு ரமணா என்று பேசப்பட்ட இந்தப் படம் பெரும் ரணமாக அமைந்துள்ளது.

சிவாஜிக்கு கடும் போட்டியைக் கொடுக்கப் போகும் படம், இன்னொரு ரமணா, கேப்டனை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தப் போகும் சூப்பர் படம் என பலவிதமாக ஊதி விடப்பட்ட படம் சபரி.

பஞ்ச் வசனங்கள் கிடையாது, மருத்துவ உலகில் நிலவும் அவலங்களை அக்குவேறு ஆணி வேராக அலசி மக்களுக்கு உதவும் மகத்தான டாக்டர் வேடத்தில் நடித்திருக்கிறார் விஜயகாந்த் என்றெல்லாம் எடுத்து விட்டார்கள். ஆனால் படத்தைப் பார்த்த பிறகுதான், ராம.நாராயணன் படத்துக்குப் பக்கத்தில் கூட வர முடியாத பரிதாப நிலையில் இருப்பது தெரிகிறது.

எனது திரையுலக வாழ்க்கையில் மிகச் சிறந்த படம் இதுதான் என்று முன்பு விஜயகாந்த் கூறியிருந்தார். ஆனால் விஜயகாந்த் வாழ்க்கையிலேயே மிகவும் மோசமான படம் இது என்பதுதான் நிஜம்.

வல்லரசு, வாஞ்சிநாதன், சுதேசி என விஜயகாந்த் நடித்த பல படங்களை ரிப்பீட்டாக போட்டுப் பார்த்து, அங்கங்கே சில மேட்டர்களை மட்டும் உருவி அப்படியே திரைக்கதை என்ற பெயரில் ரெடி செய்து அதற்கு சபரி என்று பெயர் சூட்டி ரிலீஸ் செய்து விட்டார்கள்.

படத்தின் ஆரம்பம் முதல் திரைைய மூடி ரசிகர்களை விரட்டும் வரை படம் முழுக்க ஒரே அடி, உதை, அக்கப் போருதான். தூக்க முடியாமல் தனது உடம்பைத் தூக்கிக் கொண்டு (அதில் அடுக்கடுக்காக கோட்கள், சூட்கள் வேற) விஜயகாந்த் சண்டை போடுவதைப் பார்க்கும்போது நமக்கு பாவமா இருக்கிறது.

அவர் போட்டுள்ள கோட்டைக் கழற்றி அடித்தாலே நாலு பேரை நாற்பது நாளுக்கு பெட் ரெஸ்ட் எடுக்க வைக்கலாம், அம்புட்டுக் கனம்!.

விஜயகாந்த் சபரிவாசன் என்கிற டாக்டராக வருகிறார். மிக பிரபலமான கார்டியாலஜிஸ்ட். சென்னை அரசு பொது மருத்துவமனையில் இதயவியல் டாக்டராக இருக்கிறார்.

நேர்மையானவர், நியாயமானவர், தப்பு யார் செஞ்சாலும் தப்பு என்கிற கொள்கை உடையவர். ஏழைகளுக்கு இரங்குபவர், உதவி தேவைப்படுவோருக்கு ஓடிப் போய் உதவிக் கரம் நீட்டுபவர். அதேசயமம், காந்தியவாதியும் கிடையாது. அடிக்கு அடி, உதைக்கு உதை, முடிக்கு முடி என்ற கொள்கை உடையவர்.

இப்படிப்பட்ட டாக்டர் சபரி மீது இரு பெண்களுக்கு காதல் பிறக்கிறது. ஒருவர் ஜோதிர்மயி, இன்னொருவர் பயிற்சி டாக்டரான மாளவிகா. ஆனால் ஜோதிரின் காதலை ஏற்று கரம் பிடித்து மனைவியாக்கிக் கொள்கிறார் கேப்டன். (இதெல்லாம் நடப்பதற்கு முன்பு இருவருடனும் சில ஜிலிமிலி டூயட்டுகளைப் பாடிக் கொள்கிறார் கேப்டன் - அதில் அவர் போட்ட கோட் சூட், மேக்கப் ஐட்டங்களைப் பற்றி எழுதுவதாக இருந்தால் பல மணி நேரம் ஆகும், அதனால் விட்டுருவோம்)

படத்தோட மெயின் வில்லன் பிரதீப் ராவத் (கஜினியில் சூர்யாவிடம் வந்து அடிபடுகிறாரே அவர்தான்). அவரோட மச்சான் நீளமுடி ஆர்யன். இதுதவிர பிதாமகன் மகாதேவனும் ஒரு வில்லன் (கதைதான்யா மெயின் வில்லன் என்று தியேட்டரில் சிலர் கதறியதையும் கேட்க முடிகிறது!).

இந்த மூன்று வில்லன்களும் சேர்ந்து நகரில் அட்டகாசம் செய்கிறார்கள். சபரிக்கு மேட்டர் தெரிய குமுட்டி அடுப்பு போலக் கொதிக்கிறார். நரம்பு புடைக்க, நாடி துடிக்க, கண்கள் கிடுகிடுக்க, தனது வழக்கமான புருவ ஆட்டத்துடன் வில்லன்களை ஒழிக்க புறப்படுகிறார்.

மூன்று பேரையும் நையப்புடைக்கிறார். மக்களை அவர்களின் பிடியிலிருந்து விடுவிக்கிறார். இதில் இன்னொரு கொடுமையும் உண்டு. அதாவது ஐஸ்வர்யாவும் ஒரு வில்லியாக வருகிறார். அவரும் தன் பங்குக்கு ரசிகர்களை தாளித்து எடுக்கிறார்.

வழக்கம் போல உடலை வருத்தி, அசைத்து நடிக்கப் பார்த்திருக்கிறார் விஜயகாந்த் (ஆனா வந்ததானே!). தப்பு நடக்கும் இடங்களிலெல்லாம் டக்கென்று கோட் சூட்டுடன் வந்து தட்டிக் கேட்கிறார்.

தேமுதிகவின் கொள்கை பரப்புச் செயலாளர் போல பல இடங்களில் இயக்குநர் மாறியிருக்கிறார். ஒரு உதாரணம். மண்டபம் அகதிகள் முகாமுக்குச் செல்லும் டாக்டர் சபரி, இதுக்கு முன்னாடி உங்களைப் பார்க்க வந்தவங்க, சும்மாதான் வந்து போனாங்க, ஆனால் நான் உங்களது கஷ்டங்களைப் போக்க வந்துள்ளேன். என்னை நம்புங்க என்கிறார்.

படத்தோட மெகா காமடியை சொல்ல மறந்து விட்டோமே. பொதுவாக ஆபரேஷன் தியேட்டர்களில் செல்போன்களை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் இதுதான் விஜயகாந்த் படமாச்சே. செல்போன் வெளிச்சத்தில் ஒரு ஆபரேஷனையே செய்து அசத்துகிறார்.

ஜோதிர்மயியும், மாளவிகாவும் பாட்டுக்கு ஆடியுள்ளனர். மாளவிகாவின் கிளாமர் கிளுகிளுப்பூட்டுகிறது.

என்ன சொல்ல வந்தோம் என்பதை தெளிவாகச் சொல்லாமல் என்னென்னமோ சொல்லி ரசிகர்களை கொடுமைப்படுத்தி குத்துயிரும் குலையுயிருமாக வெளியேற்றுகிறார்கள் சபரி யூனிட்டார்.

சபரி - கிழிஞ்சு போன சஃபாரி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more