For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  கர்நாடக இசை ஒரு சமூகத்துக்கு மட்டுமானதா.. கேள்வி கேட்டு, பதில் சொல்லும் ‘சர்வம் தாளமயம்’ - விமர்சனம்

  |
  சர்வம் தாளமயம் பற்றி நடிகர் ஜி.வி.பிரகாஷ்- வீடியோ
  Rating:
  3.5/5
  Star Cast: ஜி வி பிரகாஷ் குமார், நெடுமுடி வேணு, வினீத், அபர்ணா பாலமுரளி, திவ்யதர்ஷினி
  Director: ராஜிவ் மேனன்

  சென்னை: கர்நாடக சங்கீதம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கானது மட்டும் தானா என்ற கேள்வியை முன்வைத்து, அதற்கு விடையும் சொல்கிறது சர்வம் தாளமயம்.

  மிருதங்கம் செய்து விற்கும் ஏழை தொழிலாளி ஜான்சன் (குமரவேல்), சூப்புக்கடை நடத்தும் தெரசா தம்பதியின் மகன் பீட்டர் (ஜி.வி.பிரகாஷ்). கல்லூரி படிக்கும் பீட்டர் ஒரு தீவிர விஜய் ரசிகன். இதன் காரணமாகவே அவனது படிப்பு தடைபடுகிறது. இதற்கிடையே நர்ஸாக வேலைபார்க்கும் சாரா (அபர்ணா முரளி) மீது காதல் கொள்கிறார். பீட்டருக்கு இயல்பாகவே நன்றாக மேளம் வாசிக்க வருகிறது.

  Sarvam thala mayam movie review

  சங்கீதம் என்பது சபா கச்சேரிகளுக்கு மட்டுமே உரித்தானது என்ற கொள்ளையுடன் விளங்கும் மிருதங்க சக்ரவர்த்தி பாலக்காடு வேம்பு ஐயரின் (நெடுமுடி வேணு) ஒரு கச்சேரியை யதேச்சையாக கேட்கிறான் பீட்டர். அதன் பிறகு மிருதங்கம் மீது அவனுக்கு தீராக்காதல் ஏற்படுகிறது. ஆனால் அவன் பிறந்த சமூகத்தின் காரணமாக, அவனது ஆசை நிராகரிக்கப்படுகிறது. மிருதங்கம் மீதான பீட்டரின் காதல் வென்றதா என்பதை ஒரு இசை திருவிழாவாக சொல்கிறது சர்வம் தாளமயம்.

  கிட்டத்தட்ட 19 வருடங்களுக்குப் பிறகு ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் சர்வம் தாளமயம். அதனாலோ என்னமோ தரத்தில் கொஞ்சம் கூட சமரசம் செய்து கொள்ளாமல் வந்திருக்கிறது படம். ராஜீவ் மேனனுக்கே உரித்தான தனி ஸ்டைலில், படம் பல மொழிகளை பேசுகிறது.

  Sarvam thala mayam movie review

  கர்நாடக சங்கீதம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கானது மட்டும் தானா என்ற கேள்வியை முன்வைக்கிறார் இயக்குனர் ராஜீவ் மேனன். ஒரு தலித் இளைஞன் கர்நாடக சங்கீதம் கற்க வேண்டும் என நினைக்கும் போது, அவனுக்கு ஏற்படும் தடைகள் எவ்வாறு இருக்கும் என்பதை மிக அற்புதமாக சொல்லியிருக்கிறார் ராஜீவ். அதேபோல், "கர்நாடக சங்கீதம் என்பது கிணற்று தண்ணீர் அல்ல. அருவி போல் புது மழைத்துளிகளை தன்னுடன் சேர்த்துகொண்டு நதியாய் பாய்ந்து, இசைக் கடலில் சங்கமிக்க வேண்டும்", என படத்தை முடித்திருப்பதற்கும் பாராட்டுகள்.

  படத்தில் நிறைய காட்சிகள் தீண்டாமையின் நவீன வடிவத்தைக் காட்டுகின்றன. அதேபோல, பல வசனங்கள் என்றும் மாறாத மக்களின் மனநிலையை உணர்த்துகின்றன. குறிப்பாக, வினித்துடன் ஜி.வி.பிரகாஷ் மோதும் ஒவ்வொரு காட்சியும் நாட்டில் நிலவும் சகிப்புதன்மையின்மைக்கு எடுத்துக்காட்டு.

  Sarvam thala mayam movie review

  படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும், அதற்கு ராஜீவ் தேர்ந்தெடுத்த நடிகர்களும் மிக அற்புதம். குறிப்பாக பீட்டரின் தந்தையாக நடித்திருக்கும் குமரவேலும், வேம்பு ஐயராக நடித்திருக்கும் நெடுமுடி வேணுவும் இரு துருவங்களில் வாழும் மனிதர்களின் எடுத்துக்காட்டு.

  ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரை வந்த படங்களில், ஜி.வி.பிரகாஷுக்கு பெயர் சொல்லும் படம் இது. கதை களம் தன்னுடைய ஏரியா என்பதால், அசால்டாக நடித்திருக்கிறார். இந்த படத்திற்காக மிருதங்கம் கற்றுக்கொண்டு, லைவாகவே மிருதங்கம் வாசித்து அசர வைத்திருக்கிறார். தாழ்த்தப்பட்ட அடித்தட்டு மக்களின் பிரிதிநிதியாக படம் முழுக்க பயணத்து, அப்ளாஸ் அள்ளுகிறார். வாழ்த்துகள் ஜி.வி.

  Sarvam thala mayam movie review

  படத்தின் முக்கிய இரண்டு தூண்கள் நெடுமுடி வேணுவும், குமரவேலும். இருவருமே தேர்ந்த நடிகர்கள் என்பதால், திரையில் கதாபாத்திரமாகவே தோன்றியிருக்கிறார்கள். குமரவேலின் மனைவியாக நடித்திருப்பவரும், ஒரு இயல்பான குடும்பத் தலைவியை கண்முன் நிறுத்துகிறார்.

  ஓவர் மேக்கப் இல்லாமல், யதார்த்தமான அழகுடன் திரையில் ஜொலிக்கிறார் அபர்ணா முரளி. தமிழுக்கு நல்ல அறிமுகம். குறை சொல்ல முடியாத அளவுக்கு நடிப்பில் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

  Sarvam thala mayam movie review

  டிடி.க்கு இந்த படத்தில் கிட்டத்தட்ட வில்லி கதாபாத்திரம். நிஜத்தில் தான் செய்யும் வேலையை தான் படத்திலும் செய்திருக்கிறார். அதனால் மிக யதார்த்தமாகவே தோன்றுகிறது. வினித்துக்கு இது ஒரு கம்பேக் படம். சிறப்பாக செய்திருக்கிறார்.

  படம் முழுதும் ஆக்கிரமித்துக்கொள்கிறது ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. "வரலாமா உன் அருகில்... பெறலாமா உன் அருளை" பாடல் திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்க தோன்றும் ரகம். பாடல்களையும் மீறி, படத்தின் பின்னணி இசை நம்மை அப்படியே கட்டி அணைத்து கொள்கிறது. குறிப்பாக, அபர்ணாவிடம் ஜி.வி. மிருதங்கம் மீது தனக்குள்ள காதலை சொல்லும் காட்சியில், நமக்கும் மிருதங்கம் மீது காதலை உண்டாக்கிவிடுகிறார். ஆஸ்கர் நாயகன் ஒரு ஜீனியஸ் என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம். ஏ.ஆர்.ரஹ்மானும் ராஜீவ் மேனனும் மீண்டும் ஒரு இசைக் கச்சேரியை நடத்தியிருக்கிறார்கள்.

  ராஜீவ் மேனன் படம் என்றாலே விஷுவல் ட்ரீட்டாக இருக்கும். ஆனால் இந்த படம் மிக ராவான காட்சிகளை கொண்டிருக்கிறது. ஒளிப்பதிவாளர் ரவி யாதவ் கலரிங் வேலைகளில் பெரிதாக ஈடுபடவில்லை என்றே தோன்றுகிறது. அதேபோல் பிரமாண்ட செட் வேலைகள் இல்லாததும் ஏமாற்றம் தான்.

  ஆண்டனியின் படத்தொகுப்பில் படத்தின் முதல் பாதி ஆரம்பித்த உடனேயே முடிந்துவிட்டது போல் மிக வேகமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் வரும் சங்கீத சாம்ராட் ரியாலிட்டி ஷோ காட்சிகளை மட்டும் இன்னும் கொஞ்சம் கத்திரித்திருக்கலாம்.

  கர்நாடக இசை உலகில் உள்ள அரசியலை இலைமறை காயாக பேசுகிறது படம். இரட்டை குவளை முறை போன்ற ஒரு சில விஷயங்களை நேரடியாகவே போட்டுத் தாக்குகிறார். இந்த மக்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற காட்சியமைப்பும் படத்தில் நிறைய இருக்கிறது.

  இசைக்கு சாதி, மதம், மொழி என எந்த எல்லையும் கிடையாது. கர்நாடக இசையை எல்லோருக்குமான இசையாக மாற்ற வேண்டும் என்ற நல்ல கருத்தை எடுத்துச் சொல்கிறது படம். ஆனால் கர்நாடக இசை தான் உயர்ந்தது என்ற வாதம் சரி தானா என்ற கேள்வியும் எழுகிறது. நாடகத் தன்மையுடன் உள்ள காட்சிகள் நிறைய உள்ளதும் படத்தின் ஒரு மைனஸ்.

  எப்படி இருந்தாலும், ஏ.ஆர்.ரஹ்மான், ராஜீவ் மேனனின் இசை எனும் இன்ப வெள்ளத்தில் மூழ்கி தாளம் போட்டு ரசித்து மகிழ,சர்வம் தாளமயத்துக்கு டிக்கெட் போடலாம்.

  English summary
  Rajiv Menon's Sarvam Thalamayam is musical treat to the audience by A.R.Rahman.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more