twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷமிதாப் - விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    4.0/5

    எஸ் ஷங்கர்

    நடிகர்கள்: அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாஸன், ருக்மணி

    ஒளிப்பதிவு: பிசி ஸ்ரீராம்

    இசை: இளையராஜா

    தயாரிப்பு : ஈராஸ் இன்டர்நேஷனல்

    எழுத்து - இயக்கம்: ஆர் பால்கி

    எ பிலிம் பை... என்று போட்டுக் கொள்ளும் எல்லா இயக்குநர்களும் இயக்குநர்கள் அல்ல... பால்கியைப் போன்ற சொந்த எழுத்தைப் படைப்பாக்கும் சிலருக்கு மட்டுமே அப்படிப் போட்டுக் கொள்ள தகுதியும் உரிமையும் இருக்கிறது.

    ஷமிதாப்பிலும் அந்த தகுதியைப் பெறுகிறார் பால்கி.

    அமிதாப்பையும் இளையராஜாவையும் இவர் அளவுக்கு காதலிப்பவர்கள் யாருமிருக்க முடியுமா தெரியவில்லை. இந்த இரு மேதைகளிடமிருந்தும் தொடர்ந்து அற்புதமான பங்களிப்பைப் பெற்று வருகிறார் பால்கி.

    படத்தின் கதை, இணையத்தை வாசிக்கும் அத்தனைப் பேருக்கும் தெரிந்ததுதான்.

    Shamitabh Review

    வாய் பேச இயலாத, ஆனால் நடிப்பில் பேராவல் கொண்ட தனிஷ்.. நடிக்க லாயக்கில்லை என்று விரட்டப்பட்ட ஒரு குடிகார, திமிரும் ஈகோவும், முரட்டுத்தனமும் கொண்ட கிழவன் அமிதாப் சின்ஹா... தனிஷின் நடிப்பையும் அமிதாப்பின் குரலையும் ஷமிதாப்பாக இணைக்கும் உதவி இயக்குநர் அக்ஷரா... முதல் இருவரின் ஈகோ மோதல்களின் உச்சத்தில் ஏற்படும் முடிவு... இந்த நிகழ்வுகளை பால்கி படமாக்கி இருக்கும் விதம்... அவற்றுக்கிடையே ஜீவநதியாகப் பாயும் இளையராஜாவின் இசை.

    -இதான்டா இந்திய சினிமா என்று நிச்சயமாக மார்த்தட்டிச் சொல்லலாம்.

    அமிதாப்... இந்தப் படத்தில் அவர் சர்வ நிச்சயமாய் நடிக்கவில்லை. அமிதாப் சின்ஹாவின் வாழ்க்கைய வாழ்ந்து பார்த்திருக்கிறார். கூடுவிட்டு கூடு பாய்வது மாதிரி. இந்த மகா கலைஞனை உச்சத்தில் வைத்து கவுரவிக்க வேண்டிய கட்டம் இதுதான்.

    பாலிவுட் பற்றிய தன் விமர்சனத்தை அந்த மரத்தைப் பார்த்துச் சொல்வாரே... வாரே வா.. அதுக்கெல்லாம் ஒரு தில் வேணும். சலாம் அமித்ஜி!

    Shamitabh Review

    தனுஷ்... படத்துக்குப் படம் பிரமிப்பைத் தருகிறார். வேலையில்லாப் பட்டதாரியில் பார்த்த தனுஷ் சுண்டக் காய்ச்சிய பட்டை சாராயம் என்றால், இந்த ஷமிதாப்பில் அவர் ராயல் ஸ்காட்ச் மாதிரி அத்தனை க்ளாஸிக்!

    தனுஷின் தோற்றம், ஸ்டைல், குரலற்ற ஆவேச வாயசைப்பு... தான் ஒன்று சொல்ல முயல... அதற்கு நேரெதிராக அமிதாப் பேசி மாட்டிவிடும் காட்சியில் அவர் முகத்தில் காட்டும் ஆத்திரம், இயலாமை... சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு நூறு சதவீதம் தகுதியான கலைஞன். தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துவிட்டார்.

    கமலின் மகள் நன்றாக நடித்திருக்கிறார் - இப்படிச் சொல்வது கொஞ்சம் அபத்தமாக இருக்கிறதல்லவா! தந்தையின் பெயரை முதல் படத்திலேயே காப்பாற்றிவிட்டார் அக்ஷரா. அந்தப் பாத்திரத்துக்கு என்ன தேவையோ.. அதை இயல்பாகச் செய்திருக்கிறார்.

    இந்த மூன்று பாத்திரத்துக்கிடையிலும் உயிரோட்டம் போல ஓடிக் கொண்டே இருக்கிறது இளையராஜாவின் இசை. தேவையான இடங்களில் உலகின் ஒப்பற்ற இசை மொழியையும், தேவையற்ற இடங்களில் மவுனத்தையே பேசுமொழியாகவும் வைத்திருக்கிறார் இசைஞானி. அந்த கடைசி 15 நிமிடங்கள்... பால்கி சார், அந்த 15 நிமிட இசைக் கோர்வையை மட்டும் தனி சிடியாக வெளியிடுங்கள். இசை அமைப்பாளர்கள் ரெஃபரன்சுக்காக!

    Shamitabh Review

    பாடல்கள் அனைத்துமே இனிமை. குறிப்பாக அந்த ஷஷஷ மிமிமி தததா... இசைஞானியின் மனசுக்கு இன்றைக்கும் அதே அன்னக்கிளி வயசுதான்!

    பிசி ஸ்ரீராம்... இது என் ஒளிப்பதிவு என தனித்துக் காட்டாமல் இயக்குநரோடு பயணித்திருக்கிறார். பால்கி - ராஜா - ஸ்ரீராம்... வாவ், என்ன ஒரு இனிமையான காமிபினேஷன்!

    படத்தில் வரும் அத்தனைப் பாத்திரங்களும் தங்கள் வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.

    குறைகளே இல்லையா.. அதைச் சொல்ல வேண்டாமா? இருக்கிறது. க்ளைமாக்ஸின் ஆரம்பம்.. அது இப்படித்தான் முடியப் போகிறது என எளிதாய் யூகிக்க முடியும் பாணி..

    ஆனால் இந்தப் படத்தை ரசிக்க, உணர்ந்து அனுபவிக்க அது எந்த வகையிலும் தடையில்லை.

    ஷமிதாப்பை திரையில் பாருங்கள்.. இந்தியாவின் தலைசிறந்த படைப்பாளிகள், கலைஞர்களை கவுரவப்படுத்துங்கள்.

    English summary
    Watching Shamitabh is an experience.. Go and watch it for Amitabh, Dhanush, Ilaiyaraaja and of course for Balki, the director.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X