For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஸ்பைடர் விமர்சனம் #SpyderReview

  By Shankar
  |
  ஸ்பைடர் படம் எப்படி இருக்கு தெரியுமா?-வீடியோ

  Rating:
  2.5/5
  Star Cast: மகேஷ் பாபு, எஸ் ஜே சூர்யா, ரகுல் ப்ரீத் சிங்
  Director: ஏ ஆர் முருகதாஸ்
  -எஸ் ஷங்கர்

  நடிகர்கள்: மகேஷ் பாபு, எஸ் ஜே சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், பரத்

  ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்

  இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

  தயாரிப்பு: என்வி பிரசாத், தாகூர் மது

  இயக்கம்: ஏ ஆர் முருகதாஸ்

  கதை சுமாராக இருந்தாலும், அதை எடுக்கும் விதத்தில் தன் முத்திரையைப் பதித்துவிடுவார்கள் சில இயக்குநர்கள். அவர்களில் ஒருவர் ஏ ஆர் முருகதாஸ். ஸ்பைடரில் அந்தப் பெயரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறாரா முருகதாஸ்? பார்க்கலாம்!

  Spyder Review

  சக மனிதனை நேசி என்ற தன் 'ஸ்டாலின்' பட கருவை, இன்றைய தொழில்நுட்ப தலைமுறைக்கேற்ப கொஞ்சம் டெவலப் செய்து, ஏகப்பட்ட பணம் செலவழித்து ஸ்பைடராக்கியிருக்கிறார் ஏஆர் முருகதாஸ்.

  படத்தின் கதை இந்நேரம் மீடியாவில் அலசிக் காயப்போட்டிருப்பார்கள். பிதாமகன் மாதிரி ஆரம்பிக்கிறது கதை. ஒரு சைக்கோ கொலைகாரனை, தேடி அழிக்கும் ஹீரோ என்பதுதான் இதன் ஒருவரி கதை. ஆனால் இந்தக் கதைக்குள் ஏகப்பட்ட ட்விஸ்டுகள் (களைத்துப் போகும் அளவுக்கு), ப்ளாஷ்பேக்குகள், சுவாரஸ்யமில்லாத காதல் எல்லாம் வைத்திருக்கிறார் முருகதாஸ்.

  இது நேரடி தமிழ்ப் படமா என்பதில் நிறைய சந்தேகம். மகேஷ் பாபு சொந்தக் குரலில் பேசுகிறார் என்பதற்காக அவரது 'தெமிழை' ரசிக்க முடியாது.

  ஒரு தெலுங்கு மசாலா படத்தை நவீன வடிவில் கொடுத்திருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம். எல்லாவற்றிலும் அப்படி ஒரு மிகை. ஒரு பெரும் பாறை சாலையில் உருண்டோடி வருகிறது. உள்ளுக்குள் என்ன மோட்டார் வைத்திருக்கிறார்களா என்ன? அப்புறம் அந்த ரோலர் கோஸ்டர் சண்டை.

  Spyder Review

  ஹீரோ என்பதால் எப்படிப்பட்ட சாகஸத்தையும் செய்யமுடியும் என கட்டமைக்கப்பட்ட காட்சிகள் எக்கச்சக்கம். அதுவும் மோட்டார் சைக்கிளிலிருந்து எகிறி, லாரியின் கம்பிகளில் குத்தி உயிருக்குப் போராடிய ஒருவர், இரண்டு நாட்களில் திரும்பி போலீசின் துப்பாக்கியை எடுத்து வில்லனைச் சுடுவதெல்லாம் புதிய முருகதாஸ்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்.

  படத்தின் பெரும் சொதப்பல் கிராபிக்ஸ் காட்சிகள். ஏழாம் அறிவு படத்தின் முதல் 20 நிமிடக் காட்சியில் பெரிய கிராபிக்ஸ் உத்தி எதுவும் இருக்காது. ஆனால் நேர்த்தி.. அத்தனை அற்புதமாக இருக்கும். ஏதோ ஒரு வெளிநாட்டுப் படத்தைப் பார்க்கும் உணர்வு வரும். அப்படி படமெடுக்கும் வித்தை தெரிந்தவருக்கு இந்த கிராபிக்ஸ் எல்லாம் தேவையே இல்லை. அல்லது செய்வதை திருந்தச் செய்திருக்க வேண்டும்.

  ஹீரோ மகேஷ் பாபு. தெலுங்கு ரசிகர்களுக்கு அவர் இளவரசனாக இருக்கலாம். ஆனால் இங்கே நம் ஹீரோக்களுடன் ஒப்பிடும்போது... ப்ச்! அவர் முகத்தில் என்ன பாவனை காட்டுகிறார் என்பதையே தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் போடும் சண்டைகளும் நம்பும்படி இல்லாததால் பெரிதாக அவரை ரசிக்க முடியவில்லை.

  எப்போதெல்லாம் பாடல் காட்சி வருகிறதோ அப்போதெல்லாம் 'டான்' என்று ஆஜராகிவிடுகிறார் ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங். ஆனால் பார்க்க அழகாக இருக்கிறார்.

  படத்தில் செம ஸ்கோர் எஸ் ஜே சூர்யாவுக்கு. வக்கிரம் பிடித்த, சைக்கோ கொலைகார பாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். வசன உச்சரிப்பு, உடல் மொழி எப்படி இருக்க வேண்டும் என்று இவரிடம் மகேஷ் பாபு கற்றுக் கொண்டிருக்கலாம்.

  பரத்தும் படத்தில் இருக்கிறார். அவ்வளவுதான் சொல்ல முடியும்.

  சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு படத்துக்கு மேற்கத்திய பளபளப்பைத் தர உதவியிருக்கிறது. ஆனால் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் சுத்தமாக எடுபடவில்லை. பின்னணி இசை பரவாயில்லை.

  'சமூக வலைத் தளங்கள். வாட்ஸ்ஆப்பில் காலத்தைக் கழித்து வரும் இன்றைய இளைஞர்கள், தங்கள் அருகாமையிலிருப்பவர்களின் கஷ்டத்தைப் போக்க முயற்சிக்கலாம்... உதவி செய்யலாம்' என்பதுதான் இந்தப் படம் மூலம் முருகதாஸ் சொல்ல வந்த கருத்து.

  சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல கருத்தை ஏன் இத்தனை கொலைவெறியோடு சொல்ல வேண்டும் முருகதாஸ்.

  English summary
  Review of AR Murugadoss - Mahesh Babu's Spyder movie
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X