For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தங்க மீன்கள் - விமர்சனம்

  By Shankar
  |

  Rating:
  2.5/5

  எஸ் ஷங்கர்

  நடிப்பு: ராம், பேபி சாதனா, பூ ராம், ஷெல்லி கிஷோர், ரோகிணி

  ஒளிப்பதிவு: அர்பிந்து சாரா

  இசை: யுவன் சங்கர் ராஜா

  மக்கள் தொடர்பு: நிகில்

  தயாரிப்பு: போட்டான் கதாஸ்

  எழுத்து - இயக்கம்: ராம்

  வாழ்க்கையில் சில விஷயங்களைக் கொண்டாடிக் கொண்டிருப்பதில்லை மனித இனம். பூவின் வாசம், மழையின் மகத்துவம் மாதிரிதான் சில மனித உறவுகளும். அவை இயற்கையானவை. அதை ரொம்பவே மிகைப்படுத்தி முக்கியத்துவம் தரும்போது செயற்கைத்தனம் எட்டிப் பார்ப்பதை உணரலாம்!

  தங்க மீன்களுக்கு வந்த பிரச்சினை இதுதான். இது நல்ல படமா... மகள் மீது பாசம் என்ற பெயரில் இப்படி கண்மூடித்தனமாக நடந்து கொள்வாரா ஒரு ஏழை அப்பா? 'மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்பது' என்ற அபத்த வசனத்துக்கும் இந்தப் படத்துக்கும் என்ன தொடர்பு..? இந்த வார்த்தைகளை வலிந்து திணிக்க வேண்டிய அவசியம், பார்வையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி விளம்பரம் வேண்டும் என்பதற்காகவா? முத்தம் என்பது ஒரு உணர்வு.. மகளே பெறாத தந்தையாக இருந்தாலும், அடுத்தவர் பெண் குழந்தையை தான் பெற்ற குழந்தையாகவே பாவித்துக் கொஞ்சுவதும் முத்தமிடுவதும் இயல்பு. இதற்கு ஏன் இத்தனை வன்மம் தொனிக்கும் வசனம்?

  மகள் மீது ஏகத்துக்கும் பாசம் கொண்ட, மகளை அருகிலிருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே உள்ளூரில் கிடைத்த ஈயம் பூசும் வேலையை கம்மியான சம்பளத்துக்குப் பார்க்கும் அப்பா கல்யாணி (ராம்), தந்தை மீது அளவற்ற பாசம் வைத்த, தந்தையின் பணப் பிரச்சினைகளுக்கு தானே காரணம் எனப் புரிந்து குளத்தில் மூழ்கி தங்கமீனாய்ப் போகவும் தயாராகும் மகள் செல்லம்மா... இந்த இருவரின் வாழ்க்கைச் சம்பவங்கள்தான் தங்க மீன்கள்.

  ஏழைத் தந்தையின் பொருளாதார நெருக்கடி, தனியார் பள்ளிகளின் கொடுமை, அரசுப் பள்ளிகளின் மகத்துவம், மகள் மீது அப்பாவுக்கு மட்டுமே உள்ள அளவில்லாத பாசம் என அங்கேயும் இங்கேயுமாக அலைகிறது ராமின் திரைக்கதை. பல காட்சிகளில் செயற்கைத் தனமும், வேண்டுமென்றே திணிக்கப்பட்ட உணர்வும் மேலோங்குகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களைச் சாடும் காட்சி, கற்றது தமிழின் நீட்சி.

  உதாரணத்துக்கு அந்த வோடபோன் நாய்க்குட்டிக்காக ராம் படும் பாடு. 'அய்யோ போதும்யா.. சீக்கிரம் நாயை வாங்கிக் குடுத்துத் தொலை' என்று சவுண்ட் விடும் அளவுக்கு மகா செயற்கை. அதுவும் அந்த லேப்டாப்பை பிடுங்கிக் கொண்டு அடிவாங்கும் ராமின் செயலை என்னவென்று நியாயப்படுத்துவது? அங்கே அவர் தந்தையாக இல்லை. ஒரு வித மனநிலை பிறழ்ச்சியுள்ள கிறுக்கனாகவே தெரிகிறார்!

  தந்தைக்கும் மகனுக்கும் அப்படி என்ன ஈகோ? பள்ளிக் கட்டணம் கட்ட எவரெவரிடமோ கையேந்தும் ராம், வசதியான சொந்தத் தந்தை தர முன்வரும் பணத்தைப் பெற மறுப்பது ஏன் என்பதற்கான விளக்கம் படத்தில் கடைசி வரை சொல்லப்படவில்லை.

  அதனால்தான், 'கல்யாணி, அதான் உன் பெண்ணுக்குத்தான் ஒரு அம்மா இருக்காளேடா.. நீ வேற எதுக்கு இன்னொரு அம்மா மாதிரி உன் பொண்ணு பின்னாலயே சுத்தற... போய் வேல வெட்டி பார்த்து நாலு காசு சம்பாதிச்சு எல்லோரும் மதிக்கிற மாதிரி நடந்துக்க," என ராமின் அப்பா திட்டும்போது கைத்தட்டல்களைக் கேட்க முடிகிறது.

  இயக்குநர் ராம் படமெடுத்திருப்பது 2013-ல். ஆனால் படத்தில் அவர் பெறும் சம்பளம் எண்பதுகளின் ஆரம்பத்தில் வந்த வறுமையின் நிறம் சிவப்பை நினைவுபடுத்துகிறது. கேரளாவுக்கு சம்பாதிக்கப் போகிறார். அட அங்கும் நான்காயிரத்தைத் தாண்டவில்லை சம்பளம்!

  மக்கள் நடமாட்டம் உள்ள தெரு அல்லது சாலைகளிலேயே குழந்தைகளை தனியாக அனுப்ப ஆயிரம் யோசனை செய்கிறார்கள். ஆனால் மகளைப் பார்த்துப் பார்த்து வளர்க்கும் ராமும் அவர் குடும்பமும் அவளை இஷ்டத்துக்கு விடுகிறார்கள். அவளோ தங்க மீன்கள் பார்க்கப் போறேன் என ஆபத்தான குளத்தில் இறங்கிவிடுகிறாள். இவர்களோ அடிக்கடி செல்லம்மாவைக் காணோம் என்கிறார்கள், க்ளைமாக்ஸ் வரை!

  மகளை இப்படி நேசிக்கிறார்.. முகத்தோடு முகம் வைத்து கொஞ்சுகிறார்... குறைந்தபட்சம் அந்த 'தம்'மையாவது விட்டுத் தொலைத்திருக்கலாம்.

  பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளதுதான் உண்மை நிலை என்பதை மறுப்பதற்கில்லை. ராம் மாதிரியான பெற்றோர்கள் அரசுப் பள்ளிகள் பக்கம் பார்வையைத் திருப்பினால், மீண்டும் எழுபது, எண்பதுகளில் இருந்த தரம் அரசுப் பள்ளிகளுக்குத் திரும்பும்.

  திரைக்கதையில் இத்தனை சொதப்பல்கள் இருந்தாலும் சில காட்சிகள் உண்மையிலேயே நெகிழ வைக்கின்றன. உதாரணம், அந்த டபியுள்யூ கற்றுத் தரும் காட்சி. எத்தனை எளிமையான விளக்கம் அது. ஆனால் அதை இரண்டாம் வகுப்புப் பெண்ணுக்குக் கற்றுத் தருவதாக வருவதுதான் உறுத்தல். அதற்கு முன் ப்ரீ கேஜி, எல்கேஜி, யூகேஜி, முதல் வகுப்பு என நான்கு ஆண்டுகள் படித்திருப்பாளே... அப்போது கற்கவில்லையா இந்த டபிள்யூவை?

  மனதில் சுற்றிச் சுழன்றடிக்கும் அருமையான இசை... அதுவும் அந்த ஆனந்த யாழை.. பாடல், கண்களை விட்டு அகல மறுக்கும் ஒளிப்பதிவு நேர்த்தி போன்றவற்றவற்றுக்குச் சொந்தக்காரர்களான யுவனையும் அரபிந்து சாராவையும் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

  கல்யாணியாக வரும் ராமும், செல்லம்மாவாக வரும் பேபி சாதனாவும் நன்றாகத்தான் நடித்திருக்கிறார்கள். ஆனால் சில காட்சிகளில் இருவருமே செயற்கைத்தனம் அல்லது மிகை நடிப்பைக் காட்டியிருப்பதால் மனதில் ஒட்ட மறுக்கிறார்கள். குழந்தைத்தனத்தைக் காட்டுவதாகக் கூறி எரிச்சல்படுத்துகிறார்கள் (குழந்தைகளின் எல்லா குழந்தைத்தனங்களையும் பெற்றோரால் ரசிக்க முடிவதில்லை என்பதும் உண்மைதானே!).

  Thanga Meengal - Review

  ராமின் மனைவியாக வரும் ஷெல்லி கிஷோருக்கு வெகு இயல்பான வேடம். அவரும் உணர்ந்து நடித்திருக்கிறார். தந்தையாக வரும் பூ ராம் இன்னொரு சிறப்பான தேர்வு. படத்தில் மருந்துக்கும் நகைச்சுவை இல்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.

  தங்க மீன்களை நிச்சயம் ஒரு முறை பார்க்கத்தான் வேண்டும், ஒரு தந்தை தன் மகளை எப்படி வளர்க்கக் கூடாது என்பதை உணர்ந்து கொள்ள!

  English summary
  Review of Ram's second directorial venture Thanga Meengal. The film attracts bits and pieces but its poor screenplay fails to grab the full attention of the viewers.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X