»   »  திருட்டுப் பயலே 2 விமர்சனம் #Thiruttupayale2Review

திருட்டுப் பயலே 2 விமர்சனம் #Thiruttupayale2Review

Posted By:
Subscribe to Oneindia Tamil
திருட்டுப் பயலே 2 விமர்சனம்
Rating:
3.0/5

எஸ் ஷங்கர்

நடிப்பு: அமலா பால், பாபி சிம்ஹா, பிரசன்னா, எம்எஸ் பாஸ்கர், விவேக், ரோபோ சங்கர்

ஒளிப்பதிவு: செல்லத்துரை

இசை: வித்யாசாகர்

தயாரிப்பு: ஏஜிஎஸ்

இயக்கம்: சுசி கணேசன்

Thiruttupayale 2 review

கணவனுக்குத் தெரியாமல் கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் ஒரு பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி சொகுசு வாழ்க்கை வாழும் ஒருவனின் கதையை திருட்டுப் பயலேவில் சொன்ன சுசி கணேசன், அதன் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார், அதே தலைப்பில். ஆனால் அந்தக் கதைக்கும் இந்தக் கதைக்கும் துளியும் தொடர்பில்லை.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் எதிர்மறை பாதிப்புகள்தான் இந்தக் கதைக்கு அடித்தளம்.

நேர்மையான போலீஸ் அதிகாரி பாபி சிம்ஹா. பிரபலங்களின் போன் கால்களை ஒட்டுக்கேட்பது அவருக்கு இடப்பட்ட உத்தரவு. நேர்மை வேலைக்காகாது எனப் புரிந்து மெல்ல மெல்ல காசு பார்க்க ஆரம்பிக்கிறார்.

ஒரு நாள் அமைச்சரான எம்.எஸ்.பாஸ்கரின் போன்காலை ஒட்டுக் கேட்கும் பாபி, பாஸ்கரின் பணத்தை அபேஸ் செய்கிறார். இந்த வேலையைத் தொடர ஆரம்பிக்கிறார்.

பாபியின் காதல் மனைவி அமலா பால் ஃபேஸ்புக்கே கதி என கிடப்பவர். அமலா பால் பிறந்தநாளுக்கு தனது நண்பர்களை விருந்துக்கு அழைக்கிறார். அந்த நண்பர்களின் போன் கால்கள் மற்றும் அமலாபாலின் போன் நம்பரையும் ஒட்டுக் கேட்கிறார் பாபிசிம்ஹா. இதில் திருமணமான பெண்களிடம் மோசமாக பேசி வலைவிரிக்கும் பிரசன்னாவை நோட்டம் விடுகிறார்.

ஒரு நாள் பிரசன்னா, அமலா பாலிடம் பேசுவதையும் கேட்டு அதிர்ச்சியடையும் பாபி சிம்ஹா அவரை போலீஸ் வைத்து அடிக்கிறார். பாபி சிம்ஹா செய்யும் தில்லாங்கடி வேலைகள் பற்றிய தகவல்களை சேகரித்து அவரை பழிவாங்க முயற்சிக்கிறார் பிரசன்னா. இன்னொரு பக்கம் அமலா பாலை அடையவும் முயற்சிக்கிறார்.

பிரசன்னா அதில் ஜெயித்தாரா? பாபி சிம்ஹாவின் திருட்டுத்தனங்கள் அம்பலமானதா? பிரசன்னாவுக்கு பலியானாரா அமலா பால்? என்பது மீதி.

Thiruttupayale 2 review

திரைக்கதையில் திருட்டுப் பயலே அளவுக்கு 'கிக்' இல்லை என்றாலும், விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இடைவேளைக்குப் பிறகு பாபிக்கும் பிரசன்னாவுக்கும் இடையிலான பூனை - எலி கண்ணாமூச்சு சலிப்படைய வைக்கிறது. காட்சிகளையும் எளிதில் யூகிக்க முடிகிறது.

நேர்மையான போலீசாக இருந்து மெல்ல மெல்ல வழுவி, பணத்தாசை பிடித்த நல்ல திருட்டுப் பயலாக மாறும் வேடத்தை சரியாகவே செய்திருக்கிறார் பாபி சிம்ஹா. அவருக்கு சற்றும் சளைக்காத சைபர் கிரிமினலாக பிரசன்னா.

நடுத்தர குடும்பத்துப் பெண்கள் பேஸ்புக் அடிமைகளாக மாறும்போது என்ன நடக்கும் என்பதை அமலா பால் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அளவான கவர்ச்சி, இயல்பான நடிப்பு என சரியான கலவை.

எம்எஸ் பாஸ்கர், விவேக், ரோபோ சங்கர் என யாரும் மிகையாக நடிக்காதது ஆறுதல். சுசி கணேசன் எதற்கு வருகிறார் என்று அவருக்கே தெரியவில்லை போலிருக்கிறது.

செல்லத்துரையின் ஒளிப்பதிவு இதம். நீண்ட நாட்களுக்குப் பிறகு வித்யாசாகர். ஏமாற்றவில்லை, குறிப்பாக பின்னணி இசையில்.

சமூக வலைத் தளங்களின் எதிர்மறை பாதிப்புகளை ஓரளவு ஆராய்ச்சி செய்து, உண்மைக்கு வெகு நெருக்கமான திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர். இம்மாதிரி முயற்சிகள் இப்போதைய சூழலுக்கு அவசியமும் கூட.

English summary
Susi Ganesan's Amala Paul starrer Thiruttupayale 2 is watchable for its content.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil