»   »  தொடரி... விமர்சனம் #Thodari

தொடரி... விமர்சனம் #Thodari

Posted By:
Subscribe to Oneindia Tamil
Rating:
2.0/5
-எஸ் ஷங்கர்

நடிப்பு: தனுஷ், கீர்த்தி சுரேஷ், ராதாரவி, ஹரீஷ் உத்தமன், கருணாகரன்

ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன்


இசை: டி இமான்


தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ்


இயக்கம்: பிரபு சாலமன்


தமிழில் வரும் முதல் ரயில் படம் என்ற அறிவிப்போடு வந்துள்ள தொடரியின் முதலும் கடைசியுமான வித்தியாசம் தலைப்பில் மட்டும்தான். நல்ல தமிழில் ஒரு டைட்டில். ஆனால் ஒரு நல்ல படத்துக்கு தலைப்பு மட்டும் நன்றாக இருந்தால் போதாதே!


Thodari review | தொடரி... விமர்சனம்

டெல்லியிலிருந்து சென்னை வரும் ரயில். அதில் பேன்ட்ரி எனும் கேன்டீனில் வேலைப் பார்க்கும் தனுஷ், அந்த ரயிலில் பயணிக்கும் நடிகை ஒருவரின் டச் அப் பெண்ணான கீர்த்தி சுரேஷைப் பார்த்ததும் லவ்வுகிறார். கீர்த்திக்கு சினிமா பாடகியாகும் ஆசை. எனவே அவரைக் கவர வைரமுத்துவை எனக்குத் தெரியும் என்று பொய் சொல்லி காதலிக்கிறார். உண்மை தெரிந்து அந்த லவ் டமார் ஆகிறது.


அதே ரயிலில் மத்திய அமைச்சர் ராதாரவி, அவரது பாதுகாப்பு அதிகாரி ஹரீஷ் உள்ளிட்ட 700 பயணிகள் பயணிக்கிறார்கள். வழியில் ஒரு விபத்து. மாடு மீது ரயில் மோதிவிடுகிறது. இதில் தொடரியின் ஓட்டுநர்கள் ஆர்வி உதயகுமார், போஸ் வெங்கட்டுக்கிடையே மோதல். கோபத்தில் போஸ் வெங்கட்டை விட்டுவிட்டு ரயிலைக் கிளப்பிவிடுகிறார் ஆர்வி. ஒரு கட்டத்தில் ரயில் கட்டுப்பாட்டை இழந்து 140 கிமீ வேகத்தில் ஓட ஆரம்பிக்கிறது.


ரயில் பாதுகாப்பாக வந்ததா... பயணிகளும் பார்த்தவர்களும் தப்பித்தார்களா என்பது மீதிக் கதை.


Thodari review | தொடரி... விமர்சனம்

வித்தியாசமான கதைக் களம்தான். ஆனால் அதை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு சொதப்பியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.


முதல் பாதி முடியும் வரை என்ன கதை என்பதைக் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு ஏதாவது ஒரு சொகுசு தொடரியின் முதல் வகுப்பு டிக்கெட்டை பரிசாகத் தரலாம். இரண்டாவது பாதியில் கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் தனுஷைக் கட்டி ஒரு ரூமுக்குள் அடைத்துவிடுகிறார்கள். முதல் பாதி பாஸஞ்சரை விட படு ஸ்லோ என்றால், இரண்டாம் பாதியில் படுவேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயிலின் மேல் ஏறி கண்ணாமூச்சு விளையாடி கெக்கே பிக்கே பண்ணியிருக்கிறார்கள்.


படு செயற்கையான, எளிதில் கண்டுபிடித்துவிடக்கூடிய சிறுபிள்ளைத்தனமான சிஜி வேலைகள் கடுப்பேற்றுகின்றன. 'லாஜிக் மீறல்' என்ற பதத்துக்கே அர்த்தம் இந்தப் படத்தின் இரண்டாம் பாதி.


Thodari review | தொடரி... விமர்சனம்

தேசிய விருது நடிகர் தனுஷின் நடிப்பில் குறையில்லை. பூச்சியப்பனாகவே மாறியிருக்கிறார்.


சரோஜாவாக வரும் கீர்த்தி சுரேஷ் இப்போதே சுதாரித்துக் கொள்வது நலம். இல்லாவிட்டால் இன்னொரு லூஸ் ஹீரோயின் ஆக்கிவிட வாய்ப்புள்ளது.


ஹரீஷ் உத்தமன் நன்றாகவே வில்லத்தனம் செய்கிறார். படத்தின் ஒரே ஆறுதல் தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, கருணாகரன் கூட்டணியின் நகைச்சுவை. ஆனால் சீரியல் காட்சிகளையும் கோமாளித்தனமாக்கியிருப்பதில் எதுவுமே எடுபடாமல் போயிருக்கிறது.


இசை, பாடல்களில் இன்னும் கும்கி வாசனை. அந்த வட்டத்தை விட்டு இன்னும் வெளியில் வரவே இல்லை இமான்.


Thodari review | தொடரி... விமர்சனம்

இன்றைய சூழலில் இயக்குநர்களுக்கு கேட்ட வசதியெல்லாம் செய்து கொடுத்து நல்ல வாய்ப்புகளைத் தரும் தயாரிப்பாளர்கள் வாயப்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. முதல் காட்சியைப் படமாக்கத் தொடங்குவதிலிருந்து பூசணிக்காய் உடைக்கும் வரை இந்த உண்மையை மனதில் கொண்டு பிரபு சாலமன்கள் படம் பண்ணினால், தொடரி மாதிரி 'விபத்துகள்' தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது!

English summary
Thodari is another miss for actor Dhanush and Director Prabhu Solomon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil