»   »  துப்பறிவாளன் விமர்சனம்

துப்பறிவாளன் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

-எஸ் ஷங்கர்

Rating:
2.5/5

நடிகர்கள்: விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, வினய், கே பாக்யராஜ், ஆன்ட்ரியா

ஒளிப்பதிவு: கார்த்திக்

இசை: அரோல் கரோலி

தயாரிப்பு: விஷால் ஃபிலிம் ஃபேக்டரி

இயக்கம்: மிஷ்கின்

ஒவ்வொரு இயக்குநரும் தங்களுக்கென்று ஒரு பாணியை வைத்துக் கொள்வது, கடைப்பிடிப்பது வழக்கம்தான். தப்பில்லை. ஆனால் எல்லா படங்களிலும் ஒரே பாணியிலான காட்சியமைப்பையும் தொடர்வது பெரிய அலுப்பைத் தந்துவிடும். பெரிய படிப்பாளி மிஷ்கின், இந்த சாதாரண விஷயத்தைப் புரிந்து கொள்வது நல்லது.

Thupparivaalan Review

துப்பறிவாளனுக்குப் போகலாம்...

வின்சென்ட் அசோகன் பிறந்த நாளை மனைவி சிம்ரன் மற்றும் குழந்தைகளோடு கேக் வெட்டி கொண்டாடுகிறார். மகன் ஒரு பிறந்த நாள் பரிசு தரும்போது திடீரென மின்னல் தாக்குகிறது. வின்சென்ட் அசோகனும், ஒரு மகனும் அங்கேயே இறந்துவிடுகிறார்கள்.

அடுத்து போலீஸ் அதிகாரி ஆடுகளம் நரேன்... ஒரு மாலில் ஏதோ லேசாகக் குத்தியது போல உணர்கிறார். அடுத்த ஓரிரு நாளில் ஒரு மீட்டிங்கில் சரிந்து விழுந்து இறக்கிறார். அதில் மர்மம் இருப்பதாக நம்புகிறது போலீஸ். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஷெர்லக் ஹோம்ஸ் போல ஒரு அதி புத்திசாலி தனியார் துப்பறியும் நிபுணர் விஷால். கொஞ்சம் கிறுக்குத்தனம் உண்டு. எந்தக் கேஸாக இருந்தாலும் ஜஸ்ட் லைக் தட் துப்பறிந்து விடுவார். ஆனால் சவாலான கேஸ் எதுவும் வரவில்லையே என்ற கடுப்பில் இருக்கும் அவருக்கு, ஒரு சிறுவன் தன் நாய்க்குட்டியை யாரோ சுட்டுவிட்டதாகக் கூறி ஒரு கேஸைத் தருகிறான்.

Thupparivaalan Review

அந்த வழக்கை விசாரிக்க, அது வின்சென்ட் அசோகன் மரணம், நரேன் மர்ம மரணங்களின் முடிச்சுகளை அவிழ்க்கிறது. இந்த மரணங்களின் பின்னணியை, அதன் பின்னுள்ள பயங்கரங்களை விஷால் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது மீதி.

இங்கே நாம் எழுதியுள்ள இந்தக் கதை உங்களுக்கு தெளிவாகப் புரியும். ஆனால் மிஷ்கின் எடுத்துள்ள முழுப்படமும் இந்த அளவு தெளிவாக இல்லை. கொலைகளுக்கான காரணங்களை, மாட்டிக் கொள்ளும் போலீஸ் அதிகாரி அபிஷேக்கிடம் அடித்துக் கேட்கிறார்கள். ஆனால் அவர் சொல்வது எத்தனைப் பேருக்குப் புரிந்திருக்கும் என்பது மிஷ்கினுக்கே வெளிச்சம்.

ஆன்ட்ரியா - விஷால் மெகா சேஸ் எதற்காக... ? கடைசியில் ஆன்ட்ரியா ஜஸ்ட் லைக் தட் தப்பித்துப் போகிறார்.

ஹீரோ, வில்லன், வில்லனுக்கு கூட்டாளி என எல்லாருமே ஏதாவது ஒரு காட்சியில் தரையில் புரண்டு தவழ்கிறார்கள். அஞ்சாதே, யுத்தம் செய் பாணி சண்டைகள்தான் பெரும்பாலும், அந்த க்ளைமாக்ஸ் ஃபைட் தவிர.

நாயகனின் உடல் மொழி, ஹீரோ அமரும் நாற்காலி, அந்த நாற்காலி போடப்பட்ட கோணம், புத்தகங்களால் நிரம்பிய அந்த அறை, கேமரா கோணங்கள், ஷாட்கள், சண்டை முறைகள், சண்டையாளர்களின் ஸ்டைல்... என எல்லாமே மிஷ்கினின் பாணி. இந்த விஷயங்களில், தன் பழைய பாணி மாறிவிடக் கூடாது என்பதில் அத்தனை கவனம் செலுத்தியுள்ள மிஷ்கின், திரைக்கதை, தெளிவான காட்சியமைப்புகளிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். காட்சி உருவாக்கத்துக்கு தரும் முக்கியத்துவத்தை கதைக்கு தரக் கூடாது என்பதில் தீவிரவாக இருக்கிறார் மிஷ்கின். இன்னொன்று புத்தகத்தில் படித்த அனைத்தையும் திரையில் காட்டிவிட வேண்டும் என்ற அவரது முரட்டுப் பிடிவாதத்தை கொஞ்சம் தளர்த்திக் கொள்ளலாமே!

Thupparivaalan Review

முதல் பாதி ஜவ்வாய் இழுக்கிறது. இரண்டாம் பாதியில் க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில்தான் வேகமெடுக்கிறது. ஒவ்வொரு கொலைக்கும் காரணங்கள் வலுவாக இல்லாதது இன்னொரு மைனஸ்.

ஹீரோ விஷாலுக்குள் மிஷ்கின் புகுந்துவிட்டது முதல் காட்சியிலிருந்தே பளிச்சென்று தெரிகிறது. இதுவரை பார்த்த விஷால் அல்ல இவர். அந்த மாற்றம் பெரிய விஷயம்தான். அதுவும் அந்த கடைசி சண்டை... இரண்டு கால்களையும் கட்டிக் கொண்டு போடும் அந்த சண்டையில் பிரித்து மேய்ந்துவிட்டார் மனிதர்.
ஆனால் அந்தப் பெண்ணிடம் எப்போதும் கத்திக் கொண்டே இருப்பது கடுப்பாக்குகிறது.

வினய் பெரிய ஆச்சர்யம். கூல் ஆனால் கொடூர வில்லன். மிகக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். ஹீரோவாய் கோட்டை விட்டதை, வில்லனாய் வந்து ஜெயித்திருக்கிறார்.

அனு இம்மானுவேல் ஹீரோவுக்கு ஜோடியாக வரவில்லை. ஒரு பிக்பாக்கெட். கடைசியாக அவர் அடிக்கும் பிக்பாக்கெட்டுக்கு தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்.

பாக்யராஜா அது... அடையாளமே தெரியவில்லை. அவரது முடிவு இப்படித்தான் இருக்கும் என்பது முன்பே தெரிந்துவிடுகிறது. அடுத்து அவர் செய்யும் விஷயம் மனசைத் தொடுகிறது.

ஆன்ட்ரியா, ஜான் விஜய், நாய் கொலையை துப்பறிய தன் சேமிப்பு சில்லறைக் காசு பொட்டலத்தைக் கொண்டு வரும் அந்த சிறுவன் அனைவருமே கச்சிதமாக நடித்திருக்கிறார்கள். இரண்டு காட்சிகளில் வந்து போகிறார் சிம்ரன்.

விஷால் ஷெர்லக் ஹோம்ஸ் என்றால், வாட்சன் பாத்திரத்துக்கு ஒருவர் வேண்டுமல்லவா... அவர்தான் பிரசன்னா. நிறைவான நடிப்பு.

கார்த்திக்கின் ஒளிப்பதிவு விஷுவல் ட்ரீட். அரோல் கரோலி இசையில் இரண்டாம் பாதி விறுவிறுப்பாகிறது. நல்ல வேளை பாடல் எதையும் போட்டு கொல்லவில்லை.

எடிட்டர் கையை இறுக்கமாகக் கட்டிப்போட்டிருக்கிறார் மிஷ்கின் என்பது இடைவேளைக்கு முந்தைய காட்சிகளில் அப்பட்டமாகத் தெரிகிறது.

கடைசி 30 நிமிடக் காட்சிகள்தான் பரபர வென ஓடுகின்றன. அதற்காக முதல் 2 மணி 10 நிமிடங்களை உங்களால் பொறுத்துக் கொள்ள முடிந்தால், துப்பறிவாளன் வெற்றியாளனாகிவிடுவான்!

English summary
Review of Mysskin - Vishal's Thupparivaalan movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil